பாமக தலைமையில் கூட்டணி என அன்புமணி சொல்வதன் அர்த்தம் என்ன?

அன்புமணி ராமதாஸ்
அன்புமணி ராமதாஸ்

“இப்போது பாமக எந்த கூட்டணியிலும் இல்லை” என்று அண்மைக் காலமாக அழுத்தம் திருத்தமாகக் கூறிவருகிறார்  பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்.  “2026-ல் பாமக தலைமையிலான கூட்டணியும், ஆட்சியும்  அமைப்பதற்கான வியூகங்களை 2024 மக்களவைத் தேர்தலில் வகுக்க உள்ளோம்” என்றும் அவர் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்.

2024 மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில்தான் பாமக இடம்பெறும் என்று  அரசியல் வட்டாரத்தில் பேசப்படும் நிலையில், அன்புமணி இப்படிச் சொல்வதன் மூலம்  என்ன நினைக்கிறது பாமக என்ற கேள்வி அனைவரது மனதிலும் எழுந்திருக்கிறது. பாமக தலைமையில் ஆட்சி என்பது அக்கட்சியின் பிரதான நோக்கமாக இருந்தாலும் அதற்கான சாத்தியக்கூறுகள் இன்னமும் தமிழ்நாட்டில் உருவாகவில்லை என்பதே உண்மை. 

வட மாவட்டங்களில் பாமக கணிசமான வாக்குவங்கியை கொண்டிருந்தாலும் தனித்துப் போட்டியிட்டு வெற்றிபெற்று ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு அதற்கு வலு இல்லை. திராவிட கட்சிகளுடனோ அல்லது தேசிய கட்சிகளுடனோ கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்தித்தால் மட்டுமே பாமகவுக்கு பலம்காட்ட முடிகிறது. அப்படி இருக்கையில், பாமக தலைமையில் கூட்டணியும் ஆட்சியும் அமைக்க அக்கட்சியால் எப்படி முடியும் என்ற கேள்வி எழுகிறது. இருப்பினும் அன்புமணியின் பேச்சுக்குப் பின்னால் இருக்கும் அரசியல் கணக்குகளும் அரசியல் வட்டாரத்தில் விரிவாக அலசப்படுகின்றன.    

பாஜகவின்  கூட்டணி கட்டுக்குள்  பாமக இருக்கிறது என்று சொல்லப்படும் நிலையில், அன்புமணியின் வார்த்தைகளில் வெளிப்படுவது கடந்தகால அனுபவத்தால் ஏற்பட்ட எச்சரிக்கை உணர்வு என்கிறார்கள்.  2014 மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் இணைந்து போட்டியிட்டது பாமக.  தருமபுரியில் அன்புமணி வெற்றி பெற்றார்.  அப்போது அவர் நிச்சயம் அமைச்சராக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு பாமகவினருக்கு இருந்தது.  ஏனென்றால், கடந்த காலங்களில் திமுக அல்லது அதிமுக கூட்டணியில் பாமக போட்டியிட்டு அன்புமணி வெற்றி பெற்றபோதெல்லாம் அவருக்கு மத்திய அமைச்சர் பதவி சாத்தியமாகி இருக்கிறது.  

அதனால்  2014-லும் அன்புமணிக்கு அந்த எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், அது நடக்கவில்லை. அதனால் இம்முறை அமைச்சர் பதவிக்கான உத்தரவாதத்தை பாஜகவிடமிருந்து பெற்றுவிட வேண்டும் என்பதற்காகவே, ‘எந்தக் கூட்டணியிலும் இல்லை’ என்ற அஸ்திரத்தை பாமகவும் அன்புமணியும் எடுத்து வீசிவருவதாகச் சொல்கிறார்கள். 

