ஆளுக்கொரு பக்கம் இழுப்பதால் அதிமுகவின் எதிர்காலம் என்ன ஆகும்?

ஆளுக்கொரு பக்கம் இழுப்பதால் அதிமுகவின் எதிர்காலம் என்ன ஆகும்?

அதிமுகவில் ஒற்றைத் தலைமை என்ற அணுகுண்டைப் பற்ற வைத்து, ஒரு மாத சலசலப்புகளுக்குப் பிறகு பொதுக்குழுவை கூட்டி ஒரு வழியாக கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக ஆகிவிட்டார் எடப்பாடி பழனிசாமி. ஆனால், “அந்தப் பொதுக்குழுவே செல்லாது என்றும் கட்சியில் ஒன்றரைக் கோடி தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருங்கிணைப்பாளர் - இணை ஒருங்கிணைப்பாளர் பதவியே இருக்கிறது” என்று இன்னொரு தர்மயுத்தத்துக்குத் தயாராகி வருகிறார் ஓ.பன்னீர்செல்வம்.

இன்னொரு பக்கம், “நானே கட்சியின் பொதுச்செயலாளர், நானே கட்சியை வழி நடத்துவேன்” என்று புரட்சிப் பயணம் மேற்கொடு வருகிறார் வி.கே. சசிகலா. பொதுச்செயலாளர், ஒருங்கிணைப்பாளர், இடைக்கால பொதுச்செயலாளர் என முக்கோண மோதலை அதிமுக சந்தித்து வரும் இந்தச் சூழலில் அதிமுகவின் எதிர்காலம் என்னவாகும்?

சுமார் ஐந்து ஆண்டுக் காலம் ஒரு தோப்புக் குயில்களாக இருந்த ஓபிஎஸ் -ஈபிஎஸ் தரப்பு ஒற்றைத் தலைமை விவகாரத்தால் எதிரும் புதிருமாக மாறிபோய்விட்டார்கள். ஜூலை 11 அன்று ஒற்றைத் தலைமை என்ற கிரீடத்தை சூடிக்கொள்ள ஈபிஎஸ் நாள் குறித்திருந்த வேளையில், கட்சியின் தலைமை அலுவலகத்தைக் கைப்பற்றி ஈபிஎஸ்சை திணறடித்தார் ஓபிஎஸ்.

ஈபிஎஸ் ஒற்றைத் தலைமையாக உருவெடுப்பதைத் தடுக்க ஓபிஎஸ்சுக்கு வேறு எந்தத் துரும்பும் கிடைக்கவில்லை. கட்சியின் மாவட்டச் செயலாளர்கள், தலைமைக்கழக நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள் என பெரும்பாலானவர்களை ஈபிஎஸ் தரப்பு வளைத்துவிட்ட நிலையில், நிராயுதபாணியாக நின்ற ஓபிஎஸ், ஒரு திட்டத்தோடு ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்துக்குச் சென்றார். ஒருபக்கம் பொதுக்குழு நடந்து கொண்டிருக்கும் சமயத்தில் கட்சி அலுவலகம் சென்றால் மோதல் ஏற்படும் என்பதும் அவருக்குத் தெரியும். ஆனாலும் சென்றார்.

எதிர்பார்த்ததைப் போலவே ஓபிஎஸ் - ஈபிஸ் ஆதரவாளர்களுக்கு இடையே அடிதடி, கலவரம் ஏற்பட, அதைக் காரணம் காட்டி அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சீல் வைத்துவிட்டது தமிழக அரசு. ஓபிஎஸ் எதிர்பார்த்ததும் இதைத்தான். அதிமுக பொதுச்செயலாளரான கையோடு தலைமை அலுவலகத்துக்கு வர நினைத்த ஈபிஎஸ்சை திமுக அரசின் உதவியோடு அப்படி வரவிடாமல் தடுத்துவிட்டார் ஓபிஎஸ் என்று பொருமுகிறார்கள் ஈபிஎஸ் ஆதரவாளர்கள்.

கடந்த 2017-ல் தர்மயுத்தம் நடத்திய போது ஓபிஎஸ்சுக்கு தொண்டர்கள் தரப்பிலும் பொதுமக்கள் தரப்பிலும் ஏகோபித்த ஆதரவு இருந்தது. ஆனால் அப்போதெல்லாம் கட்சி அலுவலகத்தைக் கைப்பற்ற நினைக்காத ஓபிஎஸ், இன்று அதைச் செய்துகாட்டியிருக்கிறார். ஒரு வகையில் ஈபிஎஸ்சை ஓபிஎஸ் முந்திக்காட்டிய ஒரே நிகழ்வு இதுதான். அலுவலகத்தைத் திறக்கும் விவகாரம் நீதிமன்றத்துக்கு சென்றுவிட்ட நிலையில், தற்போது ஓபிஎஸ்சும் ஈபிஎஸ்சும் மாறிமாறி எதிர்முகாம் ஆதரவாளர்களை நீக்கி வருகிறார்கள். ஒரு கட்சியில் பிளவு ஏற்பட்டுவிட்டது என்பதற்கான அறிகுறிகள்தான் இவையெல்லாம். அடுத்தக்கட்டமாக அதிமுக தங்களுக்குத்தான் சொந்தம் என்று தேர்தல் ஆணையத்தில் இரு தரப்பும் முட்டி மோதிக்கொள்ளும்.

