`அம்மா கையில் அதிமுக வந்தது போல் ஓ.பி.எஸ் கையில் இயக்கம் வரும்'- அடித்துச் சொல்லும் அதிமுக மாவட்ட செயலாளர்

எஸ்.ஏ.அசோகன்
எஸ்.ஏ.அசோகன்

அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர் செல்வத்தை நீக்கி பொதுக்குழு முடிவெடுத்துள்ள நிலையில் அவர் என்ன தவறு செய்தார் ? எப்படி அவரை நீக்கலாம்? என ஆவேசமாகக் கேட்கிறார் அதிமுக கன்னியாகுமரி கிழக்கு மாவட்டச் செயலாளர் எஸ்.ஏ.அசோகன்!

ஈ பி எஸ் மற்றும் ஓ பி எஸ்
ஈ பி எஸ் மற்றும் ஓ பி எஸ்

அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் அக்கட்சியில் பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது. ஓ.பன்னீர் செல்வத்திற்கு பொதுக்குழு உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவு இல்லாத நிலையில், யாரும் எதிர்பார்க்காதவகையில் அவர் அதிமுகவின் ராயப்பேட்டை தலைமை அலுவலகத்திற்குள் நுழைந்தார். காலையிலேயே ஓ.பி.எஸ்- ஈ.பி.எஸ் ஆதரவாளர்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் இருகாவலர்கள் உள்பட 13 பேர் மருத்துவமனையில் சிசிச்சையில் உள்ளனர்.

இதனிடையே பொதுக்குழுவில் ஓ.பன்னீர் செல்வத்தை கட்சியை விட்டு நீக்குவதாக அறிவித்துள்ளனர். அதிமுக தலைமை அலுவலகத்தை கோட்டாட்சியர் சீல் வைத்துள்ளார். பெரும்பான்மை நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமி பக்கம் நிற்கும் நிலையில் வெகுசிலரே ஓ.பன்னீர் செல்வம் பக்கம் நிற்கின்றனர். அவர்களில் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.ஏ.அசோகனும் ஒருவர்!

எஸ்.ஏ.அசோகனிடம் காமதேனு இணையதளத்திற்காக ஓ.பி.எஸ்சை கட்சியில் இருந்து நீக்கிய அறிவிப்பு குறித்துப் பேசினேன். “ஓ.பி.எஸ் என்ன தவறு செய்தார்? எப்படி அவரை நீக்கலாம்? ஒற்றைத் தலைமையை நாங்கள் கேட்கவில்லையே! அதிமுக நன்றாகத்தானே போய்க்கொண்டு இருந்தது. ஒற்றைத் தலைமை கோஷத்தை எழுப்பி அவர்கள்தான் பிரச்சினை செய்தார்கள்.

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரை கட்சியில் இருந்து கருணாநிதி நீக்கினார். ஆனால் எம்.ஜி.ஆர் மீண்டுவந்து உயிரோடு இருந்தவரை கருணாநிதியை ஆட்சிக் கட்டிலின் அருகிலேயே நெருங்கவிடவில்லை. அதேபோல் ஓ.பன்னீர் செல்வம் மீண்டுவந்து அதிமுகவை வழிநடத்துவார். அதிமுக பிளவுகளை சந்திப்பதும், அணிகளாகச் செயல்படுவதும் புதிது அல்ல. எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பின்பு ஜெ அணி, ஜானகி அணி என பிரிந்தது. அம்மா கையில் அதிமுக வந்தது. அதுபோல் ஓ.பி.எஸ் கையில் இயக்கம் வரும்!

நிர்வாகிகள் பதவிக்காகவும், வேறுசில காரணங்களுக்காகவும் எடப்பாடி பழனிசாமியிடம் ஒட்டிக்கொண்டு உள்ளனர். தொண்டர்களின் ஆதரவு ஓ.பி.எஸ்க்கு தான் உள்ளது. நான் பொறுப்பு போட்டவர்கள்கூட அந்தப்பக்கம் நிற்கிறார்கள். தனிப்பட்ட முறையில் அழைத்து பொறுப்பைக் காப்பாற்ற நிற்கிறோம் என்கிறார்கள்” என்று தன் கருத்தைச் சொன்னவரிடம், ‘என்னதான் இருந்தாலும் பொதுக்குழுவுக்கு அல்லவா சென்றிருக்க வேண்டும்? தலைமைக் கழக அலுவலகத்தில் புகுவது சரியாக இருக்குமா?’ எனக் கேட்டேன்.

அதற்கு பதில் சொன்ன எஸ்.ஏ.அசோகன், “ஆடு அறுக்கும் இறைச்சிக்கடையில் ஆட்டை வா..வா என அழைத்தால் எப்படி இருக்கும்? அப்படித்தான் எங்களை பொதுக்குழுவுக்கு அழைப்பது!” என முடிக்கிறார் எஸ்.ஏ.அசோகன்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in