அதேபோல், 2019 மக்களவைத் தேர்தலில் பாமகவுக்கு 7 தொகுதிகளை வழங்கியது அதிமுக. இம்முறை அதை பத்தாக உயர்த்த வேண்டும் என்பதும் பாமகவின் திட்டம் என்கிறார்கள். அதற்காக அதிமுகவிடம் பேரம் பேசுவதற்காகவும் பாமக இப்படிப் பேச ஆரம்பித்திருக்கலாம் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். கடந்த காலங்களில் இப்படியான செயல்பாடுகள் மூலமே பாமக தான் நினைத்ததை எல்லாம் சாதித்துக் கொண்டிருக்கிறது என்பதும் வரலாறு. 

இன்னொரு பக்கம், தாங்கள் எந்தக் கூட்டணியிலும் இல்லை என்று முன்னமே தெரிவித்துவிட்டால் தங்களுக்காக திமுகவின் கதவுகள் திறக்கவும் வாய்ப்புக் கிடைக்கும் என்பதும் பாமகவின் கணக்கு. திமுக தலைமையிலான ஆட்சி அமைந்தபிறகு அனைத்து தேர்தல்களிலும் திமுக கூட்டணியே வெற்றிபெற்று வருவதையும் பாமக உற்றுக் கவனிக்காமல் இருக்காது. அதிமுக சிதறுண்டு கிடக்கும் நிலையில், அதிமுக கூட்டணி என்பதைவிட திமுக கூட்டணி என்பதே தங்களுக்குச் சாதகமாக இருக்கும் என்பதும் பாமக முக்கிய தலைவர்களின் கணிப்பு. அதற்காகவே, ராமதாஸ் உள்ளிட்ட அத்தனை தலைவர்களும் திமுக அரசை விமர்சிக்கும் விதத்தில் மென்மையான போக்கையே கடைபிடித்து வருகிறார்கள்.

சட்டப்பேரவையில் கருணாநிதி படத்திறப்பு விழாவை அதிமுக புறக்கணித்தாலும் பாமகவின் 5 எம்எல்ஏ-க்களும் பங்கேற்றனர். அதிமுக அரசு அறிவித்த வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் ஒதுக்கீடு தொடர்பான அரசாணையை திமுக அரசு பிறப்பித்தது. அதற்காகவும் இன்னும் பல விஷயங்களில் திமுக அரசின் செயல்பாடுகளை பாமக வெளிப்படையாகவே பாராட்டி வருகிறது. ஆக, திமுக கூட்டணியில் பாமக இணைவதற்கு பெரிதாக எந்தத் தடங்கலும் இல்லை என்பதே இப்போதைய நிலை. தேர்தலுக்குத் தேர்தல் கூட்டணியை மாற்றிக்கொள்ளும் பாமக, வரும் தேர்தலில் திமுக கூட்டணிக்கு மாறாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. 

அதேசமயம், திமுக கூட்டணியில் விசிக இருக்கும் நிலையில் அங்கு பாமக எப்படி இணைய முடியும் என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது. ஆனால், 2011 சட்டப் பேரவைத் தேர்தலிலேயே திமுக கூட்டணியில் பாமகவும் விசிகவும் ஒரே அணியில் இடம்பெற்ற வரலாறும் உண்டு. எனவே, இந்தக் கேள்வி எல்லாம் பாமகவுக்கு ஒரு பெரியவிஷயம் இல்லை என்பதாக கருத்துச் சொல்லியிருக்கிறார் பாமக பொருளாளர் திலகபாமா.

அண்மையில் பேட்டி ஒன்றில் பேசிய அவர், ’’ஒருவரை விலக்குவதற்காக நாங்கள் அரசியல் நடத்தவில்லை. எல்லோரையும் அரவணைப்பதற்காக நாங்கள் அரசியல் செய்கிறோம். திருமாவளவனை இந்தப் பக்கம் வந்து இயக்கம் நடத்துங்கள் என்று கைசேர்த்து அழைத்து வந்தவர் ராமதாஸ். திருமாவளவன் திருமணம் செய்துகொள்ளவேண்டும் என அவரிடமே அன்போடு சொல்லி வருபவர். விசிக இருந்தால், பாமக அருகே நிற்காது என்ற தீண்டாமை எண்ணம் என்றைக்குமே பாமகவுக்கு கிடையாது.  எனவே, பாமக வந்தால் விசிக கூட்டணியில் இருந்து வெளியேறும் என்பதெல்லாம் வெறும் யூகம்” எனத் தெரிவித்தார். 

