பட்டினப்பிரவேசமும் பலே அரசியலும்!

தருமபுரம் ஆதீனத்தில் என்ன தான் நடக்கிறது?
பல்லக்கில் தருமபுர ஆதீனகர்த்தர்
பல்லக்கில் தருமபுர ஆதீனகர்த்தர்

“ஆத்திகர்களும், நாத்திகர்களும் மனம் குளிரும் வகையில் முதல்வர் முடிவெடுப்பார்” என்று தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்தபிறகும்கூட இன்னும் ஓயவில்லை தருமபுரம் ஆதீன பட்டினப்பிரவேச சர்ச்சை.

பட்டினப்பிரவேச நிகழ்வில் ஆதீனகர்த்தரை பல்லக்கில் அமர்த்தி பக்தர்கள் சுமந்து செல்ல தடைவிதித்து மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் ஜெ.பாலாஜி உத்தரவிட்டுள்ள நிலையில் அதற்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் தமிழகம் கிட்டத்தட்ட இரண்டாக பிரிந்து வார்த்தைப் போர் நடத்தி வருகிறது. தமிழக அரசியல் களத்தையும் இந்த விவகாரம் உஷ்ணமாக்கியிருக்கிறது.

“என் உயிரைக் கொடுத்தாவது தருமபுர ஆதீனகர்த்தரை பல்லக்கில் அமர்த்தி சுமந்து செல்வேன்” என்று கர்ஜித்த மதுரை ஆதீனம் தருமபுரம் ஆதீனகர்த்தரை சந்தித்தபின் மவுனமாகி விட்டார். “அமைச்சர்கள், எம்எல்ஏ-க்கள் நடமாட முடியாது” என்று அதிரடிகாட்டிய மன்னார்குடி ஜீயர் மீது மன்னார்குடி, தஞ்சை உள்ளிட்ட ஊர்களில் காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. பாஜகவின் அண்ணாமலையும், எச்.ராஜாவும், இதர இந்து அமைப்பினரும் “பல்லக்கை தூக்க நாங்கள் வருவோம் என்று பலப்பரிட்சைக்கு தயாராக காத்திருக்கிறார்கள். ஆனாலும் சம்பந்தப்பட்ட தருமபுரம் ஆதீனம் வெளிப்படையாக எதையும் சொல்லாமல் மவுனம் காக்கிறது.

இந்த நிலையில் பட்டினப்பிரவேசம் என்றால் என்ன? அன்று என்ன நடக்கும் என்பதை முதலில் தெரிந்து கொள்வோம். தமிழ்நாட்டின் பழமையான சைவ மடங்களில் ஒன்றான தருமபுரம் ஆதீனம் 16-ம் நூற்றாண்டில் தொடங்கப்பட்டது. இந்த ஆதீனத்தின் குரு முதல்வரின் குருபூஜை ஆண்டுதோறும் கொண்டாடப்படும். அதில் ஒரு நிகழ்ச்சியாக பட்டினப்பிரவேசம் நடைபெறும். அதில் ஆதீன மடாதிபதியை பல்லக்கில் அமர்த்தி, பல்லக்கு தூக்குவதற்கென்று உள்ளவர்கள் அதனைச்சுமந்து தருமபுரத்தின் வீதிகளில் உலாவருவார்கள். இரவு 11 மணி அளவில் துவங்கும் இந்த பட்டினப்பிரவேசம் காலை ஆறு மணிக்குத்தான் நிறைவுபெறும். பல்லக்குத் தூக்கிகள் அதுவரை தங்களுக்குள் மாறிமாறி பல்லக்கை சுமப்பார்கள். அவர்களுக்கு மடத்தின் சார்பில் மரியாதையும், 100 ரூபாய் பணமும் வழங்கப்படும்.

