நாகர்கோவில் மாநகராட்சி கட்டிடத்திற்கு என்ன பெயர்?: சர்ச்சை வெடித்த நிலையில் மேயர் பதில்

மேயர் மகேஷ்
மேயர் மகேஷ்நாகர்கோவில் மாநகராட்சி கட்டிடத்திற்கு என்ன பெயர்?: சர்ச்சை வெடித்த நிலையில் மேயர் பதில்

நாகர்கோவில் மாநகராட்சிக்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. ஏற்கெனவே நாகர்கோவில் நகராட்சியாக இருந்தபோது இருந்த இடத்தில் இருந்து மாற்றலாகி புதிதாக வேறு இடத்தில் கட்டுமானப் பணிகள் நடந்துமுடிந்துள்ளது.

இதற்காக இந்த இடத்தில் இருந்த கலைவாணர் அரங்கம் இடிக்கப்பட்டது. புதிதாகக் கட்டப்பட்டிருக்கும் மாநகராட்சி கட்டிடத்திற்கு கலைவாணர் பெயரைச் சூட்டாவிட்டால், முதல்வர் ஸ்டாலின், இந்நிகழ்வில் கலந்துகொள்ளக் கூடாது என முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இதற்கு நாகர்கோவில் மேயர் மகேஷ் பதில் சொல்லியுள்ளார். முந்தைய அதிமுக ஆட்சியில் நாகர்கோவில் மாநகராட்சியாக தரம் உயர்ந்தது. இதனைத் தொடர்ந்து அப்போதைய நகராட்சி வசம் இருந்த கலைவாணர் அரங்கத்தை இடித்துவிட்டு, அந்த இடத்தில் மாநகராட்சிக்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டது. இந்நிலையில் சிலமாதங்களுக்கு முன்பு நாகர்கோவில் மேயர் மகேஷ் தலைமையில் நடந்த கவுன்சில் கூட்டத்தில் புதிதாகக் கட்டப்பட்டு இருக்கும் மாநகராட்சிக் கட்டிடத்திற்கு கலைஞர் அரங்கம் என பெயர் வைக்க இருப்பதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் சமூகத்தினர் போராட்டத்தில் குதித்தனர். பாஜக, அதிமுக உள்ளிட்ட எதிர்கட்சிகளும் அவர்களுக்கு ஆதரவு கொடுத்தன.

இந்நிலையில் பிரச்சினை பெரிதாகவே தமிழக அரசே, மாநகராட்சி கட்டிடங்களுக்கு அரசுதான் பெயர்வைக்க முடியும். கவுன்சில் கூட்டத்தைக் கூட்டி பெயர்வைக்கமுடியாது என தன்னிலை விளக்கம்கொடுத்து பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

இந்நிலையில் இந்தவாரம் இந்தப் புதிய கட்டிடம் முதல்வர் ஸ்டாலினால் திறக்கப்படுகின்றது. அந்தக் கட்டிடத்தில் இதுவரை கலைவாணர் பெயர் போடவில்லை என முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டைக் கிளப்பினார்.

இதுகுறித்துப் பேசிய திமுக மாவட்ட செயலாளரும், நாகர்கோவில் மேயருமான மகேஷ், “மாநகராட்சி புதுகட்டிடத்திற்கு பெயர் வைப்பதை தமிழக அரசுதான் முடிவுசெய்யும். ஏற்கெனவே இந்த கட்டிடத்திற்கு கலைவாணர் பெயர் இருந்தது. மண்ணின் மைந்தருக்கு பெருமைசேர்க்கும் வகையில் அந்தப் பெயரே இருக்கட்டும் என முதல்வர் கூறியுள்ளார். கலைவாணர் பெயரை கலைஞரே பல நினைவுச் சின்னங்களுக்குச் சூட்டியுள்ளார். மாநகராட்சி அலுவலகக் கட்டிடம் தமிழக அரசு நிதியில் கட்டப்பட்டது. மாநகராட்சி பொதுநிதியில் கட்டப்படவில்லை. அதனால் பெயர்வைப்பதை தமிழக அரசு பார்த்துக்கொள்ளும். அதுமட்டும் இல்லாமல் கட்டிடங்களுக்கு பெயர்வைப்பதை தமிழக அரசுதான் முடிவுசெய்யும் எனவும் அரசாணையே பிறப்பிக்கப்பட்டு உள்ளது ”என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in