முன்னாள் அமைச்சர் காமராஜ் வீட்டில் நடந்த சோதனையில் சிக்கியது என்ன?- பட்டியல் போட்டது லஞ்ச ஒழிப்புத்துறை!

முன்னாள் அமைச்சர் காமராஜ் வீட்டில் நடந்த சோதனையில் சிக்கியது என்ன?- பட்டியல் போட்டது லஞ்ச ஒழிப்புத்துறை!

அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் சொந்தமான 52 இடங்களில் நடைபெற்ற சோதனையில் 41 லட்சம் பணம், 963 சவரன் தங்க நகை, 24 கிலோ வெள்ளி மற்றும் ஆவணங்கள் கண்டுபிடிப்பிக்கப்பட்டுள்ளது. கணக்கில் வராத 15.50 லட்சம் பணத்தை லஞ்ச ஒழிப்புத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

அதிமுக ஆட்சியின் போது உணவுத்துறை அமைச்சராக இருந்த காமராஜ் மற்றும் அவருக்கு தொடர்புடைய 52 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் பனையூர், அடையார், மைலாப்பூர், போயஸ் கார்டன், நீலாங்கரை உட்பட 6 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். முன்னாள் அமைச்சர் காமராஜ் கடந்த 2011-ம் ஆண்டு முதல் தற்போது வரை நன்னிலம் தொகுதி சட்டமன்ற தொகுதி உறுப்பினராக உள்ளார். கடந்த 2011-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை அதிமுக ஆட்சி காலத்தில் உணவுத்துறை அமைச்சராக இருந்த காமராஜ் கூடுதல் பொறுப்பாக ஓராண்டு இந்து அற நிலையத்துறை அமைச்சராகவும் பணியாற்றினார்.

2015-2021-ம் ஆண்டு அமைச்சராக பதவி வகித்த போது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பதாக காமராஜ், அவரது மகன்கள் இனியன், இன்பன் மற்றும் அவரது நண்பர்கள் சந்திரசேகரன், உதயகுமார், கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட ஆறு பேர் மீது திருவாரூர் லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குபதிவு செய்தனர். குறிப்பாக, காமராஜ் தான் முறைகேடாக சம்பாதித்த பணத்தை அவரது நண்பர்கள் உதயகுமார், கிருஷ்ணமூர்த்தி மற்றும் சந்திரசேகர் மூலமாக சொத்துகளை வாங்கி குவித்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. கடந்த 2007-ம் ஆண்டு சட்டவிரோதமாக அவரது நண்பர்கள் மூலமாக தஞ்சாவூரில் உள்ள NARC ஹோட்டல் பிரைவேட் லிமிடெட் என்ற சொத்துகளை வாங்கி கட்டுமான தொழில் செய்த வருமானத்தை மறைத்ததும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதேபோல தனது மகன்கள் நடத்தும் வாசுதேச பெருமாள் ஹெல்த் கேர் என்ற நிறுவனத்தை முறைகேடாக வாங்கி நடத்தி வருவதும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். சுமார் 27 கோடியே 25 லட்சத்து 8350 ரூபாய் வரை முறைகேடாக சம்பாதித்த பணத்தை வைத்து காமராஜ் சொத்துகள் குவித்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.

கடந்த 2015-ம் ஆண்டு காமராஜ் குடும்பத்தினர் மற்றும் அவரது நண்பர்கள் பெயரில் இருந்த சொத்துகளின் மதிப்பு ஒரு கோடியே 39 லட்சத்து 54 ஆயிரத்து 290 ரூபாய். ஆனால் 2021-ம் ஆண்டு முடிவில் 60 கோடியே 24 லட்சத்து 50 ஆயிரத்து 39 ரூபாய் அளவாக சொத்துகள் உயர்ந்திருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2015-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் காமராஜ் உட்பட 6 பேரின் வருமானம் 12 கோடியே 99 லட்சம் லட்சமாக இருந்துள்ளதாகவும், செலவு செய்த தொகை 12 கோடியே 59 லட்சம் என லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.

இதை வைத்து பார்க்கும் போது காமராஜ் மற்றும் அவரது நண்பர்கள் பெயரில் வருமானத்திற்கு அதிகமாக 58.85 கோடி ரூபாய் சொத்துகள் குவித்திருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர். இன்று மாலை வரை நடைபெற்ற

சோதனையில் பணம் ரூ.41,06,000, தங்க நகைகள் 963 சவரன், 23,960 கிராம் வெள்ளி, ஐபோன், கணினி, பென் டிரைவ், ஹார்ட் டிஸ்க் மற்றும் ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டு, அதில் கணக்கில் வராத பணம் ரூ.15,50,000 வங்கி பெட்டக சாவி, ஐகோன், கணினி, பென் டிரைவ், ஹார்ட் டிக்ஸ் மற்றும் வழக்கிற்கு தொடர்புடைய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in