அதிமுகவின் பொன் விழா ஆண்டில் அக்கட்சியின் தலைமை அலுவலகம் மூடிச் சீல்வைக்கப்பட்டுக் கிடக்கிறது. இதேபோல் 1988-லும் ஜானகி - ஜெயலலிதா அணிகள் மோதலால் கட்சி அலுவலகம் சீல் வைக்கப்பட்டது. அப்போது 8 மாதங்களுக்கு மேல் கட்சி அலுவலகம் திறக்கப்படாமலேயே இருந்தது. 1989 சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகுதான் அணிகள் இணைந்து கட்சி அலுவலகம் திறக்கப்பட்டது. 1991-ல் ஜெயலலிதா - திருநாவுக்கரசர் இடையே மோதல் ஏற்பட்டபோதும் கட்சி அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டது. அப்போது தேர்தல் ஆணையத்தின் மூலமே பிணக்குகள் தீர்க்கப்பட்டு கட்சி ஜெயலலிதா வசமானது. தற்போது கட்சி அலுவலகம் சீல் வைக்கப்பட்ட விவகாரத்தில் நீதிமன்றம் முடிவு எடுக்குமா அல்லது விவகாரத்தை தேர்தல் ஆணையத்தில் தீர்த்துக்கொள்ள சொல்லுமா என்பதும் கேள்விக்குறியாக மாறியிருக்கிறது.

இனி அதிமுகவில் தன்னுடைய ராஜ்ஜியம்தான் என்று சொல்லும் அளவுக்கு ஈபிஎஸ் காய்களை நகர்த்தி வருகிறார். அதிமுகவின் பெரும்பாலான கட்சி நிர்வாகிகளின் ஆதரவுடன் ஈபிஎஸ் இடைக்கால பொதுச்செயலாளர் ஆகியிருந்தாலும், அந்தப் பதவியை நிரந்தரமாக்கும் முயற்சியிலும் ஈபிஎஸ் ஈடுபட்டிருக்கிறார். 4 மாதங்களில் தேர்தலை நடத்த பொதுக்குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளது. அப்போது தன்னை எதிர்த்து யாரும் போட்டியிடக் கூடாது என்பதற்காக பொதுச்செயலாளர் பதவிக்குப் போட்டியிடுவோரை 10 மாவட்டச் செயலாளர்கள் முன்மொழிய வேண்டும்; 10 மாவட்டச் செயலாளர்கள் வழிமொழிய வேண்டும் என்ற புதிய விதிமுறையை கட்சிக்குள் புகுத்தியிருக்கிறார் ஈபிஎஸ். இதன் மூலம் எம்ஜிஆர், ஜெயலலிதா போல தானும் போட்டியின்றி தேர்வாக ஈபிஎஸ் கணக்குப் போடுகிறார். ஆனால், இந்தப் பொதுக்குழுவே செல்லாது என்று ஓபிஎஸ் ஒருபுறமும், ஓபிஎஸ் - ஈபிஎஸ் என இருவருக்குமே பொதுக்குழுவை கூட்ட அதிகாரம் இல்லை என்று சசிகலா இன்னொருபுறமும் எரியும் நெருப்பில் பெட்ரோல் ஊற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

அதிமுகவில் உட்கட்சி நிலவரம் கலவரமாகிக் கிடப்பதைக் கண்டு கட்சியின் எதிர்காலம் குறித்து கவலையில் ஆழ்ந்துகிடக்கிறார்கள் பிரதிபலனை எதிர்பார்க்காமல் கட்சிக்காக உழைத்த ரத்தத்தின் ரத்தங்கள். கருணாநிதி மறைவுக்குப் பிறகு திமுகவிலும் ஸ்டாலின், அழகிரி, கனிமொழியால் கட்சிக்குள் பிளவு ஏற்படும் என்று பேசப்பட்டது. ஆனால், ஸ்டாலின் தலைமையில் கட்சி ஒருமுகமாகிவிட்டது. அடுத்ததாக உதயநிதி என்று சொல்லும் அளவுக்கு திமுகவில் துண்டு போட்டு வைத்திருக்கிறார்கள். ஆனால், அதிமுகவில் ஜெயலலிதா மறைந்து 5 ஆண்டுகளைக் கடந்துவிட்ட நிலையிலும், இன்னும் கட்சி ஒருமுகமாக மாறவில்லை; மாறவும் முடியவில்லை.

