எல்லோரும் வெளியேறுகிறார்கள்; என்ன நடக்கிறது பாஜகவில்?

அதிமுகவில் இணைந்த பாஜகவினர்
அதிமுகவில் இணைந்த பாஜகவினர்

பாஜக தகவல் தொழில்நுட்ப அணியின் மாநிலத் தலைவர் சி.டி.ஆர்.நிர்மல்குமார், அவரைத்தொடர்ந்து பாஜகவின் அறிவுசார் பிரிவு, தகவல் தொழில்நுட்ப பிரிவு, திருச்சி புறநகர் மாவட்டத் துணைத்தலைவர் மற்றும் சென்னை மேற்கு மாவட்ட பாஜக ஐடி பிரிவினர் 13 பேர் என பாஜகவில் இருந்து பலரும் விலகி அதிமுகவில் இணைந்த வண்ணம் உள்ளனர். 

தனது விலகல் தொடர்பாக நிர்மல்குமார் வெளியிட்ட அறிக்கையில், ’தமிழக பாஜக, தலைமை தொண்டர்களையும், கட்சியையும், செருப்பாகப் பயன்படுத்தி, கட்சியைப்பற்றி துளியும் சிந்திக்காது, சொந்தக்கட்சி நிர்வாகிகளையும், தொண்டர்களையும் வேவு பார்த்து ஆனந்தம் அடைகிறது. இது போன்ற அல்பத்தனம் வேறெதுவும் இல்லை’ எனக் கடுமையாகச் சாடினார்.

தமிழக பாஜகவில் தற்போது நடந்துகொண்டிருக்கும் நிகழ்வுகளைப் பார்ப்பவர்கள், என்ன நடக்கிறது தமிழக பாஜகவில் என்று நெற்றியைச் சுருக்குகிறார்கள். இதுகுறித்து விசாரித்தால் இரண்டு காரணங்கள் மட்டுமே பிரதானமாக பேசப்படுகிறது. முதலாவது, கட்சியில் எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்தவர்கள் இடம்பெயர்கிறார்கள். இன்னொன்று, கட்சித் தலைவர் பதவியிலிருந்து அண்ணாமலையை மாற்றத் துடிப்பவர்கள் செயலாற்றத் தொடங்கிவிட்டார்கள். அதன் பக்க விளைவுகள் தான் இதெல்லாம் என்கிறார்கள்.    

அண்ணாமலை தலைவராக வந்த புதிதில் மாவட்ட வாரியாக கட்சி நிர்வாகிகளைச் சந்தித்துப் பேசினார். அப்போது அனைவருக்கும் தாராளமாக வாக்குறுதிகளை வாரி வழங்கினார். இந்தப் பொறுப்பில் அமரவைக்கப்படுவீர்கள். நீங்கள் அதுவாகிவிடுவீர்கள்... இதுவாகி விடுவீர்கள் என்றெல்லாம் ஆசை வார்த்தைகள் அள்ளிவீசப்பட்டன. ஆனால் அவை எதுவும் நடக்கவில்லை. இதனால், எதிர்பார்த்து நின்றவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். அவர்கள் தான் இப்போது கட்சியைவிட்டு விலகி அண்ணாமலைக்கு அவப்பெயரை உண்டாக்கி வருகிறார்கள்.

மற்றவர்களுக்கு சாத்தியமாகாத பதவிகளும் பொறுப்புகளும் அண்ணாமலைக்கு துதி பாடுபவர்களுக்கும் அவரோடு ஒட்டிக்கொண்டு வருபவர்களுக்கும் சாத்தியமாவது எப்படி என்ற ஆதங்கமும் இவர்களின் விலகலுக்குக் காரணமாக இருக்கிறது. திராவிடக் கட்சிகளைப் போல கட்சியின் ஒற்றை முகமாக அண்ணாமலை மாறியிருக்கிறார். இதனையெல்லாம் ஏற்றுக் கொள்வதில் தேசியக் கட்சியான பாஜகவுக்கு சில சிரமங்கள் இருக்கிறது.

