பயந்துவிட்டதா... பதுங்கிவிட்டதா அமமுக?

திடமாக நின்ற தினகரன் திடீரென பின்வாங்கியது ஏன்?
டிடிவி தினகரன்
டிடிவி தினகரன்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தனயன் இடத்தில் தந்தை ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் காங்கிரஸ் சார்பில் களம் காண்கிறார். அதிமுக முகாமிலோ தென்னரசுவின் வெற்றிச் செய்தியை விட முக்கியமானதாக இரட்டை இலை சின்னம் கிடைத்த விஷயத்தை பூரித்துக் கொண்டாடுகிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள். இதற்கு மத்தியில் தான், அறிவித்த வேட்பாளரை வாபஸ் பெற்று, போட்டியிலிருந்து விலகி இருக்கிறார் டிடிவி தினகரன்.

டிடிவி தினகரன்
டிடிவி தினகரன்

இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்தே தினகரன் உற்சாகமாகத்தான் இருந்தார். இரட்டை இலை சின்னத்துக்குச் சிக்கல் வரும். அதை முன்னிறுத்தி அணிகள் இணையும். அதன் மூலம் தனக்கும் ஒரு வழி பிறக்கும் என நம்பிக்கொண்டிருந்தார் தினகரன். இதையெல்லாம் மனதில் வைத்தே அமமுக சார்பிலும் பொறியியல் பட்டதாரியான சிவபிரசாத்தை வேட்பாளரை அறிவித்தார். அறிவித்த சூட்டுடன் கடந்த 3-ம் தேதி வேட்பு மனுவையும் தாக்கல் செய்தார் சிவபிரசாத்.

ஒருவேளை, அணிகள் இணைப்பு சாத்தியமாகாமல் போய் தனித்தனியே மூன்று அணிகளும் போட்டியிட்டால் அமமுகவுக்கு அதிகமான வாக்குகளை பெறுவதற்கான திட்டங்கள் தினகரன் வசம் இருந்ததாகச் சொல்கிறார்கள். ஆனால், உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டல் தற்காலிகமாக ஈபிஎஸ் தரப்புக்குச் சாதகமாக இருந்து இரட்டை இலையும் அவருக்கே சாத்தியமாகிப் போனதால் டிடிவி டோட்டல் அப்செட். இந்த நெருக்கடியைச் சமாளிக்க முடியாமல் ஓபிஎஸ் போட்டியிலிருந்து ஒதுங்க, அவர் வழியில் டிடிவியும் ஜகா வாங்கினார்.

அமமுக வேட்பாளர் சிவபிரசாத்
அமமுக வேட்பாளர் சிவபிரசாத்

2021 பொதுத்தேர்தலில் இதே தொகுதியில் அமமுக வேட்பாளர் முத்துக்குமரன் 1,204 வாக்குகள் மட்டுமே பெற்று காப்புத் தொகையை இழந்தார். இது நோட்டாவுக்கு விழுந்த வாக்குகளைவிட குறைவு. இதையெல்லாம் கணக்குப் போட்டுப் பார்த்து இம்முறை சீனியர்கள் சுதாரித்து ஒதுங்கினர். “இந்தத் தொகுதியில் கொங்கு வேளாளர் சமூகத்தினரின் வாக்குகள் 60 ஆயிரத்திற்கும் மேல் உள்ளது. இதில் பெரும்பகுதி ஈபிஎஸ் நிறுத்தி இருக்கும் தென்னரசுக்கு சாதகமாக திரும்பும். எனவே, அதை மீறி நாம் இங்கே அதிகமான வாக்குகளைப் பெறுவது என்பது சிரமமான காரியம்” என்ற தகவலும் தினகரனுக்குச் சொல்லப்பட்டதாம்.

ஒருகட்டத்தில், கடந்த கால, நிகழ் கால நிலவரங்களைச் சுட்டிக்காட்டிய அமமுக சீனியர்கள், “இடைத் தேர்தலில் நிச்சயம் நாம் போட்டியிட்டுத்தான் தீரவேண்டுமா... அதற்குப் பதிலாக ஒதுங்கி இருந்து வேடிக்கை பார்த்தால் என்ன?” என்ற கருத்தை முன் வைத்தார்களாம். இதையடுத்தே, ”எங்களுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்படாததால் நாங்கள் போட்டியிடவில்லை” என்று ஒரு காரணத்தைச் சொல்லி போட்டியிலிருந்து ஒதுங்கிய தினகரன், ”இந்தத் தேர்தலில் அமமுகவின் ஆதரவு யாருக்கும் இல்லை. யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது அமமுக தொண்டர்களுக்குத் தெரியும்” என்று சூசகமாக அறிவித்தார்.