பாமக பொருளாளரே இப்படிச் சொன்னாலும் கூட்டணியில் நிறையக் கட்சிகளை தக்கவைத்திருக்கும் திமுகவுக்கு, பாமக எதிர்பார்க்கும் அளவுக்கு தொகுதிகளை ஒதுக்க முடியுமா என்பதும் பெரிய கேள்வி. எனினும் ஆட்சி மீது அண்மைக் காலமாக மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் ஒரு சில அதிருப்திகளை சமாளிக்க பாமகவும் உடன் இருந்தால் நல்லது என திமுக நினைத்தால் அந்தக் கட்சிக்கு திருப்தியான அளவுக்கு தொகுதிகளை ஒதுக்க முன் வரலாம்.  

கே.பாலு
கே.பாலு

பாமகவை வட்டமடிக்கும் இந்தச் செய்திகள் குறித்து பாமக செய்தித்தொடர்பாளரும் வழக்கறிஞமான கே.பாலுவிடம் பேசினோம். ’’யாருடன் கூட்டணி அமைப்போம் யாருடன் கூட்டணி இல்லை என்பதையெல்லாம் இப்போது கலந்து பேச இயலாது. அது குறித்து இப்போது முடிவு எதுவும் எட்டப்படவில்லை. தேர்தல் நெருங்கும் நேரத்தில்  கட்சியின் உயர்மட்டக் குழு மருத்துவர் ஐயா தலைமையில் கூடிப் பேசித்தான் முடிவு எடுக்கும். எனினும் பாமக ஆட்சியமைக்க வேண்டும் என்பதே எல்லோருடைய விருப்பமாக இருக்கிறது. 

வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்க அதிமுக முன் வந்ததால் கடந்த தேர்தலில் பாமக தன்னை சமரசம் செய்து கொண்டு அதிமுக கூட்டணிக்கு இசைந்தது.  ஆனால், 2016 சட்டப் பேரவைத் தேர்தலில் பாமக தனித்துத்தான் போட்டியிட்டது. அந்த தைரியமும் தெம்பும் இருப்பதால் தான் பாமக தலைமையில் தான் ஆட்சி என்பதற்கான இலக்கை நோக்கி செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். பாமக தலைமையில் கூட்டணி ஆட்சி அமைப்போம் என்று எங்கள் தலைவர் உறுதியாகச் சொல்லியிருக்கிறார்” என்ற அவரிடம், பாமக தலைமையிலான ஆட்சி என்ற முன்னெடுப்பு கடந்த காலங்களில்  சக்சஸ் ஆகவில்லையே...  திரும்பவும் பாமக அதே முயற்சியை மேற்கொள்கிறதா? என்று கேட்டதற்கு, 

“கலைஞர், ஜெயலலிதா இல்லாத நிலையில் எதிர் வரும் தேர்தலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம்.  60 தொகுதிகளில் எங்களுக்கு 30 சதவீத வாக்கு வங்கி இருக்கிறது. மேலும் 30 தொகுதிகளில் 20 சதவீத வாக்கு வங்கி இருக்கிறது. இது எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு உண்மை.  இந்த 90 தொகுதிகளை கைப்பற்றிவிட்டாலே எங்களால் ஆட்சி அமைத்துவிட முடியும்” என்றார் பாலு.  

பாமக, ஆட்சியைப் பிடிக்க அச்சாரம் போடுகிறதா... அல்லது பேரம் பேசுவதற்கான முன்னேற்பாடு பிரச்சாரத்தை முந்திக்கொண்டு தொடங்கி இருக்கிறதா என்பது போகப் போகத்தான் தெரியும்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in