தாமரை மலர என்ன செய்ய வேண்டும் தமிழக பாஜக?

தாமரை மலர என்ன செய்ய வேண்டும் தமிழக பாஜக?
USER

பாரதிய ஜனதா கட்சியின் 42-வது நிறுவன நாள் விழா டெல்லியில் கோலாகலமாக நடந்திருக்கிறது. விழாவில் பேசிய பிரதமர் மோடி, “இந்த ஆண்டு நமக்கு மிக முக்கியமானது. நாடு சுதந்திரம் பெற்ற 75-வது ஆண்டில் நான்கு மாநிலங்களில் ஆட்சியைத் தக்க வைத்ததுடன், ராஜ்யசபாவில் 100 உறுப்பினர்களுக்கு மேல் உள்ள கட்சி என்ற பெருமையை எட்டியுள்ளோம்” என்று பெருமிதத்துடன் சொல்லியிருக்கிறார்.

ஏதோ அண்டை நாட்டு சுதந்திர தின விழாவில் அந்நாட்டு தலைவர் பேசியதுபோல, இந்த நிகழ்வை தமிழக பொதுஜனம் கண்டும் காணாமல் கடந்து போயிருக்கிறது.

பாஜக தமிழ்நாட்டைக் குறிவைத்துவிட்டது என்றார்கள், அண்ணாமலை அடித்து ஆடுகிறார் என்றார்கள். ஆனாலும், தமிழ்நாட்டில் பெரிய அதிர்வலைகளை அக்கட்சியால் ஏற்படுத்த முடியவில்லை. மொத்தமே 4 எம்எல்ஏ-க்கள்தான். ஒரே நாடு ஒரே தேர்தல் என்று வந்தால்கூட பாஜக-வால் தமிழகத்தில் பெரிதாக சோபிக்க முடியுமா என்று தெரியவில்லை. சரி, பாஜக தமிழ் நாட்டில் வளர்ச்சி பெற எதுவெல்லாம் தடையாக இருக்கிறது... அக்கட்சி இனி என்ன செய்ய வேண்டும்?

பெட்ரோல் விலை

தமிழக மக்களைப் பொறுத்தவரைவில் பாஜகவை தேசியக் கட்சியாக அல்ல, டெல்லி கட்சியாகவே பார்க்கிறார்கள். வடமாநில நலன் சார்ந்தே கட்சியும், ஆட்சியும் இயங்குகிறது என்ற எண்ணம் மக்கள் மனதில் ஊறிப்போயிருக்கிறது. மாநில தலைவர் அண்ணாமலையின் செயல்பாடுகள் தமிழகத்தின் சிறந்த எதிர்க்கட்சியாக பாஜகவை காட்டுகிறது என்றாலும்கூட, விவரமானவர்கள் பாஜகவும் ஆளுங்கட்சி தானே... அது செய்ய வேண்டிய வேலைகளை செய்விக்கவும், தர வேண்டிய நிதியைப் பெற்றுத்தரவும் அண்ணாமலை வலியுறுத்தலாமே என்று கேட்கிறார்கள். அண்ணாமலை அதையெல்லாம் செய்வதை விட்டுவிட்டு, நிதி கேட்டுப் போகிற முதல்வரை கேலிசெய்வது எதிர்விளைவுகளையே ஏற்படுத்தும்.

பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வும், சுங்கக் கட்டணமும் மக்கள் மத்தியில் எத்தகையை பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது என்பது பாஜகவினருக்கு நன்றாகவே தெரியும். இடைத்தேர்தல்களில் கிடைத்த படுதோல்வியைத் தொடர்ந்து, 2021 நவம்பரில் பெட்ரோல், டீசல் விலை மீதான கலால் வரியை தலா ரூ.5, 10 என்று குறைத்த பாஜக-வால் இப்போது குறைக்க முடியாதா என்ன? மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்துக்கு இன்னமும் நிதி வராதது குறித்து உரிமையாக குரல் எழுப்ப வேண்டிய கடமை தமிழக பாஜகவுக்கு இல்லையா? அதைவிட்டுவிட்டு, தமிழ்நாடு அரசுக்குச் சொந்தமான ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் எய்ம்ஸ் மாணவர்கள் சேர்க்கப்பட்டிருப்பதை எல்லாம் தங்கள் சாதனையாகச் சொன்னார்கள் என்றால் தமிழகத்தில் பாஜக எப்படி வளரும்?

