வித்தை கற்றாரா விஜயபாஸ்கர்?

ஆளும் கட்சியின் அன்புக்குப் பாத்திரமான ரகசியம்!
வித்தை கற்றாரா விஜயபாஸ்கர்?
தண்ணீர்பந்தல் திறக்கும் விஜயபாஸ்கர்...

“ஆந்திர மாநிலம் புத்தூரில் பதுங்கியிருந்த தீவிரவாதிகளை அங்கே சென்று போராடி வெற்றிகண்ட இன்ஸ்பெக்டர் லட்சுமணனை மருத்துவமனைக்கே சென்று பாராட்டி 15 லட்ச ரூபாயை பரிசளித்திருக்கிறார் நமது முதல்வர். அவர் காவலர் களுக்கெல்லாம் காவலராக இருக்கிறார். ஆனால் இதைக்கண்டு பொறுக்காத ஒரு தள்ளுவண்டி, ‘இதில் எனக்கு உடன்பாடில்லை’ என்று விமர்சித்திருக்கிறது. காக்கிச் சட்டைகளுக்கு உயர்வளித்தால் களவாணிகளுக்கு எரிச்சல்தானே வரும்” - 2013-ம் ஆண்டு மார்ச் மாதம் 29-ம் தேதி சட்டப்பேரவையில் விராலிமலை தொகுதி எம்எல்ஏ-வான சி.விஜயபாஸ்கர் இப்படிப் பேசினார். இதற்கு அடுத்த நாளே அவருக்கு அமைச்சர் அங்கீகாரத்தை வழங்கினார் ஜெயலலிதா. அதேசமயம், முதுமை காரணமாக சக்கரநாற்காலியில் பயணிக்கத் தொடங்கியிருந்த கருணாநிதியை விஜயபாஸ்கர் அப்படி விமர்சித்ததைக் கண்டு திமுகவினர் கொதித்துப் போனார்கள்.

விஜயபாஸ்கர்
விஜயபாஸ்கர்

அப்படி அமைச்சர் பதவியை வாங்கிக்கொடுத்ததும், தன்னை வளப்படுத்தியதும் திமுக தலைவர் மீதான விமர்சனம்தான் என்பதை நன்கு உணர்ந்திருக்கும் அந்த விஜயபாஸ்கர், இப்போது ஒரு எதிர்க்கட்சி எம்எல்ஏ-வாக திமுகவை விமர்சிக்க வேண்டிய வாய்ப்புக்கள் இருந்தும், அதைச் செய்யாமல் ரொம்பவே அடக்கி வாசித்துக் கொண்டிருக்கிறார். எடப்பாடி அளவுக்கு இல்லாவிட்டாலும் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமாரும், செல்லூர் ராஜுவும் விமர்சிக்கும் அளவுக்குக்கூட திமுக அரசுக்கு எதிராக தனது கண்டனத்தை விஜயபாஸ்கர் எங்கும், எதிலும் பதிவுசெய்யாமல் கவனமாகப் பார்த்துக் கொள்கிறார்.

“எந்த நேரத்தில் யாரிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பது எல்லாம் விஜயபாஸ்கருக்கு அத்துபடி. அதிலும் அவர் டாக்டர் பட்டம் வாங்குமளவுக்கு கில்லாடியானவர்” என்று சொல்லும் புதுக்கோட்டைவாசிகள், “அதிமுக ஆளும் கட்சியாக இருக்கும்போது குட்கா விற்பனையாளர்களிடம் லஞ்சம், ஆர்.கே.நகர் தேர்தலில் பண விநியோகம், சட்டவிரோத குவாரிகள் நடத்தியது என பல குற்றச்சாட்டுக்கள் எழும்பியபோதும், அதன் தொடர்ச்சியாக சிபிஐ, வருமான வரித்துறைச் சோதனைகள் நடத்தியபோதும் எதுவுமே நடக்காததுபோல அவற்றையெல்லாம் சுலபமாக சமாளித்தவருக்கு திமுக அரசு எம்மாத்திரம்” என்கிறார்கள்.

வரவேற்பளிக்கும் கட்சிக்காரர்கள்
வரவேற்பளிக்கும் கட்சிக்காரர்கள்

ஜெயக்குமார் கைது, வேலுமணி தொடர்புடைய இடங்களில் இரண்டாவது முறை ரெய்டு என அதிமுக ‘முன்னாள்’களுக்கு எதிராக நடவடிக்கைகள் பாயும் நிலையில், எந்தக் கவலையும் இல்லாமல் பொது நிகழ்ச்சிகளில் தலைக்காட்டி தன்னை சுறுசுறுப்பாக வைத்துக் கொண்டிருக்கிறார் விஜயபாஸ்கர். மாவட்டத்தில் அதிமுகவை வழிநடத்துவதிலும் சோர்ந்து போய்விடவில்லை; ஓய்ந்தும் போய் விடவில்லை. புதுக்கோட்டை மாவட்டத்தில் கட்சியைத் துடிப்புடன் வைத்திருப்பதால் தினமும் அவரது இல்லம் தேடி வரும் கட்சிக்காரர்களின் கூட்டமும் ஓயவில்லை. கட்சியினர் இல்லங்களில் நடக்கும் விசேஷங்களுக்குத் தவறாமல் ஆஜராகி விடுகிறார்.

கழகத்தினர் இல்லத் திருமணத்தில் ...
கழகத்தினர் இல்லத் திருமணத்தில் ...

