
ஏக்நாத் ஷிண்டே அரசில் துணை முதலமைச்சராக என்சிபி தலைவர் சரத் பவாரின் அண்ணன் மகன் அஜித் பவார் பதவியேற்றது பரபரப்பை உருவாக்கியுள்ளது. இது குறித்து சிவசேனா(யுபிடி) எம்.பி சஞ்சய் ராவத் பரபரப்பான கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து சிவசேனா (யுபிடி) தலைவர் சஞ்சய் ராவத் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் தனது கட்சியில் ஏற்பட்ட பிளவால் மனம் தளரவில்லை. புதிதாக தொடங்க முடியும் என்ற நம்பிக்கையோடு உள்ளார். நான் சரத் பவாருடன் பேசினேன். அவர் உறுதியாக இருப்பதாகவும், மக்கள் ஆதரவு தங்களுக்குப் பின்னால் இருப்பதாகவும் கூறினார். உத்தவ் தாக்கரேவுடன் நாம் புதிய தொடக்கத்தை உருவாக்க முடியும் என்று தெரிவித்தார்.
அரசியல் கட்சிகளை உடைப்பதன் மூலம் அரசாங்கத்தை அமைப்பதற்கான "சர்க்கஸை" மகாராஷ்டிரா மக்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். சிலர் மகாராஷ்டிராவின் அரசியலை முழுவதுமாக கெடுப்பதில் உறுதியாக இருப்பதாகத் தெரிகிறது. அவர்கள் தேர்ந்தெடுத்த பாதையில் அவர்கள் செல்லட்டும்" என்று அஜித் பவார், ஏக்நாத் ஷிண்டே மற்றும் பாரதிய ஜனதா கட்சியைப் பற்றி வெளிப்படையாகக் குறிப்பிடும் வகையில் சஞ்சய் ராவத் கூறினார்.