திராவிடமா, தமிழ்த் தேசியமா?

தமிழக அரசியல் சூழலில் சூல்கொள்ளும் சித்தாந்த மோதல்
திராவிடமா, தமிழ்த் தேசியமா?

தேர்தலுக்கு முன்பு இந்துக்களுக்கு எதிரான கட்சி என்ற பாஜகவினரின் கடுமையான தாக்குதலை எதிர்கொண்ட திமுக, தேர்தலுக்குப் பிறகு தமிழ்ப் பகையாளர்களின் கட்சி என்ற தாக்குதலை எதிர்கொள்கிறது. இதை, சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சியினர் முன்பைவிட வீரியத்துடன் முன்னெடுக்கிறார்கள்.

நடவடிக்கைகளும் எதிர்வினைகளும்

இப்படியான விமர்சனங்களை முன்கூட்டியே கணித்திருந்த மு.க.ஸ்டாலின், தனது தேர்தல் அறிக்கையில் தமிழ், தமிழ் உணர்வு தொடர்பாக ஏராளமான வாக்குறுதிகளைக் கொடுத்திருந்தார். ஆட்சிக்கு வந்த பிறகும்கூட வேகமாக சில திட்டங்களை நிறைவேற்றினார். திருக்கோயில்களில் தமிழில் அர்ச்சனை, தமிழில் படித்தவர்களுக்கே தமிழகத்தில் வேலை என்பதை உறுதி செய்யும் வகையில் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் தமிழ்ப் பாடம் கட்டாயம், தொல்லியல் ஆய்வுகளுக்குக் கூடுதல் முக்கியத்துவம், முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கான அடிப்படை வசதி மேம்பாடு என்பது போன்ற அறிவிப்புகள் உதாரணம். ஆனால், இதையும் ரொம்ப எளிதாக விமர்சித்துவிடுகிறார்கள் தமிழ்த் தேசியர்கள்.

"இப்பதான் முதல் முறையாக ஆட்சிக்கு வருகிறதா திமுக? உங்கள் அப்பாவே 5 முறை முதல்வராக இருந்திருக்கிறாரே? அப்போதெல்லாம் ஏன் இதைச் செய்யவில்லை? தமிழ்... தமிழ் என்று பேசிக்கொண்டே தமிழை அழித்தவர்கள் நீங்கள். பயிற்று மொழியாக, பாட மொழியாக எங்கள் தமிழ் இருக்கிறதா? ஆங்கிலத்தைப் பயிற்றுமொழியாக்கி, இங்குள்ள வேளாண்மை, சித்த மருத்துவத்தைக்கூட ஆங்கிலத்தில் சொல்லித் தருகிறீர்கள். எங்கள் வீட்டுப் பிள்ளைகள் வேளாண்மையை ஆங்கிலத்தில் படித்து ஆஸ்திரேலியாவில் போய் வெண்டைக்காய் பயிரிடப் போகிறார்களா?" என்று தன் பாணியில் விமர்சிக்கிறார் சீமான். அந்தக் கேள்வியில் நியாயம் இருப்பதால், ஓரளவு ஆதரவும் இருக்கிறது.

மா.சோ.விக்டர்
மா.சோ.விக்டர்

தமிழ்ச் தேசிய உணர்வு அதிகரிக்கிறதா?

"பேச்சால் வளர்த்த கட்சியை, தன்னுடைய பேச்சாலேயே அழிக்கிறார் சீமான். நாம் தமிழர் கட்சியின் கதை முடிந்துவிட்டது" என்று 2021 சட்டபபேரவைத் தேர்தலின்போது திமுகவினர் சொன்னார்கள். ஆனால், 30 லட்சம் ஓட்டுகள் வாங்கி, தமிழ்நாட்டின் 3-வது பெரிய கட்சி நாங்களே என்று மார்தட்டுகிறார்கள் சீமானின் தம்பிகள். “இதைப்போல இரு மடங்கு வாக்கு கிடைத்திருக்க வேண்டும். ஜெயிக்கிற கட்சிக்கு வாக்களிக்கும் மனோபாவமும், வாக்குக்குக் காசு தரும் போக்கும்தான் அந்த வாக்குகள் கிடைக்காமல் போனதற்குக் காரணம்” என்றும் சொல்லிக்கொள்கிறார்கள் நாம் தமிழர் கட்சியினர். அந்தக் கூற்றில் உண்மை இல்லாமல் இல்லை.

