கூடுகிறது சட்டமன்றம்... இந்த ஆண்டு என்ன செய்யப் போகிறார் ஆளுநர்?

சட்டமன்றத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி
சட்டமன்றத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி

பிப்ரவரி 12-ல் தமிழக சட்டமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குகிறது. அன்றைய தினம் பேரவையில் உரை நிகழ்த்த வேண்டிய ஆளுநர் ஆர்.என்.ரவி, அவசரப் பயணமாக டெல்லி சென்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்துத் திரும்பி இருக்கிறார். அதனால் இந்த ஆண்டு ஆளுநர் உரையின்போது என்ன களேபரம் நடக்கப் போகிறதோ என்ற எதிர்பார்ப்பு அதிகமாகி இருக்கிறது.

மேற்கு வங்கம், கேரளம், தமிழ்நாடு என எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் எல்லாம் ஆளுநர் - ஆளும் கட்சி மோதல்கள் தொடர்கதையாகி வருகின்றன. சர்ச்சைக்குரிய கருத்துகளை பேசுவது, சட்ட மசோதாக்களை நிறுத்திவைப்பது, தனியாக ஆய்வுக்குச் செல்வது, மாநில அரசின் நியமனங்களை நிறுத்திவைப்பது என முடிந்த வழிகளில் எல்லாம் ஆளுநர்கள் ஆளும் அரசுக்கு குடைச்சல் கொடுத்துக்கொண்டே இருக்கிறார்கள்.

தமிழகத்தில் 2021 செப்டம்பர் 18-ம் தேதி ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்றதிலிருந்தே, அவருக்கும் ஆளும் திமுக அரசுக்கும் ஏழாம் பொருத்தமாக இருக்கிறது. ஆளுநரின் செயல்பாடுகளால் கடுகடுப்பில் இருக்கும் திமுக அவரை மாற்ற வேண்டுமென தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. இதை மக்களவையிலேயே திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் டி.ஆர்.பாலு வலியுறுத்திப் பேசினார். அத்துடன், ஆளுநரை மாற்றக் கோரி திமுக எம்பி-க்கள் குடியரசு தலைவர் மாளிகைக்கே மனுவுடன் போனார்கள்.

சட்டமன்றத்தில் உரை நிகழ்த்தும் ஆளுநர்
சட்டமன்றத்தில் உரை நிகழ்த்தும் ஆளுநர்

ஆளுநர் ஆர்.என். ரவிக்கு, திமுக அரசின் திராவிட மாடல் குறித்த பெருமிதம், இருமொழிக் கொள்கை, இந்தி எதிர்ப்பு, புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பு, சனாதன எதிர்ப்பு இதிலெல்லாம் உடன்பாடில்லை. அதனால் வாய்ப்புக் கிடைக்கும் இடங்களில் எல்லாம் இவற்றுக்கு எதிராகப் பேசுகிறார். அவர் அப்படிப் பேசுவது தமிழக அரசை மறைமுகமாக தாக்குவதாகவே இருக்கிறது.

இந்த மோதலின் உச்சமாக, கடந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடரின் முதல் நாளில் ஆளுநர் நடந்துகொண்ட விதத்தைச் சொல்லலாம். அப்போது, அரசின் சார்பில் தயாரிக்கப்பட்ட உரையின் சில பகுதிகளை வாசிப்பதைத் தவிர்த்த ஆளுநர், அதில் இல்லாத சில விஷயங்களை தன்னுடைய கருத்தாக சேர்த்துப் படித்தார். இதற்கு அவைக்குள்ளேயே திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பேரவையை விட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி கோபத்துடன் வெளிநடப்பு செய்தார். அதனால், அரசு தயாரித்தளித்த உரையில் உள்ளது மட்டுமே அவைக்குறிப்பில் இடம்பெறும் என்று  முதல்வர் ஸ்டாலின் தீர்மானம் கொண்டுவந்தார்.

சட்டமன்றத்தில் இருந்து வெளியேறும் ஆளுநர்
சட்டமன்றத்தில் இருந்து வெளியேறும் ஆளுநர்

அதன் பின்னரும் இருதரப்பும் ஆவேசத்தை அடக்கவில்லை. ஒருகட்டத்தில், ஆளுநருக்கு புத்தி சொல்லும்படி உச்ச நீதிமன்றத்தின் கதவுகளை தட்டியது திமுக. அந்த வழக்கில், ஆளுநரின் அதிகாரங்கள் குறித்து கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம், ஆளுநருக்கு சில அறிவுரைகளையும் வழங்கியது. இதைத் தொடர்ந்து ஆளுநரும் முதல்வரும் சந்தித்துப் பேசினார்கள். இதன் விளைவாக, மாதக் கணக்கில் கிடப்பில் வைத்திருந்த சில மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்தார் ஆளுநர். முந்தைய தனது முடிவுகள் சிலவற்றைத் திரும்பப் பெற்றார்.

இதன் பிறகு, ஆளுநர்- ஆளும் கட்சி மோதல் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும் புகைச்சல் ஓயவில்லை. அண்மையில் மகாத்மா காந்தியை சிறுமைப்படுத்தும் விதமாக ஆளுநர் ரவி பேசியது பெரும் சர்ச்சையானது.

இத்தகைய சூழலில், இந்த ஆண்டின் பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 12-ம் தேதி தொடங்குகிறது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் பேரவையில் ஆளுநர் உரை இடம் பெறும். அன்றைய தினம் அவர் என்ன செய்யப்போகிறாரோ என்று தமிழ்நாடு பரபரத்துக் கிடக்கிறது. கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான் இந்த ஆண்டின் முதல் பஞ்சாயத்தை பற்றவைத்திருப்பதுதான் அந்த பரபரப்புக்குக் காரணம்.

கேரள ஆளுநர் முகமது ஆரிப்கான்
கேரள ஆளுநர் முகமது ஆரிப்கான்

கேரள சட்டப் பேரவையில் அம்மாநில ஆளுநர் ஆரிஃப் முகமது கான் 1.17 நிமிடத்தில் ஆளுநர் உரையை வாசித்துவிட்டு வெளியேறினார். அவையில் அவர், "நான் இப்போது கடைசிப் பாராவைப் படிக்கிறேன்" என்றார். கேரள ஆளுநரின் இந்தச் செயல் கேரள அரசியலில் மட்டுமல்லாது தேசிய அளவிலும் விவாதமானது. 

கேரள ஆளுநரின் செயல்பாட்டையும் உள்வாங்கி இருக்கும் தமிழக ஆளுநர் அதே பாணியில் தமிழக சட்டமன்றத்திலும் அதிரடி காட்டலாம் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. ஆனால், கடந்த முறை ஆளுநரை சீண்டியதைப் போல் இல்லாமல் இம்முறை ஆளும் கட்சியினர் அமைதிகாப்பார்கள் என்கிறார்கள்.

கடந்த ஆண்டு ஆளுநரை சபைக்குள் ஆளுநரை உடல்மொழியால் விமர்சித்த அமைச்சர் பொன்முடி, இப்போது சிறைத் தண்டனைக்கு உள்ளாகி சபைக்குள் வரமுடியாத சூழலில் இருக்கிறார். இதையும் தேர்தலையும் மனதில் வைத்து திமுக இம்முறை அடக்கி வாசிக்கவே நினைக்கும். ஆனால், அதை ஆளுநர் தனக்குச் சாதகமாக எடுத்துக்கொண்டு வில்லங்கமாக எதையாவது கிளப்பினால் இம்முறையும் அவையில் எதுவும் நடக்கலாம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in