‘தொடர் தாக்குதலுக்கு ஆளாகும் தமிழக மீனவர்கள்: இந்திய அரசின் நடவடிக்கை என்ன?'

வைகோ கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில்
‘தொடர் தாக்குதலுக்கு ஆளாகும் தமிழக மீனவர்கள்: இந்திய அரசின் நடவடிக்கை என்ன?'

’இலங்கைக் கடற்படையினரால் இந்திய மீனவர்கள் தொடர் தாக்குதலுக்கு ஆளாவது தொடர்பாக இந்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது’ என்ற ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய அமைச்சர் பதிலளித்துள்ளார்.

’இலங்கை கடற்படையால் இந்திய மீனவர்கள் தாக்கப்படுவது,  அவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்படுவது போன்ற அவலங்கள் இந்திய அரசின்  கவனத்திற்கு வந்திருக்கிறதா?  அதில் அரசின் நிலைப்பாடு என்ன?’ என்பது உட்பட நாடாளுமன்றத்தில் வைகோ எழுப்பிய கேள்விகளுக்கு, மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் வி.முரளிதரன் எழுத்து மூலம் பதில் அளித்துள்ளார். 

’இந்திய மீனவர்கள் சர்வதேச கடல் எல்லையைத் தாண்டி, இலங்கை கடற்பரப்பில் மீன்பிடித்ததாகக் கூறி, இலங்கை அதிகாரிகளால் அவ்வப்போது கைது செய்யப்படுகின்றனர். இந்திய மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் நலனுக்கு இந்திய அரசு அதிக முன்னுரிமை அளிக்கிறது. இந்திய மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் செய்திகள் கிடைத்தவுடன், ராஜதந்திர வழியின் மூலம் இலங்கை அரசிடம் இந்த விவகாரம் எடுத்துச் செல்லப்படுகிறது.

கடந்த மூன்று ஆண்டுகளில் கிடைத்த தகவலின்படி, மொத்தம் 485 (2020-இல் 74, 2021-இல் 159, 2022-இல் 252) இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மொத்தம் 66 இந்திய படகுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அரசின் தொடர் முயற்சியால் 461 மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். டிசம்பர் 2, 2022 நிலவரப்படி இலங்கை காவலில் 24 இந்திய மீனவர்கள் உள்ளனர்.

2020 செப்டம்பரில் நடைபெற்ற இருதரப்பு உச்சி மாநாட்டின்போது, இலங்கை - இந்திய பிரதமர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தையில், இந்திய மீனவர்கள் தொடர்பான பிரச்சினைகளும் ஆலோசிக்கப்பட்டன. இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சரின் கடந்தாண்டு ஜனவரி 5-7 கொழும்பு பயணத்தின்போது, இலங்கையின் மீன்பிடி அமைச்சருடன் இந்திய மீனவர்கள் தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் விவாதிக்கப்பட்டன.

இந்திய வெளிவிவகாரச் செயலரின் 2021, அக்.2 - 5 இலங்கை பயணத்தின்போது, அந்நாட்டு பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலிலும் இதே பிரச்சினை குறித்து விவாதிக்கப்பட்டது. மீனவர்கள் தொடர்பான பிரச்சினைகளை மனிதாபிமான முறையில் கையாள்வது தொடர்பாகவும் இலங்கை அரசாங்கத்திடம் மீண்டும் வலியுறுத்தப்பட்டது.

இரு அரசாங்கங்களுக்கும் இடையில் நிலவும் புரிந்துணர்வுகள் கண்டிப்பாக கடைபிடிக்கப்பட வேண்டும் என்றும், எந்தச் சூழ்நிலையிலும் தாக்குதல்கள் நடைபெறக் கூடாது என்பதை இரு தரப்பும் உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. ஜன.15 அன்று, இலங்கைக் காவலில் உள்ள இந்திய மீனவர்களை முன்கூட்டியே விடுவிப்பது குறித்து, இலங்கையின் நிதியமைச்சருடனான சந்திப்பின்போதும், இலங்கையின் வெளியுறவு அமைச்சருடனான இருதரப்பு சந்திப்பின்போதும் விவாதிக்கப்பட்டது’.

இவ்வாறு மத்திய அமைச்சரின் பதில் விளக்கம அமைந்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in