"இந்திக்கு எதிரான போராட்டத்தைத் தன்வயப்படுத்தி, தமிழர் நிலத்தின் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றிய கட்சி திமுக. இதுவரையில் அவர்கள் சொல்வதற்கெல்லாம் தலையாட்டிக்கொண்டுதானே இருந்தோம்? ஆனால், 2009-க்குப் பிறகு உண்மையிலேயே ஒரு மாற்றம் தமிழர்களிடம் வந்திருக்கிறது. ஈழத் தமிழர்கள் மீதான போரை நிறுத்துவதற்காக கருணாநிதி உண்ணாவிரத நாடகம் நடத்தினாரே, அதன் பிறகுதான், ‘இவர் நம்மவர் இல்லை, திமுகவும், அதிமுகவும் நமக்கான கட்சிகளல்ல’ என்கிற புரிதல் தமிழர்களுக்கு வந்திருக்கிறது. விரைவில் திராவிடம் என்ற கற்பனைக் கொள்கை வீழ்த்தப்படும்" என்கிறார் தமிழ்த் தேசிய உணர்வாளர் மா.சோ.விக்டர்.

சீமான்
சீமான்

புரிதலில் இருக்கும் போதாமைகள்

தமிழகத்தில் தமிழ்த் தேசிய உணர்வு வளர்ந்துள்ளது என்பது எந்த அளவிற்கு உண்மையோ, அதே அளவிற்கு தமிழ்த் தேசியம் பற்றிய முழுமையான புரிதலும், தெளிவான திட்டமும் அவர்களில் பெரும்பான்மையினரிடம் இல்லவே இல்லை என்பதும் உண்மையே. தமிழ்த் தேசியம் என்பது தனி நாடு கோரிக்கையா அல்லது தன்னாட்சி (சுயாட்சி) உரிமையா என்பது குறித்த தெளிவு சீமானிடமே இருப்பதாகத் தெரியவில்லை. பல ஆண்டுகளுக்கு முன்பு, தமிழ்நாடு தமிழருக்கே என்று முதலில் குரல் கொடுத்தவர் பெரியார்தான் என்று அங்கீகரிக்கும் மனமும் அவர்களிடம் இல்லை.

ஒப்பீட்டளவில் திக, அடுத்து திமுக, பிறகு பாமக, விசிக, மதிமுக போன்ற கட்சிகளில் தமிழ் உணர்வாளர்கள் அதிகம் என்றாலும், பாமகவிலும் மருத்துவர் ராமதாஸ் தலைமுறை வேறு, அன்புமணி தலைமுறை முற்றிலும் வேறு என்பதே இன்றைய சூழல். வைகோவோ முழு திமுககாரராகவே இப்போது நடந்துகொள்கிறார். ஆரம்ப காலங்களில் தமிழ்த் தேசியம் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவனும், இப்போது, “தமிழ்த் தேசியம் என்ற பெயரில் இப்போது சாதி தேசியம் பேசுகிறார்கள்” என்று கூறி, அந்த இடத்தைவிட்டு நகர்ந்துவிட்டார். ஆக, களத்தில் தமிழ்த் தேசிய அரசியலில் வீரியமாக இருப்பது நாம் தமிழர் கட்சி என்பதாலேயே சீமானுக்கு இவ்வளவு ஓட்டு கிடைக்கிறதே தவிர, தமிழ்த் தேசிய சித்தாந்தத்தைக் கண்டுபிடித்தவர் என்றோ, அதை முழுமையான புரிதலுடன் முன்னெடுப்பவர் என்றோ அவரைச் சொல்லிவிட முடியாது.