என்னதான் செய்கிறார் விஜயபாஸ்கர் என்று கேட்டால் “அவருக்கென்ன தங்கம் என்கிறார்கள்” புதுக்கோட்டை மாவட்ட மக்கள். அந்தளவுக்குப் பேர்சொல்லும் நல்லபிள்ளையாக இருக்கிறார். இப்போதும் புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைச்சர் என்றால் அது விஜயபாஸ்கர் தான். புதுக்கோட்டை நகராட்சியில் சமீபத்தில் சில கோடிகள் மதிப்பிலான பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டது. அதுவெல்லாம் கிடைத்தது என்னவோ திமுகவினருக்குத்தான். ஆனால் அந்தப் பணிகள் அனைத்தையும் எடுத்துச் செய்வது விஜயபாஸ்கர் தரப்பினர்தான் என்கிறார்கள். ஒப்பந்தப்பணிகளைச் செய்வதற்காக அனைத்து மெஷினரி களும் அவரிடம் உள்ளதால் ஆளும் கட்சிக்காரர்களுக்கு என்ன தேவையோ அதைக்கொடுத்துப் பணிகளைச் செய்து வருகிறார் விஜயபாஸ்கர்.

கடந்த அதிமுக ஆட்சியில் திமுகவினரால் அதிகம் விமர்சிக்கப்பட்ட அமைச்சர்களில் முக்கியமானவர் விஜயபாஸ்கர். தேர்தல் பிரச்சாரத்துக்குச் சென்ற இடத்திலெல்லாம் “குட்கா புகழ் அமைச்சர்” என்றுதான் விஜயபாஸ்கரை விமர்சித்தார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். “நாங்கள் ஆட்சிக்கு வந்ததும், ஊழல் செய்த அமைச்சர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுச் சிறைக்கு அனுப்பப்படுவார்கள்” என்று வீராவேசமாக முழங்கினார் ஸ்டாலின்.

கட்சியினர் அழைப்பு...
கட்சியினர் அழைப்பு...

அப்போதிருந்த அந்த வீராவேசம் ஆட்சிக்கு வந்ததற்குப் பிறகு அப்படியே காணாமல் போனது. அதிலும் குறிப்பாக, விஜயபாஸ்கர் விஷயத்தில் ஜெயலலிதா மொழியில் செலக்டிவ் அம்னீஷியா என்றுகூட சொல்லும் அளவிற்கு ஆட்சியாளர்கள் மறந்து போனது ஆச்சரியம் தான்!

இதுபற்றி யாரும் பொதுவெளியில் பேசிவிடக்கூடாது என்பதற்காக விஜயபாஸ்கர் வீட்டிலும் பெயரளவுக்கு ஒரு ரெய்டு நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்த மேல் நடவடிக்கைகள் என்ன ஆனது என்று தெரியவில்லை. ஆனால், தன் மீதான ரெய்டு நடவடிக்கைக்கு முன்னதாகவே விஜயபாஸ்கர் ஆளும் கட்சிக்கு நெருக்கமான பூசாரிகளைச் சந்தித்து பேசவேண்டிய விதமாக பேசிவிட்டதாகவும் ஒரு பேச்சு உண்டு. அந்தப் பேச்சுவார்த்தையின் போது, “நீங்கள் எக்காரணம் கொண்டும் தமிழக அரசை விமர்சிக்காமல் இருந்தால் போதும். மற்றதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்” என்று உத்தரவாதம் அளிக்கப்பட்டதாகவும் சொன்னார்கள். அது எந்தளவுக்கு உண்மை எனத் தெரியவில்லை. ஆனால், ரெய்டுகளுக்குப் பின்னால் அரசை எதிர்த்து ஒரு வார்த்தைகூட பேசவில்லை விஜயபாஸ்கர்.

முதல்வருக்கு நெருக்கமான வட்டம் வரைக்கும் தொடர்பு வைத்திருக்கும் விஜயபாஸ்கர், அமைச்சர் ஐ.பெரியசாமியின் மகன் செந்தில்குமார், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திமுக மாநிலங்களவை உறுப்பினர் அப்துல்லா ஆகியோருடன் நல்ல நட்பில் இருப்பதாகச் சொல்கிறார்கள். இந்த நட்பு வட்டத்தை வைத்து தன்னை எப்படி தற்காத்துக் கொள்ளும் தந்திர வித்தைகளை இந்நேரம் படிக்காமலா இருப்பார் விஜயபாஸ்கர்? என்று கேள்வி எழுப்புகிறார்கள் அவரை நன்கு படித்தவர்கள்.

திமுகவை நேரடியாக தாக்கி எதுவும் பேசுவதில்லை என்றாலும் மாவட்டத்தில் அதிமுகவின் இருப்பை தக்கவைப்பதில் விஜயபாஸ்கர் தனது வேகத்தைக் குறைத்துக் கொண்டதாக தெரியவில்லை. அதற்கு உதாரணம், அன்னவாசல் பேரூராட்சியை அதிமுக வசமாக்கியது. இங்கே அதிமுக பெரும்பான்மை இருந்தபோதும் திமுகவினர் தலைவர் பதவியை கைப்பற்ற பலவித உபாயங்களையும் கையாண்டனர். ஆனால், அதையெல்லாம் முறியடித்து நீதிமன்றம் வரைக்கும் சென்று அன்னவாசல் பேரூராட்சியை அதிமுக வசமாக்கினார் விஜயபாஸ்கர்.

எது எப்படி இருந்தாலும், சொந்தக் கட்சித் தலைமைக்கும் நம்பிக்கைக்கு உரியவராய் இருந்து கொண்டு, தன்னை நோக்கி அட்டாக் வராத அளவுக்கு ஆளும் கட்சி தரப்பிலும் அன்புக்குப் பாத்திரமானவராய் நடந்துகொள்ளும் வித்தைகளைக் கற்ற விஜயபாஸ்கரை 'நவீன அரசியல் சாணக்கியர்' என்று சொன்னாலும் தகும்!

Related Stories

No stories found.