இப்போது அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் என்று ஈபிஎஸ் தன்னை சொல்லிக்கொண்டாலும், ஒருபுறம் ஓபிஎஸ் ஒருங்கிணைப்பாளராகவும் சசிகலா பொதுச்செயலாளராகவுமே பொதுவெளியில் அரசியல் செய்துகொண்டிருக்கிறார்கள். இது போதாது என்று, டிடிவி தினகரன் வேறு அமமுக என்ற ஒரு கட்சியையும் நடத்தி வருகிறார். அவர் பெறுவது குறைந்த வாக்குகளாக இருந்தாலும் அதெல்லாம் அதிமுக வாக்குகள். கடந்த காலங்களில் இரட்டை இலையை வீழ்த்துவது என்பது சுலபமான காரியமாக இருந்தது இல்லை. ஆனால், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக வெற்றிபெற முடியாத அளவுக்கு தேர்தல் களத்தில் அதிமுகவை திமுக முந்திக்கொண்டிருக்கிறது.

“2021 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக அணிக்கும் அதிமுக அணிக்கும் இடையேயான வாக்கு வித்தியாசம் 3 சதவீதம்தான். துரோகிகளால்தான் தோற்றோம்” என்று ஓபிஎஸ்சை மறைமுகமாகக் குறிப்பிட்டு ஈபிஎஸ் இப்போதும் பேசுகிறார். ஆனால், அந்தத் தேர்தலில் டிடிவி தினகரனின் அமமுக அணி பெற்றது 2.80 சதவீத வாக்குகள். 2019 மக்களவைத் தேர்தலில் சுமார் 5 சதவீத வாக்குகளை டிடிவி தினகரன் பெற்று அதிமுகவுக்கு சேதாரத்தை ஏற்படுத்தினார்.

முன்பு சசிகலா - டிடிவி தினகரனை அதிமுகவிலிருந்து ஈபிஎஸ் ஓரங்கட்டியது போல இன்று ஓபிஎஸ்சையும் அவருடைய ஆதரவாளர்களையும் ஈபிஎஸ் ஓரங்கட்டிவிட்டார். நாளை தேர்தல் ஆணையம் வரை சென்று தாங்கள்தான் அதிமுக என்பதை ஈபிஎஸ் அணி நிலை நாட்டலாம். அதற்கான வாய்ப்புகளே அதிகம். அதிமுக முழுமையாக ஈபிஎஸ் கைக்குள் சென்றுவிட்டாலும், அதற்காக ஓபிஎஸ் அரசியல் சன்னியாசம் பூண்டுவிடுவார் என்றெல்லாம் எதிர்பார்க்க முடியாது. அதிமுகவுக்குள் சேதாரத்தை ஏற்படுத்தி, தன்னுடைய முக்கியத்துவத்தை உணர்த்தவே செய்வார். ஒருவேளை, டிடிவி தினகரன் போல அவரும் ஜெயலலிதா பெயரில் புதிய கட்சியைத் தொடங்கலாம். அந்தக் கட்சிக்கு எத்தகைய வரவேற்பு இருக்கும் என்பதை ஊகிக்க முடியாது என்றாலும், அதனால் ஏற்படும் சேதாரம் என்னவோ அதிமுகவைத்தான் பாதிக்கும். அது மறைமுகமாக அதிமுகவின் வெற்றிக்குத் தடையாகவே இருக்கும். அதிமுகவில் தற்போது நடக்கும் நிகழ்வுகள், அதுபோன்ற ஒரு சூழலை நோக்கிதான் சென்றுகொண்டிருக்கிறது.

ஓர் அரசியல் கட்சியின் எதிர்காலமே அது தேர்தலில் பெறும் வெற்றியைப் பொறுத்துதான் அமையும். கட்சிக்கு கேப்டன் எவ்வளவு முக்கியமோ, அதுபோல தேர்தல் வெற்றியும் அந்த கேப்டனுக்கு முக்கியம். வெற்றியைப் பெற்று தராத கேப்டனுக்கு எங்கும் மதிப்பு இருக்காது. அதிமுகவில் கேப்டன் பதவிக்கான ரேஸில் ஈபிஎஸ் வென்றிருந்தாலும், 2024 தேர்தலில் பெற்று தரும் வெற்றியைப் பொறுத்துதான் அவருடைய தலைமைத்துவத்துக்கான அங்கீகாரம் தொண்டர்களிடம் இருந்து கிடைக்கும். ஆனால், ஈபிஎஸ் பலம் பெறக்கூடாது என்று நினைக்கும் ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் போன்றவர்கள் வெளியில் இருந்து செயல்படும் வரை, அது ஈபிஎஸ்சுக்கு சவாலாகவே இருக்கும். அது அதிமுகவின் எதிர்காலத்துக்கும் அமிலச் சோதனையாகவே அமையும்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in