கேரள இடைத்தேர்தலில் டெபாசிட் இழந்த பாஜக: தொடரும் நிலைக்கு என்ன காரணம்?

பாஜக வேட்பாளர் ராதாகிருஷ்ணன்
பாஜக வேட்பாளர் ராதாகிருஷ்ணன்

கேரளத்தின் திருக்காக்கரைத் தொகுதியில் பாஜக டெபாசிட் இழந்துள்ளது. பலகட்ட பிரச்சாரங்களை மேற்கொண்டும் கேரள சட்டசபையில் காலூன்ற முயன்ற பாஜகவின் கணக்கு தகர்ந்துள்ளது.

கேரள மாநிலத்தின் திருகாக்கரை தொகுதி எம்எல்ஏவும், கேரள மாநில காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவருமான பி.டி.தாமஸ் (70) அண்மையில் காலமானார். இதையடுத்து திருக்காக்கரை தொகுதிக்கு இடைத்தேர்தல் மே 31-ம் தேதி நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது. இதில் ஆளும் மார்க்சிஸ்ட் கட்சியை வீழ்த்தியது காங்கிரஸ்.

காங்கிரஸ் கட்சியின் உமா தாமஸ் 72,770 வாக்குகளும், மார்க்சிஸ்ட் வேட்பாளர் ஜோ ஜோசப் 47,754 வாக்குகளும், பாஜக வேட்பாளர் ஏ.என்.ராதாகிருஷ்ணன் 12,957 வாக்குகளும் பெற்றுள்ளனர். காங்கிரஸ் வேட்பாளர் உமா தாமஸ், 25,016 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.

இந்தத் தேர்தலில் பாஜகவின் ஏ.என்.ராதாகிருஷ்ணன் கடுமையான பிரச்சாரத்தை மேற்கொண்டார். அதுமட்டுமின்றி ஜனப்க்சன் கட்சியின் பி.சி.ஜார்ஜும் பாஜகவுக்கு ஆதரவு கொடுத்து பிரச்சாரம் செய்தார். ஆனாலும் பாஜக 12,957 வாக்குகள் மட்டுமே பெற்றது. இது கடந்த தேர்தலில் திருக்காக்கரைத் தொகுதியில் பாஜக பெற்ற வாக்குகளைவிட 2526 வாக்குகள் குறைவாகும்.

பாஜக கேரள மாநிலத் துணைத் தலைவராக இருக்கும் ஏ.என்.ராதாகிருஷ்ணன் பதிவான மொத்த வாக்குகளில் 9.57 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றார். பதிவான மொத்த வாக்குகளில் ஆறில் ஒருபங்கை பெற்றால் மட்டுமே வைப்புத் தொகை திரும்பக் கிடைக்கும். அந்தவகையில் டெபாசிட்டைப் பெற 22,558 வாக்குகள் தேவை. ஆனால் பாஜக 12,957 வாக்குகள் மட்டுமே பெற்றது. இதனால் அக்கட்சியின் டெபாசிட் காலியானது. முன்னதாக முந்தைய 2021 பொதுத்தேர்தலிலும் பாஜக திருக்காக்கரைத் தொகுதியில் டெபாசிட் இழந்தது.

2016-ம் ஆண்டு திருக்காக்கரைத் தொகுதியில் 15 சதவீத வாக்குகளை பெற்ற பாஜக, கடந்த 2021-ம் ஆண்டு தேர்தலில் 11.34 சதவீத வாக்குகளைப் பெற்றது. இந்த இடைத்தேர்தலில் அதில் இருந்தும் வாக்கு சதவீதம் குறைந்து 9.57 ஆக சுருங்கியுள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டு சபரிமலை விவகாரத்தைப் பெரிதாகக் கையில் எடுத்து களம் ஆடியது பாஜக. ஆனால் அப்போது நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு எதிராக முடிந்த சபரிமலை விவகாரம் காங்கிரஸ் கட்சிக்கு பெரிய அளவில் கைகொடுத்தது. கேரளத்தில் மொத்தமுள்ள 20 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 19 நாடாளுமன்றத் தொகுதிகளில் வென்றது. அதேபோல் இப்போதும், கேரளத்தில் ஆளும் மார்க்சிஸ்ட் கட்சி கொண்டுவர முயலும், ‘கே ரயில்’ திட்டத்திற்கு எதிராக பாஜக கடும் போராட்டங்களை முன்னெடுத்தது. அது மார்க்சிஸ்ட் கட்சியைப் பலவீனப்படுத்தி, காங்கிரஸ் கட்சிக்கே வெற்றியைக் கொடுத்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in