
ஓ.பி.எஸ்சிடம் இருந்து எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியை பறித்து எடப்பாடி பழனிசாமி அதிரடி காட்டியுள்ளார். இந்நிலையில் இவ்விவகாரத்தில் அடுத்து என்ன நடக்கும் என்பது குறித்து சபாநாயகர் அப்பாவு பதில் கூறியுள்ளார்.
திருநெல்வேலியில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களுக்குப் பேட்டிக் கொடுத்தார். அப்போது அவர் கூறுகையில், “சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமாரையும், துணைச் செயலாளராக அக்ரி கிருஷ்ணமூர்த்தியையும் நியமிக்க வேண்டும் என சட்டமன்ற கொறடா எஸ்.பி.வேலுமணி ஒரு கடிதத்தை கொடுத்துள்ளார். கடந்தவாரம் ஓ.பன்னீர் செல்வமும் இதேபோல் ஒருகடிதத்தை கொடுத்துள்ளார். வேலுமணி கொடுத்தக் கடிதத்தை இன்னும் நான் பார்க்கவில்லை.
சட்டமன்ற அலுவலகத்தில் இருக்கும் அந்தக் கடிதத்தைப் படித்த பின்பே சட்டவிதிகளின்படியும், சட்டமன்ற விதிகளின்படியும் நடவடிக்கை எடுக்கப்படும். என்னைப் பொறுத்தவரை சட்டமன்றத்தில் இருக்கும் அதிமுக எம்.எல்.ஏக்கள் 66 பேரும் இரட்டை இலைச் சின்னத்தில் வென்றவர்கள். யார் தலைவர், செயலாளர் என்பதை அவர்களுக்குள் பேசி முடித்துக் கொள்வார்கள். இதில் சட்டமன்றத் தலைவர் தலையிடும் மரபு இல்லை.
எதிர்க்கட்சித் துணைத் தலைவரை ஏன் நீக்கினார்கள்? ஏன் புதியவர்களை நியமிக்கிறார்கள் என அவர்கள் கொடுத்திருக்கும் கடிதத்தை படித்துப் பார்த்த பின்பே தெரியும். இவ்விசயத்தில் ஜனநாயக முறைப்படி ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.