திமுகவை மையம் கொண்ட அரசியல்

காலம் எப்போதுமே வரலாற்றுத் தலைவர்களுக்காகக் காத்திருப்பதில்லை. கிடைக்கிற தலைவர்களை வைத்தே வரலாற்றைப் படைத்துவிட்டுப் போய்விடுகிறது. தமிழ்நாட்டில் தேசியக் கட்சிகள் எழவே முடியாத அளவுக்கு ஓங்கி அடித்த அண்ணாவைப்போல, இங்கே திராவிடக் கட்சிகளை வீழ்த்துவாரா சீமான்? வாய்ப்பில்லை ராஜா என்றோ, அவரால் நிச்சயம் முடியும் என்றோ உடனடியாகப் பதில் சொல்லிவிட முடியவில்லை. காரணம், திராவிட இயக்கம் தோன்றிய காலத்திலேயே அதற்கு எதிரிகள் இருந்தார்கள். அதிலும் பிராமணர் அல்லாத, காங்கிரஸ் அல்லாத ஒரு தலைவர் சீமானைப் போலவே, திராவிட இயக்கத்தை எதிர்ப்பதையே முழுநேர வேலையாகச் செய்தார் என்றால், அது மபொசி தான்! ராஜாஜியின் குலக்கல்வித் திட்டத்தை ஆதரித்த, சம்ஸ்கிருதத்தை ஆதரித்த, சுயமரியாதைத் திருமணத்தை ஏற்க மறுத்த மபொசி, திராவிட இயக்கத்தை மட்டும் கடுமையாக எதிர்த்தார்.

அவரது திராவிட எதிர்ப்பும்கூட 1967-ல் முடிவுக்கு வந்துவிட்டது. திமுக, அதிமுக உதவியுடன் மாறி மாறி சட்டப்பேரவை உறுப்பினராகவும், மேலவை உறுப்பினராகவும் ஆனவர், தன் பதவிக்காலம் எல்லாம் முடிந்த பிறகு, காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து தன்னுடைய திராவிட இயக்க எதிர்ப்பை மறுபடியும் புதுப்பித்துக்கொண்டார். மபொசி அளவுக்கு இல்லை என்றாலும் நாம் தமிழர் கட்சியின் நிறுவனர் சி.பா.ஆதித்தனாரும் திராவிட இயக்க எதிர்ப்புணர்வு கொண்டவராகவே இருந்தார். திமுக கூட்டணியில் சேர்ந்து, பிறகு திமுகவிலேயே இணைந்து சபாநாயகராகவும், அமைச்சராகவும் பதவி வகித்துவிட்டுப் போய்விட்டார்.

பழ.நெடுமாறன் போன்றவர்கள்கூட திராவிட இயக்கத்துக்கு எதிரான மனநிலையுடன் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தவர்கள்தான். இன்று திமுகவின் போர்ப்படைத் தளபதிகள் போல செயல்படுகிற விசிக-வின் ரவிக்குமார் எம்பி., திராவிட இயக்கத் தமிழர் பேரவை சுப.வீரபாண்டியன் போன்றோர்கூட திராவிட இயக்கங்களுக்கு எதிராகக் கடுமையாகப் பேசிய வரலாறு உண்டு. நாளை சீமானும் அப்படி வந்துவிடுவார் என்று சொல்ல முடியாது என்றாலும், அவர் திமுகவிடம் காட்டுகிற அதே எதிர்ப்பை அதிமுகவிடம் காட்டவில்லை என்பதை மறுக்க முடியாது. ஜெயலலிதாவுக்காகப் பிரச்சாரம் செய்தது, சசிகலா நடராஜனிடம் நிதி பெற்றது, சிறை மீண்ட சின்னம்மாவை வீடு தேடிச் சென்று சந்தித்தது என்று அவரிடமும் மபொசி தன்மை தென்படவே செய்கிறது.

சுப.வீரபாண்டியன்
சுப.வீரபாண்டியன்

மோதலின் முடிவு எப்படி இருக்கும்?

