குமரி திமுகவில் கோஷ்டி அரசியலா?

கொந்தளிக்கும் அழகிரி ஆதரவாளர்
குமரி திமுகவில் கோஷ்டி அரசியலா?
கபிலன்

குமரி மாவட்ட திமுகவில் துடிப்புடன் இயங்கிவந்த கபிலன், தீவிர அழகிரி ஆதரவாளர். கட்சிக்குள் மு.க.ஸ்டாலின் கை ஓங்கிய போது திமுகவில் கட்டம் கட்டப்பட்டவர். அழகிரியே இவரது பெயர் சொல்லி அழைக்கும் அளவுக்கு அவரது தீவிர விசுவாசி.

குமரி திமுகவில் நிலவும் பிரச்சினைகள் குறித்து விமர்சனங்களை முன்வைக்கும் கபிலன், இப்போது மாவட்ட திமுகவில் நிலவும் கோஷ்டி அரசியலை விமர்சிக்கத் தொடங்கியுள்ளார். குறிப்பாக, தன்னை ஒரு காலத்தில் ஒதுக்கிவைத்த சுரேஷ்ராஜன், இப்போது திமுகவினரால் ஓரங்கட்டப்படுவதாகக் கூறிவருகிறார் கபிலன்.

அந்த போஸ்டர்
அந்த போஸ்டர்

இதுகுறித்து நம்மிடம் விரிவாகவே பேசினார் கபிலன்.

‘’குமரி மாவட்ட திமுகவில் கோஷ்டி அரசியல்தான் என்னைப் பேசவைத்துள்ளது. நான் திமுகவில் ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்பே கட்டம் கட்டப்பட்டவன். அழகிரி அண்ணன் விசுவாசி என்பதால் ஒதுக்கப்பட்டவன். தீவிர ஸ்டாலின் ஆதரவாளரான முன்னாள் அமைச்சரும், முன்னாள் மாவட்டச் செயலாளருமான சுரேஷ்ராஜன் தான் என்னை ஒதுக்கினார். ஏகப்பட்ட குடைச்சல் கொடுத்தார். ஆனால் எனக்கும் சுரேஷ்ராஜனுக்கும் தனிப்பட்ட பிரச்சினை எதுவும் இல்லை. அவர் மு.க.ஸ்டாலினின் நம்பிக்கைக்குரிய தளபதியாக குமரி மாவட்டச் செயலாளராக இருந்தார். நாங்கள் அழகிரியை முன்னிறுத்தியதாலேயே எங்களை ஒதுக்கினார். ஆனால் ஸ்டாலின் மீதான அவரது விசுவாசமும், திமுக பாசமும் கடுகளவும் கபடம் அற்றது. அண்மையில் உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் நடந்த கலாட்டாவில் அவரது மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டது.

சுரேஷ்ராஜனை பற்றிய எங்களின் மதிப்பீடே வேறு. 33 வயதில் அமைச்சர் ஆனவர், இருமுறை திமுக அமைச்சரவையில் இடம்பிடித்தவர் அவர். கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக திமுகவின் குமரி மாவட்டச் செயலாளராக இருக்கிறார். கட்சியில் அவர் தீவிரமாகச் செயல்பட்டதாலேயே அவர்மீது சொத்துக்குவிப்பு வழக்கு போட்டு முடக்கினார்கள். நான் வாழும் கடைசி காலம்வரை அழகிரியின் விஸ்வாசிதான். ஏற்றமோ, இறக்கமோ அதைப் பற்றிய கவலையே எனக்கு இல்லை. நான் சுரேஷ்ராஜனிடம் பேசியே ஏழெட்டு ஆண்டுகள் ஆகிவிட்டது. இன்னும் சொல்லப்போனால் எங்களை எல்லாம் ஓரம்கட்டியதால் அவருக்கு எதிர் அரசியல்தான் செய்துவருகிறேன். ஆனால் சுரேஷ்ராஜன் ஸ்டாலினுக்காக, கட்சிக்காக எங்களை சிந்தாந்த அடிப்படையில்தான் ஒதுக்கினார். அவருக்குள் அரசியல் ஆளுமை உண்டு. அதனால்தான் 20 ஆண்டுகளாக கட்சியைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்.

திருமண விழாவில்...
திருமண விழாவில்...

பதவி பறிப்புக்குப் பின்பு அண்மையில் நடந்த அவரது மகனின் திருமணத்திற்குக் கூட மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின், மருமகள் கிருத்திகா உதயநிதி, மு.க.ஸ்டாலினின் சகோதிரி செல்வி உள்ளிட்ட குடும்பத்து உறுப்பினர்கள் வந்திருந்தார்கள். சுரேஷ்ராஜனின் இல்லத் திருமண விழா நம் கழக விழா என்றே மு.க.ஸ்டாலினும் வாழ்த்துச் செய்தி கொடுத்திருந்தார்.

ஆனால், நாகர்கோவிலில் இன்று (ஏப்.10) மாலை கிழக்கு மாவட்டத் திமுக சார்பில் நடக்கும் பட்ஜெட் விளக்கப் பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன் பெயரை, கூட்டத்தோடு கூட்டமாக கீழ்வரிசையில் போட்டிருக்கிறார்கள். அரசியலில் பதவி முக்கியம்தான். அதேநேரத்தில் கோஷ்டி அரசியலை இப்படி பட்டவர்த்தனமாகக் காட்சிப்படுத்த வேண்டுமா? முதல்வரே கழகவிழா என வாழ்த்துச் செய்தி கொடுத்து, அவர் குடும்பமே கலந்துகொண்ட திருமணமாக சுரேஷ்ராஜன் இல்லத்திருமணம் நடந்தது. ஆனால் வாய்ப்பு கிடைத்துவிட்டது என்று கோஷ்டி சேர்ந்து அவரை அழுத்துவது வெளிப்படையாகத் தெரிகிறது. கலைஞரின் தொண்டனாக இதை வெளிப்படுத்தவேண்டிய கடமையும் எனக்கு இருக்கிறது” என்கிறார் கபிலன்.

திமுக நிர்வாகிகளிடம் இதுகுறித்துக் கேட்டபோது, ‘முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன் வகித்துவந்த மாவட்டச் செயலாளர் பதவி அவரிடம் இல்லை. அவர் வசம் இப்போது முன்னாள் அமைச்சர் என்பதைத் தாண்டி கட்சிப் பதவி எதுவும் இல்லை. நிகழ்ச்சியை நடத்துபவர்களைத் தலைமையாகக் கொண்டு, அடுத்தடுத்து பொறுப்புள்ளவர்களின் பெயர் போடுவதுதான் அரசியல் கட்சிகளின் வழக்கம். மாவட்டச் செயலாளராக இருந்த சுரேஷ்ராஜனுக்கும் இந்த மரபு தெரியும். அதனால்தான் அவரே இதைச் சட்டைசெய்யவில்லை. கபிலன் போன்றவர்கள் கட்சிக்கு வெளியே இருந்து ஏதாவது சொல்லிக்கொண்டுதான் இருப்பார்கள். அதைப் பொருட்படுத்த வேண்டியதில்லை’ என்றனர்.

Related Stories

No stories found.