என்ன செய்யப்போகிறார் ஓபிஎஸ்?

என்ன செய்யப்போகிறார் ஓபிஎஸ்?

அதிமுகவில் சசிகலாவைச் சேர்ப்பதா, வேண்டாமா என்ற கேள்விக்கு கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி பதிலைத் தந்துவிட்டார். “சசிகலாவை அதிமுகவில் மீண்டும் சேர்ப்பதற்கு வாய்ப்பில்லை” என்பதுதான் அந்த பதில். இதன் மூலம் பல மாதங்களாக அதிமுகவிற்குள் நடந்த விவாதத்திற்கான விடை கிடைத்துள்ளது. ஆனால், அதிமுகவிற்குள் நடத்தப்பட்ட விவாதம் அது மட்டும் தானா? பலமில்லாத நிலையில் உள்ள அதிமுக, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எப்படி வெற்றிப் பெற போகிறது என்ற கேள்விக்குப் பதில் எங்கே?

``தமிழகத்தில் மோடி அல்ல, இந்த லேடி தான்’ எனச்சொல்லியே வெற்றி பெற்ற ஜெயலலிதாவிடம் இருந்த ‘தில்’, இன்று உள்ள தலைமையிடம் இல்லை என்பதை அதிமுக தொண்டர்கள் வெளிப்படையாகப் பேசுகிறார்கள். உள்ளாட்சித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வசிக்கும் வார்டில் அதிமுக தோல்வியடைந்தது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வசிக்கும் வார்டிலும் அதிமுக தோல்வியடைந்தது. 'குடியிருக்கிற வார்டிலேயே கட்சியை ஜெயிக்க வைக்க முடியாதவங்க, 2024-ம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில், அதிமுகவை எப்படி ஜெயிக்க வைப்பாங்க ?'' என்ற அதிமுகவினரின் கேள்வியை அவ்வளவு எளிதாகப் புறந்தள்ள முடியாது.

தமிழகத்தில் நடைபெற்ற எத்தனையோ தேர்தல்களில் அதிமுக பெரும் தோல்வியைச் சந்தித்தாலும், மீண்டு எழுந்த வரலாறு உண்டு. அப்போது ஆளுமைமிக்கத் தலைவர்களாக எம்ஜிஆர், ஜெயலலிதா இருந்தனர். அவர்கள் மக்களின் மனம் கவர்ந்தத் தலைவர்களாக இருந்தனர். ஆனால், இன்று இருக்கும் அதிமுக இரட்டைத்தலைவர்களுக்கு மக்களிடையே அப்படியான 'கிரேஸ்' இல்லை என்று அதிமுகவினர் கூறுவதை ஏற்காமல் இருக்க முடியாது. ஆளுமை என்பதைவிட அதிமுக தலைவர்களிடம் ஒற்றுமையில்லாததுதான், கட்சியின் வாக்கு வங்கி தொடர்ந்து சரிந்து வருவதற்குக் காரணம் என்று அதிமுகவினர் குற்றம் சாட்டுகின்றனர். 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் இருந்து திமுகவின் வாக்கு வங்கி அதிகரித்து வருவதையும் அவர்கள் சுட்டிக்காட்டத் தயங்கவில்லை.

கடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக 136 இடங்களிலும், திமுக கூட்டணி 98 இடங்களிலும் வெற்றி பெற்றன. இந்தத் தேர்தலில் பல இடங்களில் திமுக வேட்பாளர்கள் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் தான் வெற்றி வாய்ப்பை நழுவ விட்டனர். இந்தத் தேர்தலில் அதிமுக 40.88 சதவிகித வாக்குகளையும், திமுக 31. 39 சதவிகித வாக்குகளையும் பெற்றன. இதன் பின் 2019-ல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவின் வாக்கு வங்கி பெரிய அளவு சரிந்தது. தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் திமுக கூட்டணி 38 இடங்களில் வெற்றி பெற்றது. ஓ.பன்னீர்செல்வம் மகன் போட்டியிட்ட தேனி தொகுதியில் மட்டுமே அதிமுக வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் திமுக 32.76 சதவிகித வாக்குகளையும், அதிமுக 18.48 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்றன. இதன் பின்னாவது கட்சியைப் பலப்படுத்தவோ, கூட்டுத்தலைமை ஒற்றுமையாகவோ இருந்திருந்தால் பொதுத்தேர்தலில் அதிமுக ஆட்சியை இழந்திருக்காது என்று அதிமுகவினர் அறுதியிட்டுக் கூறுகின்றனர்.

