`நடப்பது ஆளுநர் ஆட்சியல்ல, ஜனநாயக ஆட்சி'

எச்சரிக்கும் கி.வீரமணி
`நடப்பது ஆளுநர் ஆட்சியல்ல, ஜனநாயக ஆட்சி'

"தமிழ்நாட்டில் நடப்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக ஆட்சியே தவிர, ஆளுநர் ஆட்சியல்ல. சட்டப்பேரவை நிறைவேற்றிய மசோதாக்களை காலவரையறையின்றி நிறுத்தி வைப்பது சரியல்ல. அரசமைப்புச் சட்டத்தின் வரைமுறைக்குக் கட்டுப்பட்டு தமிழ்நாடு ஆளுநர் நடந்துகொள்ள வேண்டும்" என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "நமது இந்திய அரசமைப்புச் சட்டத்தினைக் காப்பாற்றி, அதன் ஒவ்வொரு விதியையும்பின்பற்றியே தனது ஆளுமை இருக்கும் என்று பதவி ஏற்கும்போதே, உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி முன்பு உறுதி கூறித்தான் பிரமாணம் எடுத்துப் பொறுப்பேற்கிறார்கள் ஆளுநர்கள். ‘ஆளுநர்’ என்று தமிழில் அழைக்கப்படும் கவர்னர்கள், ஒன்றிய அரசால் நியமிக்கப்படுபவர்கள். பல நியமனங்களில் தேர்தலில் தோற்ற அரசியல்வாதிகளோ, ஓய்வு பெற்ற குடிமைப்பணி அதிகாரிகளோ (Retired Civil Servants) ஒன்றிய அரசுக்கு யார் நம்பிக்கைக்குரியவர்களோ அவர்கள் முகவர்கள்போல் நியமிக்கப்படுவது வழமையாக உள்ளது.

இந்த நியமனங்கள் செய்யப்படும்போது முன்பெல்லாம் அந்தந்த மாநிலத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சரையும் கலந்துதான் நியமனங்கள் நடைபெறுவது வழமை. காரணம், ஆளுநர் நியமன அதிகாரி என்பதாலும், ஆட்சியின் தலைமைக் கிரீடமாக இருந்தாலும்கூட உள்ளேயிருக்கும் தலைதான் சிந்தித்து செயலாற்றுமே தவிர, அதன்மீது கம்பீரமாக அமர்ந்துள்ள கிரீடம் ஒருபோதும் தானே இயங்க முடியாது, அரசமைப்புச் சட்ட விதிப்படியே. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிகள் 356 கூறு போன்றவற்றால் கலைக்கப்பட்டு, கவர்னர் அல்லது குடியரசுத் தலைவர் ஆட்சி நடைபெறும்போது வேண்டுமானால் கவர்னர் உண்மையான ஆட்சித் தலைவராக இருந்து உத்தரவுகளைப் பிறப்பிக்க முடியும். மற்றபடி அமைச்சரவையின் முடிவுகளை ஏற்று, ஒப்புதல் தந்து இணக்கமாக நடந்து வரவேண்டியதே ஆளுநர்களின் அதிகாரப் பணியாக இருக்க முடியும் -

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 200 ஆவது கூறு (Article) மிகத் தெளிவாகவே மாநில சட்டமன்றம் மசோதாக்களை நிறைவேற்றி அனுப்பினால், ஆளுநர் அம்மசோதாக்கள்மீது நடவடிக்கை எடுப்பதுபற்றி விளக்கி, அவரது கடமைபற்றி தெளிவுபடுத்துகிறது. சட்டப்பேரவை 2-ம் முறை மசோதாவை நிறைவேற்றினால் ஆளுநர் ஒப்புதல் தருவதைத் தவிர வேறுவழியில்லை. சட்டப்பேரவையில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களாட்சியின் முடிவுகள் அவை என்பது முக்கியம், நிறைவேறிய மசோதாக்கள் சட்டமாக்கப்பட ஆளுநரின் ஒப்புதல் தேவை. எனவே, 200-வது கூறின்படி, மாநில ஆளுநருக்கு நான்கு வழிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன. ‘He shall declare’ என்ற சொற்கள் உள்ளன என்பது கவனிக்கத்தக்கது.

