பினராயி விஜயனை ஸ்வப்னா குறிவைக்கும் பின்னணி என்ன?- அதிர்ச்சி தகவல்

பினராயி விஜயனை ஸ்வப்னா குறிவைக்கும் பின்னணி என்ன?- அதிர்ச்சி தகவல்

தங்கக்கடத்தல் வழக்கின் முக்கியக் குற்றவாளிகளில் ஒருவரான ஸ்வப்னா, இப்போது கேரள முதல்வர் பினராயி விஜயன் மீது பகிரங்க குற்றச்சாட்டுக்களை முன்வைக்கத் தொடங்கியிருக்கிறார். கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி, இதேபோல் சரிதா நாயர் என்னும் ஒரு பெண்ணாலேயே வீழ்ந்தார். அதேபோல் பினராயி விஜயனுக்கும் ஒரு பெண் மூலமே சிக்கல் வந்திருப்பதாக சமூக வலைதளங்களில் பதிவுகளும் பறக்கிறது.

கேரளத்தையே தங்கக் கடத்தல் வழக்கு உலுக்கியது. இவ்விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஸ்வப்னா சுரேஷின் சமீபத்திய பேட்டி சர்ச்சையைக் கிளப்பியது. தங்கக் கடத்தல் வழக்கில் முதல்வர் அலுவலகத்திற்கு தொடர்பு இருப்பதாக சர்ச்சை கிளம்பி, கடைசியில் தலைமைச் செயலாளர் சிவசங்கர் கைது வரை இவ்விவகாரம் நீண்டது பழையகதை. இந்நிலையில் அண்மையில் ஸ்வப்னா சுரேஷ், "2016-ல் முதல்வர் துபாயில் இருந்தபோது சிவசங்கர் என்னைத் தொடர்பு கொண்டார். அப்போது நான் துணைத் தூதரகத்தில் செயலாளராக இருந்தேன். துபாய்க்கு உடனடியாக டெலிவரி செய்ய வேண்டிய ஒரு பையை முதல்வர் மறந்துவிட்டதாக சிவசங்கர் என்னிடம் கூறினார். தூதரக அதிகாரி மூலம் பையை கொண்டு வந்தபோது, ​​அதில் கரன்சி இருப்பதை உணர்ந்தோம். அதுபோல தூதரகத்தின் வாகனத்தில் கன்சல் ஜெனரலின் வீட்டிலிருந்து முதல்வரின் அதிகாரப்பூர்வ வீடு வரை அதிக எடை கொண்ட பிரியாணி பாத்திரங்களை நாங்கள் டெலிவரி செய்துள்ளோம். இது பிரியாணி மட்டுமல்ல, அதில் ஏதோ உலோகப் பொருட்கள் இருந்தது” என சர்ச்சையைக் கிளப்பினார். ஆனால் இதில் ஒருதுளிகூட உண்மையில்லை என மறுப்பு அறிக்கை வெளியிட்டார் பினராயி விஜயன்.

கடந்த 2021-ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலின்போதே பாஜக, காங்கிரஸ் கட்சிகள் தங்கக்கடத்தல் விவகாரத்தை முன்வைத்து பிரச்சாரம் செய்தன. ஆனால் அது மக்கள் மத்தியில் எடுபடவில்லை. பாஜக, காங்கிரஸ் கட்சியை பின்னுக்குத்தள்ளி கேரளத்தில் ஆட்சியைத் தக்கவைத்தது மார்க்சிஸ்ட். இந்நிலையில் ஓய்ந்திருந்த தங்கக்கடத்தல் வழக்கை திடீரென பேசி மீண்டும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறார் ஸ்வப்னா. அதிலும் இவ்விவகாரத்தில் முதல்வர் பினராயி விஜயன், அவரது மனைவி கமலா, மகள் வீணா, பினராயி விஜயனின் இரு உதவியாளர்கள் பெயரையும் பகிரங்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.

கேரளா ஸ்வப்னா
கேரளா ஸ்வப்னா

இப்படி ஒரு பின்னணியா?

கேரளத்தில் தங்கக்கடத்தல் வழக்கு புகாரைக் கிளப்பிய ஸ்வப்னா தொண்டு நிறுவனம் ஒன்றில் வேலைசெய்தவர். அந்தத் தொண்டுநிறுவனம் பாஜக ஆதரவாளரால் நிர்வகிக்கப்படுவதை மோப்பம் பிடித்துள்ளனர் தோழர்கள். ஸ்வப்னாவை பாஜக தான் பின்னால் இருந்து பேசவைக்கிறது என காம்ரேடுகள் யூகம் சொல்கின்றனர்.

அதேபோல் தங்கக்கடத்தல் வழக்கை தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) விசாரித்துவருகிறது. கேரளத்தில் காலூன்றத் துடிக்கும் பாஜக அதற்கான முன்னெடுப்பாகவும் இதைப் பயன்படுத்தி நெருக்கடி கொடுக்க முயல்கிறது. அதேபோல் கேரளத்தில் கடந்த சட்டசபைத் தேர்தலில் பாஜக மாநிலத் தலைவர் சுரேந்திரன், பகுஜன் சமாஜ் கட்சி பிரமுகரை பணம் கொடுத்து வளைத்ததாக அண்மையில் வழக்கு பதிவு செய்தது கேரள அரசு. எங்கள் மாநிலத் தலைவர் மீது வழக்கு பதிந்தால் விட்டுவிடுவோமா என்றே ஸ்வப்ணா விவகாரம் தூண்டி விடப்பட்டிருப்பதாகவும் ஆரூடம் சொல்கிறார்கள் இடதுசாரிகள். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பினராயியின் பிரச்சாரத்தை முடக்கவே தங்கக்கடத்தல் வழக்கு மீண்டும் பேசப்படுகிறது என்றும் கம்யூனிஸ்ட்கள் கதறுகிறார்கள். ஆனால் கேரள பாஜகவினரோ, ‘மடியில் கனம் இல்லாதவர்களுக்கு வழியில் பயம் எதற்கு? என கேட்கின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in