பல்லக்கை சுமப்பவர்கள் இதற்காகவுள்ள வன்னியர்கள்தான். இவர்கள் தருமபுர மடத்தைச் சுற்றியுள்ள மூங்கில்தோட்டம், அச்சுதராயபுரம், மணக்குடி, கருங்குயில்நாதன்பேட்டை ஆகிய கிராமங்களில் வசித்துவருகிறார்கள். இவர்கள் மடத்துக்கு சொந்தமான இடத்தில் பரம்பரையாக குடியிருக்கிறார்கள். மடத்தின் நிலங்களைக் குத்தகை சாகுபடி செய்கிறார்கள். பாரம்பரியம் என்ற பெயரல் அவர்களின் குடும்பத்தினரே பல்லக்கை சுமக்கிறார்கள்.


பல்லக்கு தூக்கும் நடைமுறைக்கு கடந்த காலங்களிலும் எதிர்ப்புக்கள் கிளம்பியுள்ளன. 1963-ம் ஆண்டு தந்தை பெரியார் எதிர்த்துக் குரல் கொடுத்தார். அதனால் அப்போது பல்லக்கில் உட்கார்ந்து மனிதனை மனிதன் தூக்கும் பழக்கம் நிறுத்தப்பட்டது. அதன்பின் ஒருசிலமுறை நடைபெற்ற போதும் பிரச்சினைகள் எழுந்து காவல் நிலையம் வரை புகார்கள் சென்றிருக்கின்றன. அதனால் இதற்கு முந்தைய ஆதீனகர்த்தராக இருந்த ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் கடைசி பல வருடங்களாக பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சியை நடத்தவில்லை.

இந்நிலையில், 2019 டிசம்பர் 4-ம் தேதியன்று அவர் காலமானார். அதைத் தொடர்ந்து ஆதீனத்தின் 27- வது மடாதிபதியாக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் டிசம்பர் 13-ல் பொறுப்பேற்றார். அன்றே ஆதீனகர்த்தரை பல்லக்கில் சுமந்து பட்டினப்பிரவேசம் நடந்தது. இதற்கு திராவிடர் கழகம் கடும் எதிர்ப்புத் தெரிவித்தது. அதன் தலைவர் கி.வீரமணி "தருமபுர மடத்துக்குப் புதிய ஆதீனகர்த்தராகப் பதவி ஏற்றுள்ள தவத்திரு மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் நீண்ட காலத்துக்கு முன்பே தடை செய்யப்பட்ட - மனிதர்கள் தூக்கும் பல்லக்கில் பவனி வரும் பட்டினப்பிரவேசம் என்னும் 'மனித உரிமையைச் சிறுமைப்படுத்தும் நிகழ்ச்சியைப் புதுப்பித்து வருகிறார்" என்று கூறி அதை எதிர்த்தார். அதனால் கடந்த ஆண்டு இந்நிகழ்ச்சி நடக்கவில்லை.

இந்நிலையில் தருமபுரம் ஆதீனத்தின் சார்பில் பட்டினப்பிரவேச நிகழ்வு இம்மாதம் 22-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்நிகழ்வுக்குத் தடை கோரி திராவிடர் கழகத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர், அதனைத்தொடர்ந்தே தடை விதிக்கப்பட்டது. 1963-ல் நிறுத்தப்பட்ட இந்த வழக்கத்தை 2020-ல் ஆரம்பிக்க நினைத்தவர்கள், 2021-ல் அமைதியாக இருந்துவிட்டு, இப்போது நடத்துவோம் என்கிற அறிவிப்புக்கு பின் ஒரு பலமான பின்னணி இருக்கிறது என்கிறார்கள்.