ஒப்புதல் தரலாம் (அல்லது), நிறுத்தி வைக்கலாம் (அல்லது), திருப்பி அனுப்பி மறுபரிசீலனை செய்யக் கேட்கலாம், குடியரசுத் தலைவருக்கு அனுப்பலாம். ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்ட மசோதா, அதே சட்டமன்றத்தால் மீண்டும் இரண்டாவது முறை நிறைவேற்றி, அவரது ஒப்புதலுக்கு அல்லது குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வேண்டியதாகவோ இருந்தால், அதில் கையொப்பமிட்டு ஏற்பதோ, குடியரசுத் தலைவருக்கு அனுப்புவதோ தவிர ஆளுநருக்கு வேறு வழியே கிடையாது என்பதே அரசமைப்புச் சட்டப்படி உள்ள அதிகாரம்.

இந்த சட்டப் பின்னணியோடு, தமிழ்நாடு ஆளுநராக சில மாதங்களுக்குமுன்பு பொறுப்பேற்ற ஓய்வு பெற்ற முன்னாள் காவல்துறை அதிகாரி ரவி ‘நீட்’ தேர்வு சம்பந்தமாக குடியரசுத் தலைவரிடம் விதிவிலக்குக் கோரும் தமிழ்நாடு அரசு ஒருமனதாக நிறைவேற்றிய மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பவேண்டிய கடமையைச் செய்யாமல், இவரே அதுபற்றி விமர்சனக் குறிப்புகளுடன் மாநில அரசுக்கு மூன்றரை மாதக் கிடப்புக்குப்பின் திருப்பி அனுப்பினார் கடந்த பிப்ரவரி 2-ம் தேதி.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2-வது முறையாக மசோதா நிறைவேற்றம் உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டம், சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் கூடி, மீண்டும் அதே மசோதாவை ஒருமனதாக நிறைவேற்றி அனுப்பி வைத்தது, பிப்ரவரி 8-ம் தேதி. அதனை அனுப்பி ஒரு மாதத்திற்குமேல் ஆகியும், முதலமைச்சர் நேரில் சந்தித்து வற்புறுத்திய பின்பும்கூட, குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவிட்டோம் என்று ராஜ்பவன் செய்திக்குறிப்பு ஏதும் இதுவரை வராதது சரிதானா?

இதற்குமேலும் அதிர்ச்சிதரும் வகையில் நேற்று (24.3.2022) தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், 19 மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் ஆளுநர் தேங்க வைத்திருப்பது எவ்வகையில் ஜனநாயகம் என்ற நியாயமான கேள்வியை எழுப்பியுள்ளார்.

மேற்குவங்கம், மகாராட்டிரா போன்ற எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்கள் அங்குள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை செயல்படாமல் செய்ய குறுக்குச்சால் ஓட்டிக்கொண்டிருக்கும் ஜனநாயக விரோத நடவடிக்கைளைப் போல, அமைதிப் பூங்கா, ‘திராவிட மாடல்’ என்று வளர்ச்சியில் வாகை சூடும் ஆட்சிக்கும் இப்படி ஒத்துழையாமை நடவடிக்கைமூலம் தேவையில்லாமல், மோதலுக்கு முன்னுரை வாசிப்பது நியாயம்தானா?

ஆளுநர் தனது அதிகாரம் ‘‘வானளாவிய அதிகாரம்‘’ அல்ல; அரசமைப்புச் சட்டத்தில் வரையறுக்கப்பட்ட அதிகாரம் என்பதை நன்கு புரிந்து, தடம் புரளாமல், சுமூக நிர்வாகத்திற்கு ஒத்திசைவுடன் செயல்படுவதே அவசியம். இன்றேல், தமிழ்நாட்டு மக்கள் இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கமாட்டார்கள்.

கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் சாதிக்க முடியாதவற்றை, நிதிப்பற்றாக்குறை நெருக்கடியிலும் சாதித்துக் காட்டி வருகிறது 10 மாதங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உள்ள ஆட்சி என்ற விடியல் ஆட்சி. அதற்கு முட்டுக்கட்டைப் போடும் விதமாக நிதி நெருக்கடியை, சட்டச் சிக்கலை உருவாக்குவது அரசமைப்புச் சட்டப்படி கடமையாற்ற வேண்டிய ஒரு நல்ல ஆளுநருக்கு அழகல்ல. உண்மையான இறையாண்மை மக்களிடமே உள்ளது என்பதே நமது அரசமைப்புச் சட்டம் என்பதை அவர் புரிந்துகொள்வது அவசரம், அவசியம்" என்று கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in