சோலை எம்.மாடசாமி
சோலை எம்.மாடசாமி

மதவாத அரசியல் உதவாது

“அதிமுகவுக்கு அடுத்து எனக்குப் பிடித்த கட்சி பாஜகதான். காரணம், இதுநாள் வரையில் பேசப்படாத இந்துக்களின் பிரச்சினையை அது பேசுகிறது. ஆனால், வெறும் மதவாதத்தை மட்டுமே பேசி மட்டும் இங்கே வளர்ந்துவிட முடியாது. சமீபத்தில் நான் அயோத்திக்குப் போயிருந்தேன். ‘அர்ச்சுனனைக் கொல்ல வேண்டும், கொல்ல வேண்டும்’ என்று சொல்லிச் சொல்லியே கர்ணனை துரியோதனன் வளர்த்ததைப் போல, அங்குள்ள மக்களுக்கு எல்லாம் மதவெறியை ஊட்டி ஊட்டி வளர்த்திருக்கிறார்கள். வார்த்தைக்கு வார்த்தை மோடி அரசைப் புகழ்கிறார்கள்.

எங்கள் ஊரிலும் ராமர் கோயில் இருக்கிறது. சாமியாடிகள்கூட திமுக, அதிமுகவில்தான் இருக்கிறார்களே தவிர, பாஜகவில் இல்லை. இங்கே மத நம்பிக்கை இருக்கிறதே தவிர, மதவெறி இல்லை. எவ்வளவு பாடுபட்டு அதைத் திணித்தாலும் மக்கள் அதைப் பொருட்படுத்துவதே இல்லை. ஒரு ஆட்டோக்காரர் விசிட்டிங் கார்டு அடித்தால்கூட, மூணு மதச் சின்னங்களையும் போட்டு அடிக்கிறார். இந்து ஓட்டல்களில் எம்மதமும் சம்மதம் என்று மூன்று சாமி படங்களுக்கும் மாலை போடுகிறார்கள். எனவே, தமிழ்நாட்டிற்கென்று தனி அரசியல் திட்டத்தை வகுக்காமல் பாஜகவால் இங்கே காலூன்ற முடியாது” என்கிறார் அதிமுக கிளைச்செயலாளரான சோலை எம்.மாடசாமி.

ம.தங்கராஜ்
ம.தங்கராஜ்

வட்டாரத் தலைமை இல்லை

"பாஜகவுக்கு வலுவான தேசியத் தலைமை இருந்தாலும், மாநில அளவில் மக்களை ஒருங்கிணைக்கும் தலைவர் இல்லாமல் இருந்தது. அண்ணாமலை அந்த இடத்தை ஓரளவு நிரப்பியிருக்கிறார். இப்போது மக்கள் மத்தியில் அவரைப் பற்றிய பேச்சு இருக்கிறது, அவருக்கான ஆதரவாளர்களும் மாநிலம் முழுக்க உருவாகியிருக்கிறார்கள். ஆனால், அப்படியானவர்களை வாக்குகளாக மாற்றுவதற்கான சிஸ்டம் இன்னும் பாஜகவில் உருவாகவில்லை என்பதை நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் காட்டின. சென்னை போன்ற பெருநகரங்களில் வாக்களிக்க விருப்பமில்லாமல் வீடுகளில் இருந்தவர்களை பேசி ஓட்டுச்சாவடிக்கு அழைத்து வந்திருந்தாலே, பாஜக கணிசமான ஓட்டுக்களைப் பெற்றிருக்க முடியும். ஆனால், அப்படியான வட்டாரத் தலைவர்களே பாஜகவில் இல்லை" என்கிறார் ம.தங்கராஜ்.

தேவேந்திர குல வேளாளர்களை பாஜக ஆதரவாளர்களாக மாற்றுவதற்கான களப்பணிகளை செய்துவரும் இவர், மேலும் சில தகவல்களையும் சொல்கிறார்.

