`எனது பேச்சை எடிட் செய்து சிக்கவைத்துவிட்டனர்'- அமைச்சர் பதவியை துறந்த சாஜி செரியன் வேதனை

`எனது பேச்சை எடிட் செய்து சிக்கவைத்துவிட்டனர்'- அமைச்சர் பதவியை துறந்த சாஜி செரியன் வேதனை

கேரள மீன்வளத்துறை அமைச்சர் சாஜி செரியன் நேற்று மாலை திடீரென ராஜினாமா செய்தார். சர்ச்சைப் பேச்சினால் அவர் ராஜினாமா செய்திருந்தாலும், அதன் சுவாரஸ்யப் பின்னணி இப்போது வெளியாகியுள்ளது.

பத்தனம்திட்டா மாவட்டம், மல்லப்பள்ளியில் மார்க்சிஸ்ட் கட்சியின் வாராந்திர அரசியல் கூட்டம் நடந்தது. இதில் பேசிய அமைச்சர் சாஜி செரியன், “சாதாரண மக்களைச் சுரண்டுவதுதான் அரசியலமைப்புச் சட்டத்தின் நோக்கம். நம்மை அடிமையாக வைத்திருந்த ஆங்கிலேயர்கள் சொன்னதுதான் அதில் உள்ளது. மக்களைக் கொள்ளையடிக்கவே உதவுகிறது’’ என்றும் பேசினார். இந்தப் பேச்சு சர்ச்சையானது. பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் குதித்தன. பாஜக மூத்தத் தலைவர் கும்மனம் ராஜசேகரன், இதுகுறித்து கேரள ஆளுநர் ஆரிப் முகமதுகானை சந்தித்து மனு கொடுத்தார். இதேபோல் நேற்றைய சட்டசபை விவாதத்தின் போதும், காங்கிரஸ் இதைக் கையில் எடுத்துப் போராடியது. ஆரம்பத்தில் இவ்விவகாரத்தை முதல்வர் பினராயி விஜயன் பெரிதாகக் கண்டுகொள்ளாமல் இருந்தார்.

ஆனால் ஆளுநர் ஆரிப் முகமதுகான், இதுகுறித்து கேரள முதல்வர் பினராயி விஜயனின் நடவடிக்கைக்கு பரிந்துரைத்தார். அதன் பின்னர் தான், பினராயி விஜயன் சாஜி செரியனை ராஜினாமா செய்ய அறிவுறுத்தினாராம். ஆனால் சாஜி செரியன் தான் அரசியல் அமைப்பு சட்டத்தை கொச்சைப்படுத்தும் நோக்கத்தில் இதைப் பேசவில்லை. மத்திய அரசு நிர்வாகத்தை விமர்சித்தே பேசினேன் எனக் கூறியுள்ளார். ஆனால் இந்த விளக்கத்தில் பினராயி விஜயன் திருப்தியடையவில்லை. அதனால் தான் அமைச்சர் சாஜி செரியன் ராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது.

சாஜி செரியனிடம் இதுகுறித்து காமதேனு இணையத்திற்காகப் பேசினோம். “40 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுவாழ்வில் இருக்கிறேன். அரசியலைப்பு சட்டத்தை பெரிதும் மதிப்பவன் நான். சத்தியப் பிரமாணம் செய்துதான் அமைச்சராக பொறுப்பேற்றேன். அதை மீறுவேனா? ஒருமணி நேரம் அந்தக் கூட்டத்தில் பேசியதை எடிட் செய்து, பாதியை மறைத்து எனக்கு எதிராக மாற்றிவிட்டனர். சர்ச்சையானதால் நானே தான் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தேன்”என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in