சசிகலா இனி என்ன செய்யப்போகிறார்?

சசிகலா இனி என்ன செய்யப்போகிறார்?

‘குருசிஷ்யன்’ படத்தில் ரஜினியும், பிரபுவும் வினுசக்கரவர்த்தியைப் பார்த்து ‘ இப்ப என்ன செய்வீங்க, இப்ப என்ன செய்வீங்க’ என ஒரு காட்சியில் கேட்பார்கள். அது போலத்தான் சசிகலாவைப் பார்த்து ஓபிஎஸ்சும், ஈபிஎஸ்சும் கேட்டும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.

அதிமுகவில் ஜெயலலிதாவிற்கு அடுத்து அதிகாரம் மிக்க பதவியில் இருந்தவர் சசிகலா. கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு அதிமுகவின் தற்காலிக பொதுச் செயலாளராக சசிகலா பொறுப்பேற்றார். அதே டிசம்பர் மாதம் நடைபெற்ற பொதுக்குழுவிலும் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் அதிமுகவில் அதிகாரம் செலுத்தலாம் என சசிகலா நினைத்தது கனவாய் போனது.

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுடன் இணைந்து வழக்கை சந்தித்த சசிகலாவிற்கு 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சிறைத்தண்டனை உறுதியானது. இதனால் கட்சியைத் தன் கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும் என்பதற்காக டி.டி.வி.தினகரனுக்கு துணைப்பொதுச்செயலாளர் பதவியை வழங்கினார். இதன் தொடர்ச்சியாக பிப்ரவரி-15ம் தேதி கர்நாடக மாநிலம் பரப்பன அக்ரஹாராச்சிறையில் சசிகலா அடைக்கப்பட்டார். இதன் பின் அதிமுகவில் காட்சிகள் மாறின.

இதன் பின் தமிழக முதல்வராக பொறுப்பேற்ற எடிப்பாடி பழனிசாமி முன்னிலையில் 2017 செப்டம்பர் 12-ம் தேதி கூடிய அதிமுக பொதுக்குழு சசிகலா, டி.டி.வி.தினகரனை கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்கி அதிரடியாக தீர்மானம் நிறைவேற்றியது. கட்சி விதி திருத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் தேர்ந்தெடுக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் சசிகலாவை கட்சியிலிருந்து நீக்கிய அதிமுக பொதுக்குழுவின் தீர்மானம் செல்லும் என்று சென்னை மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.

இது தொடர்பாக சசிகலா ஆதரவாளர்களிடம் பேசிய போது, " பெங்களூரு சிறையில் இருந்து தண்டனை முடிந்து வெளியே வந்த சசிகலா அரசியல் நாட்டம் இல்லாமல் தான் இருந்தார். இதனால் தான் 'தான் பதவிக்காவோ, அதிகாரத்திற்கோ ஆசைப்படதில்லை என்றும், அரசியலை விட்டு ஒதுங்கிருக்கப் போவதாகவும்' அவர் வெளிப்படையாக அறிவித்தார். அப்படித்தான் அவரது மனநிலையும் இருந்தது. ஆனால், சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தோல்வியடைந்தது அவரைப் பாதித்தது. இந்நிலையில், சசிகலா மீண்டும் கட்சிக்குள் வர வேண்டும், அதிமுகவை வழி நடத்த வேண்டும் என்று சிலர் வலியுறுத்தியதால் தான் அவர் மீண்டும் அரசியலுக்கு வர ஆசைப்பட்டார். அவரால் அமைச்சரான பலர், இந்த வலியுறுத்தலுக்குப் பின்னால் இருந்தார்கள். ஆனால், அதிமுகவிற்குள் சசிகலா நுழைய முயன்ற வழிகளை எல்லாம் எடப்பாடி பழனிசாமியும், அவரது ஆதரவாளர்களும் அடைத்தனர். இற்கு சசிகலாவால் ஆதாயமடைந்த பலரும் துணை நின்றார்கள். ஆனால், இதை டி.டி.வி.தினகரன் விரும்பவில்லை. அதனால் தான் 2019-ம் ஆண்டு அமமுக என்ற கட்சியைத் துவங்கி அதன் பொதுச்செயலாளராகி விட்டார். அதிமுக எப்படியும் தன்னை சேர்க்கும் என்ற எண்ணம் அவருக்கு உள்ளது. அதனால் தான், அதிமுக தலைமையை விமர்சிப்பதை விட்டு விட்டு திமுகவை மட்டும் விமர்சித்து வருகிறார். ஆனால், சசிகலா நிலைமை தான் திரிசங்கு சொர்க்கமாகி விட்டது" என்றனர்.

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கியது சரி என்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக சசிகலா சொல்லியுள்ளார். ஆனால், இந்த உத்தரவை வரவேற்று கட்சி தலைமை அலுவலகத்தில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடியுள்ளனர். அரசியலில் இருந்து சசிகலா ஒதுங்கிக் கொள்வது நல்லது என்ற கருத்தை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். அத்துடன் பாஜக, அதிமுக இணைந்து செயல்படுவது காலத்தில் கட்டாயம் என்று சசிகலா சொன்னதும் தவறானது என்றும் ஜெயக்குமார் மறுத்துள்ளார்.

இதனால், சசிகலா இனி என்ன செய்யப்போகிறார் என்ற கேள்வி அவரது ஆதரவாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. நம்பியிருந்த தீர்ப்பும் காலை வாரிவிட்டதால், மேல்முறையீடு சென்று ஒரு உத்தரவை வாங்கி இன்னும் பல ஆண்டுகள் ஆகும் என்ற கவலை அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. அதிமுகவில் சேர பாஜக தலைமை மூலம் மேற்கொண்ட முயற்சிகளும் பலன் அளிக்கவில்லை. அதிமுக தலைமையிலும் பெரிதாக வரவேற்பில்லை. எனவே, தீவிர அரசியலில் இருந்து சசிகலா ஒதுங்கிக் கொள்வது தான் அவருக்கு நல்லது என அவரது ஆதரவு வட்டம் தெரிவிக்கிறது. என்ன முடிவெடுக்கப் போகிறார் சசிகலா?

Related Stories

No stories found.