50 ஆயிரம் பிளஸ்2 மாணவர்களின் எதிர்காலம் என்ன?- சட்டப்பேரவையில் அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்

அமைச்சர் அன்பில் மகேஷ்
அமைச்சர் அன்பில் மகேஷ் 50 ஆயிரம் பிளஸ்2 மாணவர்களின் எதிர்காலம் என்ன?- சட்டப்பேரவையில் அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்

50 ஆயிரம் மாணவர்கள் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதாதது குறித்து சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் அளித்தார்.

12-ம் வகுப்பு பொதுத்தேர்வை 50,000 மாணவர்கள் எழுதாதது குறித்து இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ், திமுக மற்றும் அதிமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் ஒன்றிணைந்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர். அதிமுக உறுப்பினர் செங்கோட்டையன் பேசுகையில், "12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 50 ஆயிரம் பேர் கலந்து கொள்ளவில்லை என்பது அதிர்ச்சி அளிக்கிறது. இத்தனை பேர் ஏன் தேர்வு எழுதவில்லை என்பதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். கடந்த ஆண்டில் 40 ஆயிரம் பேர் தேர்வு எழுதவில்லை என்று அரசு சொல்லும் நிலையில், இந்த ஆண்டு 50,000 பேர் தேர்வு எழுதவில்லை என சொல்வது அதிர்ச்சி அளிக்கிறது. எனவே அரசு உடனடியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என்றார்.

இதற்கு பதில் அளித்து பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், "பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வாழ்த்து சொல்வது மட்டும் என்னுடைய கடமை அல்ல. இத்தனை மாணவர்கள் ஏன் வரவில்லை என முதலில் கவனத்தை ஈர்த்தது தமிழ்நாடு முதலமைச்சர் தான். பல்வேறு சலுகைகளை பள்ளிக்கல்வித்துறைக்கு வழங்கியுள்ளோம். அப்படி இருக்கும்போது இந்த மாணவர்கள் எங்கே சென்றார்கள் என்ற கேள்வி அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ளது.

2020- 21-ம் கல்வி ஆண்டில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத பதிவு செய்த அனைத்து மாணவர்களும் கொரோனா தொற்று காரணமாக தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்கள். தேர்வு நடத்த முடியாத சூழ்நிலையில் அன்று ஆல் பாஸ் என அறிவிக்கப்பட்ட மாணவர்கள் தான் இன்று 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள். அதன் தொடர்ச்சியாக அவர்கள் 2021-22ல் 11-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 8,85,051 மாணவர்கள் பதிவு செய்து அதில் 41,306 மாணவர்கள் தேர்வில் கலந்து கொள்ளவில்லை. கடந்தாண்டு 11-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 83,811 பேர் தோல்வியடைந்தனர். அதன் தொடர்ச்சியாக 1,90,000 மாணவர்கள் இடைநிற்றல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, அதில் 1,25,000 பேர் பள்ளியில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் 78,000 மாணவர்கள் தேர்வு எழுதினர். நாங்கள் நடவடிக்கை எடுக்காமல் இருந்திருந்தால் இந்த மாணவர்கள் பள்ளிக்கு வராமலே போயிருப்பார். அவர்களை மீண்டும் பள்ளிக்கு வர வைத்து 11-ம் வகுப்பு தேர்வு எழுதி 50,000 மாணவர்களை தேர்ச்சி பெற வைத்துள்ளோம்.

நாங்கள் கொரோனாவை காரணமாக சொன்னாலும் இதையெல்லாம் கண்டறிந்து எதிர்காலத்தில் இதுபோன்று ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். 2022-ம் கல்வியாண்டில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு பதிவு செய்தவர்கள் 8,36,593. அதில் மொழிப்பாட தேர்வுக்கு வராதவர்கள் 47,943. அரசுப்பள்ளிகளில் 38,015 மாணவர்கள், அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் 8,848 மாணவர்கள், தனியார் பள்ளிகளில் 1,080 மாணவர்கள். மொழிப்பாட தேர்வுக்கு வருகைப்புரியாத 47,943 மாணவர்களில் 40,509 மாணவர்கள் முந்தைய ஆண்டு 11-ம் தேர்வுக்கு வருகைபுரியாத தேர்ச்சி பெறாத மாணவர்களும் உள்ளடங்குவார்கள்.

ஒவ்வொரு பள்ளிகளும் தலைமை ஆசிரியர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு தேர்வு எழுதாத மாணவர்களின் விவரங்கள் சேகரிக்கப்படும். தேர்வு எழுதாத மாணவர்களுக்கு துணை தேர்வின் அவசியத்தை விளக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். ஒரு வாரத்தில் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட நாட்கள் மாணவர்கள் பள்ளிக்கு வரவில்லை என்றால் மாணவர்களின் விவரப்பட்டியல் தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பப்பட்டு, கண்காணிக்கப்பட்டு தலைமை ஆசிரியர்கள் உரிய நடவடிக்கை எடுப்பார்கள். மூன்று வாரத்தில் 9 நாட்கள் மாணவர்கள் பள்ளிக்கு வரவில்லை என்றால் மாவட்ட அதிகாரிக்கு அனுப்பப்பட்டு அவர்கள் மூலம் கண்காணிக்கப்படும். நீண்ட நாட்கள் பள்ளிக்கு வராத மாணவர்களின் பெற்றோர்கள் சமுதாய பொருளாதாரம் கண்டறியப்பட்டு முன்னேற நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in