அண்ணாமலை
அண்ணாமலை

பழைய பகையை எல்லாம் மறந்து அண்மைக்காலமாக பாஜகவுடன் இணக்கமான மனப்போக்கில் இருக்கிறார் தினகரன். எப்படியாவது மக்களவைத் தேர்தலுக்குள் பாஜக கூட்டணிக்குள் வந்துவிட வேண்டும் என்பதே இந்த மனமாற்றத்துக்குக் காரணம். ஆனால், பாஜக அணிக்குள் தினகரன் வருவதை ஈபிஎஸ் தரப்பு ஆரம்பம் முதலே ஆட்சேபித்து வருகிறது. இந்தச் சூழலில், இடைத் தேர்தலை முன்வைத்து அனைத்தையும் பாஜக தயவில் அனைத்தையும் சரிசெய்துவிடலாம் என நினைத்தார் தினகரன். அதற்கும் வழியில்லாமல் போய்விட்டது.

ஆரம்பத்திலிருந்தே இந்த விவகாரத்தில் ஈபிஎஸ் தரப்பை தாங்கள் இழுத்த இழுவைக்குக் கொண்டுவர நினைத்தது பாஜக. ஆனால், ஒருகட்டத்தில் பாஜகவை மீறிப்போகும் அளவுக்கு ஈபிஎஸ் தனது நிஜமுகத்தைக் காட்ட ஆரம்பித்தார். நீதிமன்றமும் அவருக்குச் சாதகமான வழியில் செல்வதை தெரிந்துகொண்ட பாஜக, ஒருகட்டத்தில் ஈபிஎஸ் இழுத்த இழுவைக்கு போகும் சூழலுக்கு ஆளானது. இப்படியான சூழலில் தினகரனுக்காக பரிந்து பேசமுடியாது என்பதால் தினகரனை எளிதாக கைவிட்டுவிட்டது பாஜக.

தினகரனுடன் மாணிக்கராஜா...
தினகரனுடன் மாணிக்கராஜா...

அமமுகவின் நிலைப்பாடு குறித்து அக்கட்சியின் தென் மண்டல அமைப்புச் செயலாளர் மாணிக்கராஜாவிடம் பேசினோம். “அமமுக தான் அதிமுகவுக்கு முன்பே தேர்தல் காரியாலயம் அமைத்தது. வேட்பு மனு தாக்கல் செய்தது. வேட்பாளரும் தீவிரப் பிரச்சாரம் செய்துவந்தார். மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு காலமே இருக்கிறது. இப்போது ஒரு சின்னத்திலும், மக்களவைத் தேர்தலில் குக்கர் சின்னத்திலும் நின்றால் மக்கள் குழம்பிப்போக மாட்டார்களா? அதனால் தான் அமமுக இடைத் தேர்தலை புறக்கணித்ததே தவிர வேறு பிரச்சினை எதுவும் இல்லை” என்று சுருக்கமாக முடித்துக் கொண்டார்.

இடைத் தேர்தலை வைத்து தனது எதிர்காலத்தை தீர்மானிக்க தடம் போட்டார் டிடிவி. அது சாத்தியமாகாது என்று தெரிந்ததும் சத்தமில்லாமல் ஒதுங்கிவிட்டார். இப்படி ஒதுங்காமல், வீம்புக்கு நாங்களும் போட்டியிடுவோம் என்று நின்றிருந்தால் அமமுகவுக்கு பொதுத் தேர்தலில் விழுந்த ஓட்டுகள்கூட இந்தத் தேர்தலில் விழுந்திருக்க வாய்ப்பில்லாமல் போயிருக்கலாம். அப்படி நடந்திருந்தால் அமமுக பரிகாசத்துக்கு ஆளாகி இருக்கும். அதெல்லாம் நடக்காமல் பார்த்துக்கொண்டிருக்கிறார் தினகரன். ஒருவகையில் பார்த்தால், இதுவும்கூட ராஜதந்திம் தான்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in