"உத்தர பிரதேசத்தில் மட்டுமல்ல, தமிழ்நாட்டிலும் சாதிக் கணக்குதான் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கிறது. துரைமுருகன், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வன்னியர் பெல்ட்டுக்கு என்றால், கனிமொழியும், அப்பாவுவும் நாடார் பெல்டுக்கு. பட்டியலின வாக்குகளை அள்ளுவதற்கு திருமாவளவன் கூட்டணி. இதுதான் கணக்கு. இது திராவிட பூமி என்று அவர்கள் சொன்னாலும்கூட, உள்ளுக்குள் இதுதான் நடக்கிறது. இந்த இடத்தில்தான் வட்டாரத் தலைவர்களின் தேவை அதிகம் உணரப்படுகிறது. என்னதான் கவர்ச்சிகரமான தலைவர்கள் இருந்தாலும், ஒரு கட்சிக்கு வாக்குகளை கொண்டுவந்து சேர்ப்பவர்கள் வட்டாரத் தலைவர்கள்தான்.

அத்வானியும், கோவிந்தாச்சாரியும் தலைமைப் பொறுப்பில் இருந்த காலத்தில் பாஜகவை பார்ப்பனிய கட்சி என்றவர்கள், இப்போது அப்படிச் சொல்ல முடியாது. காரணம், ஒரு கட்டத்தில் ஓபிசி அரசியலை கையிலெடுத்தது பாஜக. கர்நாடகாவில் ஈஸ்வரப்பா, எடியூரப்பா, மத்திய பிரதேசத்தில் உமாபாரதி, மகாராஷ்டிராவில் கோபிநாத் முண்டே, குஜராத்தில் நரேந்திர மோடி, உபியில் கல்யாண சிங் போன்றோர் ஒரே நேரத்தில் தலைவர்களாக உருவாக்கப்பட்டார்கள். 1984-ல் வெறும் 2 இடங்களில் வென்ற பாஜக பின்னர் மத்தியில் ஆட்சியைப் பிடித்ததற்குக் காரணம், ஓபிசி அரசியலை வெற்றிகரமாக முன்னெடுத்ததுதான்.

அதேநடைமுறையைப் பின்பற்றி தமிழகத்தில் தேவேந்திர குல மக்களை வெற்றிகரமாக பாஜகவின் பக்கம் ஈர்த்திருக்கிறார் அமித்ஷா. வெறுமனே கொங்கு, குமரி பகுதியில் மட்டும் இருந்த பாஜக இப்போது நெல்லை, தென்காசி, ராமநாதபுரம் மாவட்டம் வரையில் கணிசமான வாக்குகளைப் பெற்றிருக்கிறது. பாஜகவின் அடுத்த இலக்கு கள்ளர், அகமுடையார் வாக்குகள்.

சட்டப்பேரவைத் தேர்தலின்போது அதிமுக கூட்டணியில் அமமுகவையும் சேர்த்துக்கொள்ளுமாறு அமித்ஷாவே வலியுறுத்தியும், எடப்பாடி பழனிசாமி கேட்கவில்லை. வன்னியர் ஒதுக்கீட்டுக்கு எதிராக டிஎன்டி என்ற ஒதுக்கீட்டுப் பிரிவின் கீழ் வரும் மறவர்களும், பிரமலைக் கள்ளர்களும்தான் போராடினார்களே தவிர, கள்ளரும், அகமுடையாரும் அதற்கு ஆதரவு தரவில்லை. காரணம், அவர்கள் எம்பிசி பட்டியலின் கீழ் வரமாட்டார்கள். எனவே, அதிமுகவால் புறக்கணிக்கப்பட்ட கள்ளர், அகமுடையார் மக்களை குறிவைத்து பாஜக இப்போது வேலைசெய்கிறது. தேவேந்திரகுல வேளாளர் போல இச்சமூகங்களும் பாஜகவின் பக்கம் திரண்டால், பாஜகவின் செல்வாக்கு மென்மேலும் அதிகரிக்கும்" என்கிறார் தங்கராஜ்.

வி.அன்புராஜ்
வி.அன்புராஜ்

இனிமேல் பாருங்க

பாஜகவில் வட்டாரத் தலைவர்களுக்குப் பெரிய பஞ்சம் இருப்பதை ஒப்புக்கொள்ளும் ஆலங்குளம் வடக்கு ஒன்றிய தலைவர் வி.அன்புராஜ் இப்போது அந்த நிலை படிப்படியாக மாறிவருகிறது என்கிறார். ” ‘இல்லம் செல்வோம் உள்ளம் வெல்வோம்’ திட்டத்தின் கீழ் வீடு வீடாக பாஜகவினர் போகத் தொடங்கியிருக்கிறோம். மோடியின் திட்டங்களான ஜல்ஜீவன் குடிநீர் இணைப்பு, ஆவாஸ் யோஜனா வீடு, ஜன்தன் வங்கிக்கணக்கு, இலவச கியாஸ், அந்தியோதயா ரேஷன் உள்ளிட்ட திட்டங்களின் பயனாளிகள் பட்டியலை வீடு வீடாகச் சென்று கணக்கெடுக்கிறோம். அவர்களின் குறைகளையும் உடனுக்குடன் கேட்டு நிவர்த்தி செய்கிறோம்.

