அமைச்சர் ராஜ கண்ணப்பன் இலாகா பறிப்பு: காரணம் என்ன?

அமைச்சர் ராஜ கண்ணப்பன் இலாகா பறிப்பு: காரணம் என்ன?

அமைச்சர் ராஜ கண்ணப்பன் வகித்துவந்த போக்குவரத்துத் துறை அமைச்சர் பொறுப்பு பறிக்கப்பட்டு, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை வழங்கப்பட்டதற்கு முதுகுளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் புகார் மட்டுமின்றி வேறு சில காரணங்களும் கூறப்படுகின்றன.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன், முதுகுளத்தூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், போக்குவரத்துக்கழக அமைச்சருமான எஸ்.ராஜ கண்ணப்பன் தன்னை சாதியைச் சொல்லித் திட்டியதாக பகிரங்கமாக புகார் கூறியிருந்தார். இந்நிலையில் இன்று மாலையிலேயே, ராஜ கண்ணப்பனிடம் இருந்து போக்குவரத்துத் துறை பறிக்கப்பட்டுள்ளது. "வெறுமனே வட்டார வளர்ச்சி அலுவலரின் புகார் மட்டும்தான் காரணம் என்றால், அவரது அமைச்சர் பதவியே பறிக்கப்பட்டிருக்கும். ஆனால், போக்குவரத்துத் துறை பறிக்கப்பட்டதற்கு காரணம், அந்தத் துறையில் அவர் செய்த தவறுகள்தான் காரணம்" என்கிறார்கள் திமுகவினர்.

நாடு தழுவிய பொது வேலைநிறுத்தத்தின்போது, அந்தப் போராட்டத்துக்கு திமுக ஆதரவளித்தாலும்கூட அரசு அலுவலகங்கள் வழக்கம்போல் இயங்கும் என்றும், அரசுப் பேருந்துகள் வழக்கம்போல ஓடும் என்றும் திமுக அரசு கூறியிருந்தது. அதையே போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜ கண்ணப்பனும் கூறியிருந்தார். ஆனால், நேற்று (28-ம் தேதி) தமிழகத்தில் 15 சதவீத பேருந்துகள்கூட ஓடவில்லை. இதனால் பள்ளி மாணவர்கள், வேலைக்குச் செல்லும் பெண்கள் உள்பட அனைவரும் பாதிக்கப்பட்டார்கள். இது திமுக அரசு மீது அதிருப்தியை ஏற்படுத்தியது. போக்குவரத்துக் கழகத்தில் டெண்டர், பணி நியமனம் தொடர்பான சில புகார்களும் வந்ததாகத் தெரிகிறது.

எல்லாவற்றுக்கும் மேலாக அமைச்சர் ராஜ கண்ணப்பனுக்கும், திமுகவினருக்கும் இடையிலான உறவு மிகமிக மோசமாக இருந்தது. ராமநாதபுரம் மாவட்டத்தில் மாவட்ட செயலாளர் முத்துராமலிங்கத்துடன் தொடர் மோதல் போக்கை கடைபிடித்துவந்தார் ராஜ கண்ணப்பன். அண்டை மாவட்ட அமைச்சரும், அதே யாதவர் சமுதாயத்தைச் சேர்ந்தவருமான ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பனிடமும் இவருக்கு நல்ல உறவு இல்லை. கட்சியினருடன் எந்தத் தொடர்பும் வைத்துக்கொள்ளாமல் தனி கோஷ்டியாக அவர் செயல்பட்டுவந்ததும், தன்னை ஒரு திமுககாரராகவே கருதாமல் தனி ஆவர்த்தனம் செய்ததுமே அவரது துறை பறிப்புக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

ஏற்கெனவே, தன்னை சந்திக்க வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனை சாதாரண பிளாஸ்டிக் நாற்காலியில் அமரவைத்துவிட்டு, இவர் அரியணை போன்ற பெரிய சோபாவில் உட்கார்ந்திருந்தது சாதி ரீதியான சர்ச்சைக்கு வித்திட்டது. இந்தச் சூழலில், முதுகுளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரனை சாதியைச் சொல்லி திட்டியதாக எழுந்த புகாரும் சேர்ந்துகொண்டிருக்கிறது. எனவே, இந்தப் புகாருக்கும்கூட அவரது துறை பறிப்பில் பங்கிருக்கலாம் என்று கூறுகிறார்கள் திமுகவினர்.

புதிதாக கிடைத்துள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையிலாவது சிறப்பாகப் பணியாற்றி நற்பெயர் ஈட்டுவாரா ராஜகண்ணப்பன்? என்ற கேள்வியும் அவரது ஆதரவாளர்களிடம் எழுந்திருக்கிறது. வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள்ஒதுக்கீடு விவகாரத்தை இனி இவர் டீல் செய்ய வேண்டியதிருக்கும் என்பதால், பாமக நிறுவனர் ராமதாஸ் வேறு அந்தத்துறையை கண்கொத்திப் பாம்பாக கவனிப்பார் என்பதையும் அமைச்சர் நினைவில் கொள்ள வேண்டியதிருக்கும்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in