அண்ணாமலை
அண்ணாமலை

பாஜகவின் ஐடி விங்க் மிக வலுவான ஒரு அமைப்பாகச் சொல்லப்படுகிறது.  சமூக வலைதளங்களில் கட்சியின் கொள்கைகளை மிக வேகமாக கொண்டுசென்றவர்கள். திமுகவுக்கு எதிராக கடுமையாக களப்பணி ஆற்றுபவர்கள். அப்படிப்பட்ட ஓர் அணியின் தலைவர் உள்ளிட்டோரே விலகுகிறார்கள் என்றால் அந்த அளவுக்கு மிகப்பெரிய ஏமாற்றமும், விரக்தியும் கட்சிக்குள் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. 

ஆனால், அண்ணாமலையோ இதுகுறித்தெல்லாம் பெரிதாக கவலைப்படுவதாக இல்லை. யார் போனாலும் போகட்டும் என்கிறார். விலகல் லிஸ்ட் வெளியாகிக் கொண்டிருந்த சமயத்தில் அண்ணாமலை அளித்த பேட்டியில், “சில முடிவுகள் சிலபேருக்கு அதிர்ச்சி அளிக்கத்தான் செய்யும். அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் சென்றுகொண்டே இருக்க வேண்டும். அம்மா எடுக்காத முடிவுகளா? கலைஞர் ஐயா எடுக்காத முடிவுகளா? தமிழ்நாடு பார்க்காத ஆளுமையா? அது போன்றுதான் நான் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அந்தத் தலைவர்களைப் போல கட்சியின் நன்மைக்காக சில முடிவுகளை எடுக்க வேண்டுமென்றால் கொஞ்சம்கூட பயமில்லாமல் எடுப்பேன்” என்று சொன்னார்.

இப்படிச் சொல்லியிருப்பதன் மூலம் தன்னை கருணாநிதி, ஜெயலலிதா அளவுக்கு தமிழகத்தின் மிகப்பெரிய அரசியல் ஆளுமையாக கருதுகிறார் அண்ணாமலை. அவரின் இந்த மனநிலைதான் சிலரை கட்சியிலும், கட்சியை விட்டும் ஒதுங்க வைத்திருக்கிறது என்கிறார்கள்.

அதேசமயம் அண்ணாமலை ஜெயலலிதாவுடன் தன்னை ஒப்பிட்டுப்பேசியது அதிமுகவினர் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அதிமுக தரப்பிலிருந்து கடும் கண்டனங்கள் வெடித்தன. அதற்கும் எதிர்வினையாற்றிய அண்ணாமலை, “ஜெயலலிதாவைவிட என் தாய் 100 மடங்கும், மனைவி ஆயிரம் மடங்கும் சக்தி வாய்ந்தவர்கள்” என்று சொன்னார். இதுவும் அதிமுகவினரைச் சீண்டிப் பார்த்திருக்கிறது.   

அதே அண்ணாமலை, ‘’டெல்லியில் நம்மைப்பற்றி இப்படி கூறிவிடுவார்களோ... இவர்கள் சென்று டெல்லியில் நம்மைப் பற்றி போட்டுக்கொடுத்து விடுவார்களா என்றெல்லாம் பயப்பட மாட்டேன்” என்று சொல்லியிருப்பதன் மூலம் தனக்கு இருக்கும் நெருக்கடிகளையும் சொல்லாமல் சொல்லி இருக்கிறார். தன்னை மாற்ற நினைக்கும் சக்திகளுக்கு அவர் சொல்லி இருக்கும் மறைமுகச் செய்தியும் இது என்கிறார்கள்.