ஒரு நிர்வாகிக்கு வெறும் 25 வீடு தான் என்பதால், மக்கள் மனதில் வட்டார, கிளை நிர்வாகிகளின் முகம் நன்றாகப் பதிகிறது. ஆனாலும், கடைசி நேரத்தில் ஓட்டுக்குக் காசு கொடுத்து வெற்றியை திராவிடக் கட்சிகள் அறுவடை செய்கின்றன. ஒன்று, அதைத் தடுக்க வேண்டும். இல்லையென்றால் நாமும் அவர்களுக்கு இணையாக ஓட்டுக்குப் பணம் தர வேண்டும். அது நடந்துவிட்டால் பாஜக நிச்சயம் வெற்றிபெறும்” என்கிறார் அன்புராஜ்.

தொழிற்சங்கத்துக்குள் வாங்க

மதுரையைச் சேர்ந்த பாஜக ஆதரவு அரசு ஊழியர் ஒருவர் கொஞ்சம் காட்டமாகவே பேசினார். "தமிழ்நாட்டில் பாஜக வேலை செய்ய வேண்டிய இடம் அரசு ஊழியர்கள் மத்தியில்தான். பழைய பென்ஷன் உள்ளிட்ட சலுகைகளை திமுக தரும் என்று நம்பி ஓட்டுப்போட்டுவிட்டு, ஏமாந்துபோய் நிற்கிறார்கள் அரசு ஊழியர்கள். கரோனாவால் இறந்த டாக்டர்கள், நர்சுகளுக்கு நிதி தருவதாகச் சொன்னதையும் நிறைவேற்றவில்லை. அரசு போக்குவரத்துக் கழகத்திலும், குடிநீர் வாரியத்திலும் ஓய்வுபெற்று பல ஆண்டுகளாகியும் இன்னும் பணிக்கொடை, பென்ஷன் எதையும் சரிவர கொடுக்காமல் இருக்கிறார்கள்.

கடும் கொந்தளிப்பில் இருக்கும் இவர்களது பிரச்சினையை வெளியே சொல்ல ஒரு சங்கமும் இல்லை. கம்யூனிஸ்ட் ஆதரவு சங்கங்கள் திமுகவுக்காக மவுனம் காக்கின்றன. பாஜக சார்பில் ஒரு சங்கம் இருந்து, அது அரசு ஊழியர்களின் பிரச்சினை பற்றி பேசினால் அவ்வளவு ஆதரவாளர்களைப் பெற முடியும். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மத்திய அரசு ஊழியர்களைப் போலவே மாநில அரசு ஊழியர்களையும் நடத்துவோம் என்று சொன்னாலே பாதி அரசு ஊழியர்களின் ஆதரவைப் பெற்றுவிட முடியும்" என்றார் அவர்.

அவரே இன்னொரு கருத்தையும் சொன்னார். "தேசியக் கட்சிகள் ஒவ்வொன்றும் அந்தந்த மாநிலங்களுக்கேற்பத்தான் அரசியல் செய்கின்றன. உதாரணமாக, நீட் தேர்வை கேரள கம்யூனிஸ்ட்டும் சரி, கர்நாடக காங்கிரசும் சரி ஆதரிக்கின்றன. ஆனால், இங்கே கடுமையாக எதிர்க்கிறார்கள். அதேபோல பேசாமல் பாஜகவும் எதிர்த்துவிட்டுப் போக வேண்டியதுதானே... எதற்குத் தனி ஆளாக ஆதரிக்க வேண்டும்?" என்கிறார் அவர்.

இதெல்லாம் கீழிருந்து வரும் குரல்கள். தமிழ்நாட்டின் எண்ண ஓட்டத்தைப் புரிந்துகொள்ளும் பாஜக தலைவர்கள் டெல்லியில் இருந்தால் இதையும் கொஞ்சம் பரீட்சித்துப் பார்க்கலாமே!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in