எப்படிப் பார்த்தாலும், இனி தமிழ்நாட்டில் 2 திராவிடக் கட்சிகளுக்கு வேலை இல்லை. ஒரு திராவிடக் கட்சி, ஒரு தேசியக் கட்சி, ஒரு தமிழ்த் தேசியக் கட்சி என்றே அரசியல் நடக்கும் என்று தோன்றுகிறது. அதிமுகவை பாஜக விழுங்கப் பார்க்கும். திமுகவை தமிழ்த் தேசியம் கரைக்க முனையும். இந்தியாவில் கம்யூனிஸ்ட், பாஜக இரண்டும்தான் கொள்கையுள்ள கட்சிகள். மற்றவை எல்லாம் ‘பாப்புலரிஸ்ட்’ கட்சிகள் என்றுகூட ஒரு கூற்று உண்டு. அதாவது, காலத்துக்கேற்ப கொள்கையை மாற்றிக்கொண்டு, வேறு கட்சியின் கொள்கைகளையும் சேர்த்துக்கொண்டு தன்னை நிலைநிறுத்திக்கொள்ளும் கட்சிகளே பாப்புலரிஸ்ட்கள். திமுக அதையும் செய்ய முயலலாம்.

இதுகுறித்து திராவிட இயக்கத் தமிழர் பேரவை சுப.வீரபாண்டியன் என்ன சொல்கிறார்?

“திராவிட இயக்கம் தோன்றிய காலந்தொட்டே அதற்கு எதிரான குரல்களும் ஒலிக்கத் தொடங்கிவிட்டன. இன்று அவை மீண்டும் சமூக, அரசியல் அரங்குகளில் கேட்கத் தொடங்கியுள்ளன. திராவிடம்தான் தமிழுக்கும், தமிழ்த் தேசிய உணர்வுக்கும் எதிரி என்பதுபோல சிலர் பேசியும் எழுதியும் வருகின்றனர். உண்மையில் இந்த வாதமே தேவையற்றது. தமிழின்றி திராவிடம் இல்லை, திராவிடம் இன்றி தமிழ் இல்லை. திராவிட இயக்கத்தினரைப் பொறுத்தவரையில் திராவிடம் என்பது ஆரியத்தின் எதிர்ச்சொல். அதற்கும் தமிழுக்கும் உறவு உண்டேயன்றிப் பகையில்லை. எப்படியாவது திராவிட இயக்கத்தை வேரறுத்துவிட வேண்டும் என்று சில தமிழ்த் தேசிய நண்பர்கள் கருதுகின்றனர். ஆனால், எப்படியாவது தமிழ்த் தேசிய உணர்வு இங்கே தழைத்தோங்க வேண்டும் என்று திராவிட இயக்கத்தினரே விரும்புகின்றனர்.

மொழி சார்ந்து மட்டுமின்றி, சமூக நீதிப் பார்வையோடும், தமிழ்த் தேசிய விழிப்புணர்வும் வேண்டும் என்று விரும்புகின்ற யாராலும் திராவிட இயக்கத்தின் பங்களிப்பை மறுத்துப் பேச முடியாது. சாதிக்கு எதிரான போராட்டத்தில் பிறந்தது என்பதால் திராவிடக் கட்சிகளை ஒழித்துவிட வேண்டும் என்று முன்னேறிய வகுப்பினரும், சாதிய ஆதரவாளர்களும் பல்வேறு முகங்களோடு திராவிட இயக்க எதிர்ப்புக் களத்துக்கு வந்துகொண்டே இருக்கிறார்கள். சாதிய உணர்வு எவ்வளவு இறுக்கம் பெற்றாலும் அதனால் திராவிட இயக்க உணர்வு ஒருநாளும் வீழ்ந்துவிடாது" என்கிறார் சுபவீ.

சமூக வலைதளங்களின் யுகத்தில் தேர்தல் காலத்தில் மட்டுமல்லாமல், தினமும் கருத்து மோதல்களும் விவாதங்களும் நடந்துகொண்டேயிருக்கின்றன. எனவே, அரசியல் சூழலில் மாறுதல்கள் நிகழலாம் என்பதை மறுக்க முடியாது. ஆனால், சிந்தனை வீச்சு கொண்ட தமிழகத்தில் வலுவான வாதங்கள் இல்லாமல் வெறும் வாய்ப்பேச்சில் யாராலும் வென்றுவிட முடியாது. தமிழகத்தின் எதிர்காலத்தை வார்த்தைகள் அல்ல, செயல்கள்தான் தீர்மானிக்கப்போகின்றன என்று மட்டும் உறுதியாகச் சொல்லலாம்!

Related Stories

No stories found.