தொடரும் பாலியல் புகார்: என்ன செய்யப் போகிறது பள்ளிக்கல்வித்துறை?

அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பதில்
தொடரும் பாலியல் புகார்: என்ன செய்யப் போகிறது பள்ளிக்கல்வித்துறை?

வட்டார கல்வி அலுவலர்களுக்கான நிர்வாகத் திறன் மேம்பாட்டு பயிற்சி தொடக்க நிகழ்வுக்காக தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று காலை மதுரை வந்தார். நிகழ்ச்சியைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்த அவர் நிருபர்களின் கேள்விக்கு அளித்த பதில்கள் வருமாறு:-

மாணவிகள் பள்ளியிலும், பள்ளிக்கு வெளியிலும் தொடர்ந்து பாலியல் சீண்டல், வன்முறைக்கு ஆளாகிறார்கள். அதைத் தடுக்க பள்ளிக் கல்வித்துறை என்ன செய்யப் போகிறது?

ஏற்கெனவே பள்ளி மாணவ- மாணவிகளுக்கு ஹெல்ப் லைன் எண் குறித்து சொல்லிக் கொடுத்திருக்கிறோம். இல்லம் தேடிக்கல்விக்கான 1.78 லட்சம் மையங்களிலும் 1098 என்ற எண் குறித்து அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று சொல்லியிருக்கிறோம். ஒவ்வொரு பள்ளிக்கூடத்திலும், குட் டச், பேட் டச் என்றால் என்ன என்று சொல்லித்தருகிறோம். கூடவே, உறவினர்களோ, மற்றவர்களோ நான் உன்னை ஒரு விஷயம் செய்வேன் யாரிடமும் சொல்லக்கூடாது என்று சொன்னார்கள் என்றால், இல்லை நான் கட்டாயம் பெற்றோரிடம் சொல்வேன் என்ற வாசகத்தையும் சொல்லித் தருகிறோம். இந்த மாதிரியான விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்த முதல்வர் எங்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். அதனை நாங்கள் செய்துகொண்டிருக்கிறோம். அதுமட்டுமின்றி இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காவல்துறைக்கும் வலியுறுத்தியுள்ளோம்.

சமீபத்தில் சென்னையில் நடந்த மாவட்ட கலெக்டர்கள், எஸ்பிக்கள் மாநாட்டில்கூட, எந்தத்துறை பற்றி பேசினாலும், கடைசியில் அது பள்ளி மாணவர்கள் பிரச்சினையில்தான் தொடங்குகிறது. எனவே, பள்ளி மாணவ- மாணவிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும், பள்ளியில் இருந்தே இதைத் தொடங்க வேண்டும் என்றுதான் பேசினார்கள். எந்த நல்லது கெட்டது என்றாலும் தொடக்கப்புள்ளி எங்கள் துறையாகத்தான் இருக்கிறது. எனவே, இப்போது எல்லோருமே பள்ளி கல்வித்துறைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம். எங்கள் துறைக்கு அதிகமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்தனைக்கும் நாங்கள் வருமானம் ஈட்டுகிற துறை அல்ல. ஆனால், நல்ல முதலீட்டை, வருங்காலத்தில் இந்த நாட்டுக்கு நல்ல வட்டியைத் தருகிற துறையாக இது இருக்கிறது. தமிழ்நாட்டை 1 பில்லியன் டாலர் பொருளாதார மாநிலமாக மாற்றுவேன் என்று சொல்லியிருக்கிறார் என்றால், அதற்கு அதிகப்படியான பங்களிப்பைத் தரப் போவதும்கூட வருங்காலத்தில் எங்கள் துறையாகத்தான் இருக்கும்.

பள்ளி படிக்கட்டுகளில் மாணவர்கள் தொங்கிக்கொண்டே பயணிப்பதும், சில பள்ளி மாணவர்கள் இரு சக்கர வாகனம் ஓட்டி பள்ளிக்குச் செல்வதும் இன்னும் தொடர்கிறதே?

ஒரு வாரத்துக்கு முன்புகூட பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஒரு சுற்றறிக்கை அனுப்பினோம். 18 வயதைப் பூர்த்தி செய்யாத பள்ளி மாணவர்களை பள்ளிக்கு மட்டுமல்ல, எங்கேயுமே இரு சக்கர வாகனத்தில் செல்ல அனுமதிக்க கூடாது. இதுகுறித்து பெற்றோரிடமும் எடுத்துச் சொல்லுங்கள் என்று கூறியிருக்கிறோம். படியில் தொங்கும் மாணவர்கள் குறித்து, முதலில் ஓட்டுநர், நடத்துநர் மீது நடவடிக்கை எடுப்போம் என்று சொன்னோம். ஆனால், பாவம் அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. எனவே, இனிமேல் அப்படி ஏறினார்கள் என்றால் கீழே இறக்கிவிட்டுவிடுங்கள் என்று சொல்லியிருக்கிறோம். மாணவர்களுக்கு ஒவ்வொரு பள்ளியிலும் இதற்கான கவுன்சிலிங் கொடுக்குமாறு ஆசிரியர்களிடம் கூறியிருக்கிறோம்.