‘மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் ஆகியவற்றில், பிராமணர்களுக்கு இணையான நிலவுடமை மற்றும் கலாச்சார மேலாதிக்கம் கொண்டவர்களாக சைவ வெள்ளாளர்கள் இருக்கிறார்கள். உயர் சாதியினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடை மத்திய அரசு அறிவித்ததில் இருந்தே, சைவ வெள்ளாளர்கள் பாஜகவுக்கு ஆதரவு நிலைப்பாட்டுக்கு மாறி வருகிறார்கள். அதன் வெளிப்பாடுதான் சைவ வெள்ளாள மடத்தைச் சேர்ந்த தருமபுரம் ஆதீனத்திற்கு ஆளுநர் வருகை தந்ததும், அதைத் தொடர்ந்து சர்ச்சையான பல்லக்கு விவகாரமும் என்கிறார்கள்.

தமிழகத்தில் உள்ள 18 சுத்த சைவ ஆதீனங்களில் குன்றக்குடி ஆதீனம், பேரூர் ஆதீனம், வீர சைவ ஆதீனம் ஆகிவற்றில் பல்லக்கு ஏறும் பழக்கமில்லை. மதுரை ஆதீனமாக விளங்கிய அருணகிரிநாத சுவாமி 40 ஆண்டுகளாக பல்லக்கே ஏறவில்லை. காஞ்சி தொண்டை மண்டல ஆதீனம் பட்டமேற்ற போது கூட பல்லக்கு ஏறவில்லை. சூரியனார் கோயில் ஆதீனம் பட்டமேற்ற போது மட்டும் பல்லக்கு ஏறினார்.

திருவாவடுதுறை ஆதீனத்தின் 23-வது குருமகா சந்நிதானமாக விளங்கிய சிவப்பிரகாச தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் ஓர் சமூக சீர்திருத்தவாதி. மனிதனை மனிதன் சுமக்கும் பல்லக்கு ஏறமாட்டேன் என்று சொன்ன அவர், பொன் ஆபரணங்களை அணிவதை தவிர்த்தவர். அப்படிப்பட்டவரை ஆதீன பிரமுகர்கள் கட்டாயப்படுத்தி பல்லக்கு ஏறவும், பொன் ஆபரணங்களை அணியவும் வைத்தனர். தற்போதுள்ளவர் ஆண்டுதோறும் பட்டினப்பிரவேச பல்லக்கில் வலம் வருகிறார்.

மே 5-ம் தேதி நடைபெற்ற வேளாக்குறிச்சி ஆதீன குரு முதல்வர் குருபூஜையில் பட்டினப்பிரவேசமோ, பல்லக்கு பவனியோ இல்லை. செங்கோல் ஆதீனத்தில் குரு முதல்வர் சிலைக்குத்தான் பட்டினப்பிரவேசம் நடக்குமே தவிர ஆதீனத்திற்குக் கிடையாது.

இதையெல்லாம் சுட்டிக்காட்டும் எதிர்ப்பாளர்கள் ”பட்டினப்பிரவேசம் என்பது பல நூற்றாண்டுகளாக நடத்தப்படும் பாரம்பரிய நிகழ்ச்சி என்கிறார்கள். குழந்தைத் திருமணம், உடன்கட்டை ஏறுதல் உள்ளிட்டவையும் கூட பல நூறு ஆண்டுகளாக இருந்துவந்த வழக்கம் தான். அதையெல்லாம் தடை செய்யவில்லையா? அதுபோலத்தான் இதையும் தடை செய்யவேண்டும். பாரம்பரியமான விழாவை நாங்கள் எதிர்க்கவில்லை. பல்லக்கில் மனிதனை மனிதன் சுமந்து செல்வதைத்தான் எதிர்க்கிறோம். அதற்குப் பதிலாக சப்பரத்திலோ, வேறு வாகனத்திலோ ஏறிச்செல்லலாமே” என்கிறார்கள்.

அமைச்சர் சேகர்பாபு சொன்னபடி நாத்திகர்களும், ஆத்திகர்களும் மனம் குளிரும் வகையில் முதல்வரின் அறிவிப்பு வந்தாலாவது இந்த சர்ச்சை ஓய்கிறதா என்று பார்க்கலாம்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in