அதிமுக செயலாளராக இளங்கோவன் நியமிக்கப்பட்ட பின்னணி என்ன?

ரகசியமாக வைக்கப்பட்ட வேட்புமனு தாக்கல்
அதிமுக செயலாளராக இளங்கோவன் நியமிக்கப்பட்ட பின்னணி என்ன?

தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளராக உள்ளார். கூடவே சேலம் புறநகர் மாவட்டச் செயலாளர் பதவியும் வகித்து வந்தார். தற்போது நடைபெறும் அதிமுக உட்கட்சி தேர்தலில் சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் பதவிக்கு சேலம் ஓமலூரில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி மனு தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து யாரும் போட்டியிடாததால் சேலம் புறநகர் மாவட்ட செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இச்சூழலில் சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் இளங்கோவன் சேலம் புறநகர் மாவட்டச் செயலாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

வேட்புமனுவே தாக்கல் செய்யாத இளங்கோவன் சேலம் புறநகர் மாவட்ட செயலாளராக அறிவிக்கப்பட்டிருப்பது அதிமுக வட்டாரத்தில் ‘ஹாட் டாப்பிக்காக’ உள்ளது. என்ன தான் நடக்கிறது சேலம் மாவட்ட அதிமுகவில் என்பது குறித்து அக்கட்சி நிர்வாகிகளிடம் கேட்டபோது, முதல்வர், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளராக இருந்தபோதும் சேலம் புறநகர் மாவட்டச் செயலாளர் பதவியை மட்டும் எடப்பாடி பழனிசாமி விட்டுக் கொடுக்கமாட்டார். ஏனெனில் எடப்பாடி சிலுவம்பாளையம் கிளை கழச் செயலாளர் பதவியில் இருந்து படிப்படியாக சேலம் வடக்கு மாவட்டச் செயலாளர், ஒருங்கிணைந்த சேலம் மாவட்டச் செயலாளர், கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர், அமைப்புச் செயலாளர் தற்போது கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் என உயர்ந்தவர். பல பொறுப்புகளை வகித்தாலும் இவற்றுக்கு அடிப்படை சேலம் மாவட்ட பொறுப்பை தான்.

கட்சியின் பொதுச்செயலாளர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின் கட்சிக்குள் ஏகப்பட்ட மாற்றங்கள் செய்யப்பட்டன. அப்போது சேலம் மாவட்ட அதிமுகவிலும் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி சேலம் புறநகர் மாவட்டம் உருவாக்கப்பட்டது. அதன் செயலாளராக எடப்பாடி பழனிசாமி இருந்தார். தற்போது கட்சியின் பொதுச்செயலாளர் ஆவதற்கான காய் நகர்த்தல்களை எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டு வருகிறார். அதனால் தனக்கு நம்பிக்கைக்கு உரிய ஒருவரை சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் பொறுப்பில் உட்கார வைக்க எடப்பாடி பழனிசாமி நினைத்தார். இந்த விஷயம் வெளியே தெரிந்தால் போட்டிக்கு பலர் வந்துவிடுவர் என்பதால் எடப்பாடி பழனிசாமி மட்டும் மனு தாக்கல் செய்தார்.

பெத்தநாயகன்பாளையம் இளங்கோவன் போட்டியிட்ட விவரத்தை வெளியே சொல்லவில்லை. ரகசியமாக வைத்து தற்போது இளங்கோவன் புறநகர் மாவட்ட செயலாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஜெயலலிதா இருந்தபோதும் அவர் மறைவுக்குப் பின்னரும் எடப்பாடியின் நம்பிக்கைக்குரியவராக இளங்கோவன் உள்ளார். அதனால் இப்பதவி அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. தவிர, சேலம் புறநகர் மாவட்டத்தில் அதிமுகவுக்கு ஏராளமான சொத்துகள் உள்ளன. ஓமலூரில் உள்ள அதிமுக பிரம்மாண்ட கட்சி அலுவலகம் இளங்கோவன் மூலம் மேற்கொள்ளப்பட்டது. இவற்றை தக்க வைப்பதற்காகவும் இளங்கோவனுக்கு பதவி வழங்கப்பட்டுள்ளது.

அதேவேவையில் எடப்பாடி பழனிசாமி கட்சியின் மேலிட பதவிக்கு சென்றாலும் சொந்த மாவட்டத்தில் கட்சியை தனது கன்ட்ரோலில் இருக்க இளங்கோவன் தான் சரியான நபர் என எடப்பாடி பழனிசாமி கருதுகிறார். அதனால் சேலம் புறநகர் மாவட்ட செயலாளராக இளங்கோவன் இருந்தாலும் எடப்பாடி பழனிசாமி தான் மாவட்டச் செயலாளர், என ஒரே மூச்சில் கூறி முடித்தனர். சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் பொறுப்பு இளங்கோவனுக்கு கைமாற்றப்பட்டதை, மாப்பிள்ளை அவர் தான் ஆனால் அவர் போட்டிருக்கும் பேண்ட் சட்டை என்னுது என்ற காமெடியை சேலம் மாவட்ட அதிமுகவினர் நினைவுபடுத்தி சிரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in