குறைந்த பேருந்துகள் இயக்கப்படுவதால்தான் நாங்கள் படியில் தொங்க வேண்டியதிருக்கிறது என்று மாணவர்கள் சொல்கிறார்களே?

அந்தந்த நேரத்துக்குப் பஸ் விடுங்க என்கிறார்கள். அப்படித்தான் விடுகிறார்கள். ஆனால், மாணவர்கள் குறிப்பிட்ட நேரத்துக்கு சென்றால் பேருந்துகளில் கூட்டமில்லாமல் ஏறிச் செல்லலாம். பெரும்பாலான மாணவர்கள் லேட்டாகப் போகலாம் என்று நினைக்கிறார்கள். இதனால்தான் கூட்டம் சேர்கிறது. மேலும் சில மாணவர்கள் நிற்கிற பஸ்சில் ஏறுவதிலை. ஓடுற பஸ்சில் ஸ்டைலாக ஏறுகிறார்கள். எனவே, இந்த விஷயத்தில் பெற்றோர்களும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். பிள்ளைகளை பள்ளிக்கூடம் அனுப்புவதோடு நம்முடைய வேலை முடிந்துவிடுவதில்லை. அவர்கள் எப்படிப் போகிறார்கள், வழியில் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதையும் கவனியுங்கள். அறிவுரை சொல்லுங்கள். 2-வது பெற்றோராக இருக்கிற ஆசிரியர்களும் அதைக்கவனிக்கிறார்கள் என்றாலும், நீங்களும் கவனிக்க வேண்டும்.

முதல்வரின் துபாய் பயணம் குறித்து அவதூறு கருத்துச் சொன்ன அண்ணாமலைக்கு திமுக கொடுத்த 24 மணி நேர கெடு முடிந்துவிட்டது. வழக்கு போடுவீர்களா?

அதுகுறித்து தலைமைக் கழகம் சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி அவர்களும், தலைமையும் பார்த்துக்கொள்வார்கள். இந்த மாதிரி சர்ச்சையை ஏற்படுத்தினால் தாங்கள் அரசியல் நடத்த முடியும், வேறு வழி கிடையாது என்று பாஜக நினைக்கிறது. காரணம், ஒட்டுமொத்த மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட முதல்வராக நம்முடைய முதல்வர் இருக்கிறார். அதனால், எதாவது ஒன்றை பேசி, நாமும் ஊடக வெளிச்சத்தில் இருக்க வேண்டும் என்ற நோக்கியல் அவர்கள் இப்படியெல்லாம் பேசுகிறார்கள். ஆனால், மக்கள் நல்ல முடிவு எடுப்பார்கள். ஏற்கெனவே கடந்த ஆண்டு மக்கள் நல்ல முடிவை எடுத்துவிட்டார்கள். அந்த நற்பெயரைத் தக்கவைத்துக்கொள்கிற நடவடிக்கைகளை முதல்வரும், நாங்களும் எடுப்போம்.

வரும் கல்வி ஆண்டில் பள்ளிக் கல்வித்துறையில் புதிய திட்டங்கள் ஏதேனும் நடைமுறைக்கு வருகிறதா?

சட்டப்பேரவை கூட்டத் தொடர் வருகிற 6-ம் தேதி தொடங்குகிறது. நடக்கும்போது அதுபற்றிய அறிவிப்புகள் வரும்.

கடந்த ஆட்சியில் டிஆர்பி மூலம் தேர்வான ஆசிரியர்கள் பலருக்கு இன்னும் பணி நியமன ஆணை வழங்கப்படவில்லையே?

2013-ம் ஆண்டில் இருந்தே இந்த நிலை இருந்துகொண்டிருக்கிறது. இது ஒன்றிய அரசின் சட்டத்தின் கீழ்தான் ஆசிரியர் தகுதித்தேர்வு (டெட்) என்ற ஒன்றே வந்தது. அதற்கு முன்பு சீனியாரிட்டி அடிப்படையில்தான் ஆசிரியர்களை பணி நியமனம் செய்தோம். இப்போது டெட் மூலம்தான் எடுத்தாக வேண்டிய கட்டாயம் இருக்கிறது. 80 ஆயிரம் பேரில் 40 ஆயிரம் பேர் பென்டிங்கில்தான் இருக்கிறார்கள். எங்களுடைய துறை சார்ந்த ஆசிரியர் பணியிட மாறுதல் கவுன்சிலிங் முடிந்த பிறகுதான், இன்னும் எத்தனை பேர் தேவை என்பதே தெரியவரும். அப்படி வரும்போதுதான் இதுபற்றிய முடிவுகள் எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.