கேசவ விநாயகன்
கேசவ விநாயகன்

அண்ணாமலையை ஆரம்பத்திலிருந்தே ஏற்கமுடியாமல் இருப்பவர் பாஜகவின் அமைப்புப் பொதுச் செயலாளர் கேசவவிநாயகம். ஆர்எஸ்எஸ் பின்னணி கொண்ட இவர் தான் கமலாலயத்தில் இருந்துகொண்டு தமிழக பாஜகவை வழிநடத்தி வந்தார். அண்ணாமலை தலைவராக வந்தபிறகு, கேசவவிநாயகனின் பேச்சுகளை அவர் கேட்கவில்லை; தன்னிச்சையாகவே முடிவுகளை எடுக்கத் தலைப்பட்டார்.

இதனால் இருவருக்குள்ளும் ஆரம்பம் முதலே உரசல் பற்றிக்கொண்டது. இதை மனதில் வைத்துக்கொண்டு, எப்படியாவது அண்ணாமலையை மாற்றிவிட வேண்டும் என கேசவவிநாயகன் தரப்பில் சிலர் மெனக்கிட்டார்கள். அவர்களுகெல்லாம் ஷாக் கொடுக்கும் விதமாக கேசவ விநாயகனின் ஆதரவாளர்கள் சிலரை துணிச்சலுடன் கட்டம் கட்டினார் அண்ணாமலை. ஒருகட்டத்தில், அண்ணாமலையால் மாற்றப்பட்ட நிர்வாகிகளுக்கு மீண்டும் பதவி கொடுத்து தனது பவரைக் காட்டினார் விநாயகன். அத்துடன் அண்ணாமலை பரிந்துரை செய்திருந்த மாவட்ட தலைவர்கள் உள்ளிட்ட புதிய நிர்வாகிகள் நியமனப் பட்டியலுக்கும் டெல்லியில் செக் வைத்தார்.

இப்படியே இந்த யுத்தம் உச்சமாகி வந்த நிலையில் தான் அண்ணாமலைக்கு நெருக்கடி தரவேண்டும் என்ற அஜெண்டாவின் கீழ் கேசவவிநாயகனுக்கு நெருக்கமானவரான நிர்மல்குமார் உள்ளிட்டவர்கள் கட்சி மாறி இருப்பதாகச் சொல்கிறார்கள். “அதிமுகவுடன் நல்ல நட்பில் இருக்கும் கேசவ விநாயகன், தனது விசுவாகிகளை தனது நண்பரிடம் அனுப்பிவைத்திருக்கிறார்” என்று சொல்லும் பாஜக புள்ளிகள், “இதன் பின்னணியில் ஆடிட்டர் ஒருவரும் இருக்கிறார்” என்கிறார்கள். 

தமிழக பாஜக தான் சொல்வதைச் செய்யும் கட்சியாக இருக்க வேண்டும் என்று நினைத்தார் அந்த ஆடிட்டர். ஆனால், அண்ணாமலையிடம் அது நடக்கவில்லை. சமயம் பார்த்துக் கொண்டிருந்த ஆடிட்டர், இப்போது அண்ணாமலையை எப்படியாவது தூக்கிவிட வேண்டும் என்ற காய்நகர்த்தலில் மும்முரமாக இருக்கிறார். அதன் ஒரு திட்டம் தான் நிர்மல்குமார் உள்ளிட்டவர்களை அதிமுகவுக்கு வழியனுப்பிவிட்டது என்று சொல்கிறார்கள். கட்சி மாறியவர்களில் சிலருக்கு கணிசமான ‘கவனிப்பு’களும் தரப்பட்டதாகவும் ஒரு பேச்சு இருக்கிறது. 

“ஒரே சமயத்தில் இத்தனை பேர் கட்சியைவிட்டு விலகுவது ஏன் என்ற கேள்வி இப்போது டெல்லி வரைக்கும் எதிரொலிக்கிறது. அண்ணாமலைக்கு எதிராக நிற்பவர்கள் உருவாக்க நினைத்ததும் இந்தச் சூழலைத் தான். இதற்கெல்லாம் காரணம் அண்ணாமலை தான் என்ற பிம்பத்தை கட்டமைத்து அதன் மூலம் அவரை தலைவர் பதவியிலிருந்து தூக்கிவிட சகுனிகள் சிலர் திட்டம் போடுகிறார்கள். ஆனால், அவர்கள் நினைப்பது நடக்காது. ஒருவேளை, அவர்கள் நினைப்பது நடந்தாலும் அதைப்பற்றி கவலைப்படுபவர் இல்லை அண்ணாமலை” என்று ஆவேசம் காட்டுகிறார்கள் அண்ணாமலை விசுவாசிகள். 

