குளிரைத் தாங்க ராகுல் காந்தி உட்கொள்ளும் ‘பிரசாதம்’ என்ன?

பாஜக குதர்க்க கேள்வி
ராகுல் காந்தி
ராகுல் காந்தி

”கொடும் குளிரை தாங்குவதற்காக ராகுல் காந்தி என்ன பிரசாதம் உட்கொள்கிறார்? அந்த பிரசாதத்தை அவர் தனது சேனைகளுக்கும்(காங்கிரஸ் கட்சியினர்) கொடுத்தால், அவர்களும் ஆடைகூட அணியாது குளிரில் அலைவார்கள் அல்லவா?..” காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்திக்கு எதிராக பாஜக தலைவர்களில் ஒருவரான துஷ்யந்த் கௌதம் இவ்வாறு குதர்க்கம் கக்கி இருக்கிறார்.

டெல்லியில் கொல்லும் குளிர் நிலவுகிறது. ஒரு போர்வையை படர விட்டார்போன்று கண்களுக்கு தட்டுப்படும் பனிப்பொழிவும், குளிரும் மக்களை படுத்தி எடுக்கின்றன. இந்த குளிரிலும், மேலுக்கு ஒற்றை டி ஷர்ட் அணிந்து வளையவரும் ராகுல் காந்தியை பாஜகவினர் வறுத்து வருகின்றனர். அந்த வகையில் பாஜகவின் துஷ்யந்தும், “நாம் அனைவரும் குளிரிலிருந்து தாங்கும் வகையிலான ஆடைகளை உடுத்தியும் நடுங்கி வருகிறோம். ஆனாலும் அவர்(ராகுல்) டி ஷர்ட் மட்டுமே அணிந்து உலவுவதன் மர்மம் என்ன?” என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறார்.

முந்தைய தினம் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான சல்மான் குர்ஷித், ராகுல் காந்தியை ஸ்ரீராமபிரானுக்கு ஒப்பிட்டு பேசியிருந்தார். ராகுலை ஸ்ரீராமர் என்றதோடு, அன்றைய பாரதத்தை இப்போதையா காங்கிரஸ் இயக்கத்தோடும், ராமாயண இதிகாசத்தை ராகுலின் பாரத் ஜோடோ யாத்திரைக்கும் ஒப்பிட்டு பேசினார். “ராகுல் காந்தி ஒரு யோகி போன்றவர். அவர் புரிந்த தபஸ், அவரை களைப்பின்றி யாத்திரையை தொடரச் செய்யும்; குளிரிலிருந்து காக்கும்” என்றெல்லாம் புகழ்ந்திருந்தார்.

துஷ்யந்த் கௌதம்
துஷ்யந்த் கௌதம்

பாஜகவுக்கு உரிய ’ராமரை’ காங்கிரஸ் கையாண்டதில், பாஜக வெகுண்டது. அதன் பொதுச்செயலரான துஷ்யந்த் கௌதம் சீற்றமடைந்தார். அது அவரது இன்றைய பேட்டியிலும் வெளிப்பட்டது. அந்த வகையில் குளிரைத் தாங்குவதற்காக ராகுல் உட்கொள்ளும் ’பிரசாதம்’ என்ன கேள்வியை எழுப்பியிருந்தார்.

தற்காப்புக் கலைகள், யோக பயிற்சிகள் பலவற்றை பழகியிருக்கும் ராகுல் காந்தியின் உடலுறுதி, பாரத் ஜோடோ யாத்திரையில் வெளிப்பட்டு வருகிறது. மேலும், குளிரைத் தாங்குவதற்கான ’ஜாக்கெட்’ கவசம் ஏதுமின்றி வாஜ்பாய்க்கு அஞ்சலி செலுத்த நேற்று ராகுல் சென்றிருந்ததும் பாஜகவினரை சீண்டியிருக்கிறது. ராமர், வாஜ்பாய் என பாஜகவின் உடைமைகளில் ஊடுருவும் ராகுல் காந்தியை தாக்கும் முயற்சியில், பாஜக நிதானம் இழந்திருப்பதும் துஷ்யந்தின் பேட்டியில் வெளிப்பட்டிருக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in