சட்டப்பேரவைப் பொதுத்தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களிலும், அதிமுக 75 இடங்களிலும் வெற்றி பெற்றன. இதில் திமுக 37.70 சதவிகித வாக்குகளையும், அதிமுக 33.29 சதவிகித வாக்குகளையும் பெற்றன. இதன்பின் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக 43.59 சதவிகித வாக்குகளையும், அதிமுக 24 சதவிகித வாக்குகளையும், நகராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் திமுக 43.49 சதவிகித வாக்குகளையும், அதிமுக 26.86 சதவிகித வாக்குகளையும், பேரூராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் திமுக 41.91 சதவிகித வாக்குகளையும், அதிமுக 25.56 சதவிகித வாக்குகளையும் பெற்றுள்ளன. இப்படித் தொடர் தோல்விகளால் துவண்டு கிடக்கும் கட்சியைக் கட்டியெழுப்பும் பணியில் அதிமுக தலைமை எங்கே ஈடுபட்டது என்ற கேள்வியைத்தான் அதிமுவினர் இப்போது வரைக் கேட்டுக் கொண்டே இருக்கின்றனர்.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைக்கும் நோக்கத்தில்தான், அதிமுவிற்குள் சசிகலா வருவதை எடப்பாடி பழனிசாமி தடுக்கிறார். ஆனால், இந்தக்கருத்தை அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக உள்ள ஓ.பன்னீர்செல்வம் ஏற்றுக் கொள்ள மாட்டார் என்றே உறுதியாக அதிமுகவினர் நம்புகின்றனர். ஏனெனில், ஆறுமுகசாமி ஆணையத்தில் சசிகலாவிற்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் வாக்குமூலம் தராததை அவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

இதுகுறித்து அதிமுகவின் தென்மண்டலத்தைச் சேர்ந்த மூத்த நிர்வாகியிடம் பேசியபோது, "அதிமுக பலப்பட வேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். ஜெயலலிதா என்ற ஆளுமை இப்போது கட்சியில் இல்லாததால், அனைவரையும் அரவணைத்துச் செல்வது அவசியம். சசிகலா, டி.டி.வி.தினகரனைக் கட்சியில் இணைப்பதில் எடப்பாடி பழனிசாமிக்கு எது தடையாக இருக்கிறது என்று தெரியவில்லை. 'சசிகலா குறித்து ஓ.பன்னீர்செல்வம் கூறிய கருத்து அவரின் தனிப்பட்ட கருத்து' என்று கூறும் எடப்பாடி பழனிசாமி, 'சசிகலா மற்றும் அவரைச் சார்ந்தவர்களுக்கு அதிமுகவில் எப்போதுமே இடம் இல்லை' என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தொடர்ந்து பேசி வருவது கட்சிக் கருத்து என்று கூறுகிறாரா?" என்று கேள்வி எழுப்பினார்.

மேலும் அவர் கூறுகையில், "திமுக போடும் வழக்குகளில் இருந்து தப்பிக்க பாஜகவைத் தாஜா செய்யும் வேலையில்தான் எடப்பாடி பழனிசாமி இறங்கியுள்ளார். இது அதிமுகவிற்குத்தான் இழப்பை ஏற்படுத்தும். எனவே, கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் எடுக்கும் முடிவில்தான் அதிமுகவின் எதிர்காலம் இருக்கிறது" என்றார். ஆனால், ஓ.பன்னீர்செல்வம் இனியும் அடங்கியே இருப்பாரா, அத்துமீறுவாரா என்பது அவருக்கு மட்டுமே தெரிந்த தங்கமலை ரகசியம்.

Related Stories

No stories found.