கரு.நாகராஜன்
கரு.நாகராஜன்

அண்ணாமலைக்குப் பதிலாக யூடியூபர் மாரிதாஸை பாஜக தலைவராக அமரவைக்கும் திட்டத்திலும் சிலர் இருப்பதாகச் சொல்கிறார்கள். பாஜக தரப்பிலிருந்து மட்டுமல்லாது... அதிமுக தரப்பிலிருந்தும் அண்ணாமலைக்கு எதிராக பாஜக தலைமைக்கு புகார்களை அனுப்ப சிலர் யோசனை சொல்லி இருக்கிறார்களாம். ”அம்மாவை ஒப்பிட்டு அண்ணாமலை இந்தளவுக்குப் பேசியபிறகு அதிமுக தொண்டர்களை அமைதிப்படுத்துவது சிரமம். அவரை தலைவராக வைத்துக்கொண்டு கூட்டணியில் நீடிப்பதும் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும். எனவே, முடிந்தால் அண்ணாமலையை மாற்றிவிடுங்கள்” என்று அதிமுக தரப்பிலிருந்து பாஜக தலைமைக்கு சேதி அனுப்ப வைக்கவும் பாஜக தரப்பிலிருந்தே டிராஃப்ட் அடித்துக் கொடுத்திருக்கிறார்களாம்.

பாஜகவில் தற்போது நடந்துகொண்டிருக்கும் உட்கட்சி யுத்தம் குறித்து பாஜக மாநில துணைத்தலைவர் கரு.நாகராஜனிடம் பேசியபோது, ”எங்கள் மாநில தலைவர் அண்ணாமலை பாராட்டுகளால் பரவசப்படுவதும் இல்லை. தூற்றுபவர்களை கண்டு துக்கப்படுவதும் இல்லை. அவரின் தன்னலமற்ற தியாகமும், ஓய்வறியாத உழைப்பும், உற்சாகமும் எங்களைப் பிரமிக்க வைக்கிறது. தொண்டர்களிடம் அவர் காட்டும் தோழமையும்,  மக்கள் பிரச்சினைகள் மீது காட்டும் அக்கறையும். விறுவிறுப்பான அணுகுமுறையும் விவேகமான ஆளுமையும் துடிப்பான செயல்திறமும் தமிழ்நாட்டு மக்களை கவர்ந்து இழுத்திருக்கிறது. மூத்தவர்களை மதித்து அவர்களின் ஆலோசனையுடன் அண்ணாமலை செயலாற்றி வருகிறார்.  டெல்லி தலைமையும் அவர்மீது முழு நம்பிக்கை வைத்திருக்கிறது. கட்சியிலிருந்து ஒருசிலர் வெளியேறி இருக்கிறார்கள். அவர்கள் எதை எதிர்பார்த்து வெளியேறி இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. ஆனால் இதை வைத்து, அண்ணாமலை மாற்றப்படுவார்  என்கிற பேச்சுக்கே இடமில்லை” என்றார்.

மத்தியில் அதிகாரத்தில் இருக்கிறோம் என்பதற்காக அதிமுகவை தங்கள் இஷ்டத்துக்கெல்லாம் ஆட்டுவித்த கட்சி பாஜக. கர்மா திருப்பித் தாக்கும் என்று சொல்வதைப் போல, இப்போது சொந்தக் கட்சிக்குள்ளேயே குடைச்சலைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. முடிவு என்னாகிறது என்று பார்க்கலாம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in