சிலை கடத்தல் வழக்கில் ஈபிஎஸ் பங்கு என்ன?: பொன் மாணிக்கவேல் விளக்க புகழேந்தி வலியுறுத்தல்

சிலை கடத்தல் வழக்கில் ஈபிஎஸ் பங்கு என்ன?: பொன் மாணிக்கவேல் விளக்க புகழேந்தி வலியுறுத்தல்

சிலை கடத்தல் வழக்கில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பங்கு என்ன என்பதை பொன்மாணிக்கவேல் விளக்க வேண்டும் என ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி வலியுறுத்தியுள்ளார்.

தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் புகழேந்தி, சிலநாட்களுக்கு முன்பு ஓபிஎஸ்சால் கொள்கை பரப்பு செயலாளராக அறிவக்கப்பட்டார். இதையடுத்து சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் புகழேந்தி இன்று மரியாதை செலுத்தினார்.

இதன் பின் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், " சிலை கடத்தலில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பங்கு என்ன என்பதை முன்னாள் ஐ.ஜி பொன்மாணிக்கவேல் விளக்க வேண்டும். சிலை கடத்தலில் சம்பந்தப்பட்ட அந்த 2 அமைச்சர்கள் யார் என்பதை பொன் மாணிக்கவேல் வெளியிட வேண்டும். அந்த 2 பேரில் ஒருவர் எடப்பாடி பழனிசாமி என்று சந்தேகிக்கிறோம் . ஏனெனில், ஓய்வு பெற்ற காவல் அதிகாரி பொன் மாணிக்கவேல் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவில் நியமிக்கப்பட்டிருந்த போது அவரை மாற்ற வேண்டுமென்றவர் எடப்பாடி பழனிசாமி. சிலை கடத்தலில் 2 அமைச்சர்கள் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்று சொன்னதற்கு பிறகு தான் உள்துறை அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி பொன்மாணிக்கவேலை மாற்ற முயன்றார். எனவே, இந்த உண்மையை பொன் மாணிக்கவேல் பொதுமக்களுக்கு சொல்ல வேண்டும்.

கொடநாடு கொலை, கொள்ளை, இன்னும் எத்தனை வழக்குகளில் எடப்பாடி பழனிசாமி இருக்கப் போகிறார் என்பதை மக்கள் தெரிந்து கொள்வார்கள்" என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in