முதல்வர் ஸ்டாலின் இப்போது என்ன செய்யப்போகிறார்?- சீமான் கேள்வி

விக்னேஷின் மரணத்துக்குக் காரணமான காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
முதல்வர் ஸ்டாலின் இப்போது என்ன செய்யப்போகிறார்?- சீமான் கேள்வி

விசாரணை சிறைவாசி விக்னேஷின் மரணத்துக்குக் காரணமான கொலையாளிகளைக் காப்பாற்றத் துணைபோவதுதான் திராவிட மாடல் ஆட்சியா? சமூக நீதியா? என கேள்வி எழுப்பியுள்ள நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், காவல்துறையைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிற முதல்வர் ஸ்டாலின் இப்போது என்ன செய்யப்போகிறார்? என வினா எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "திருவல்லிக்கேணியில் கைது செய்யப்பட்ட விக்னேஷ் காவல்துறையினரால் அடித்துத் துன்புறுத்தப்பட்டதால்தான் இறந்துபோனாரென்பது உடற்கூறாய்வு பரிசோதனையில் உறுதிசெய்யப்பட்டும், திமுக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காது வாய்மூடிக்கிடப்பது பெரும் ஏமாற்றத்தையும், அறச்சீற்றத்தையும் தருகிறது. திமுக அரசு பொறுப்பேற்றது முதல் காவல்துறையினர் மூலம் நிகழும் மரணங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதும், அதனை அதிகாரத்தின் துணைகொண்டு ஆளும் வர்க்கம் முழுமையாக மூடி மறைப்பதுமான போக்குகள் கடும் கண்டனத்திற்குரியது.

விக்னேஷ் காவல்துறையால் கொடூரமாகத்தாக்கப்பட்டே இறந்துபோயிருக்கிறார் என்பதைக்கூறி, அதற்குக் காரணமான காவலர்களைக் கொலைவழக்கின் கீழ் கைதுசெய்ய வேண்டுமென ஏற்கெனவே விடுத்த அறிக்கையில் தெரிவித்திருந்த நிலையில், தற்போது வெளியாகியிருக்கிற உடற்கூறாய்வு பரிசோதனை முடிவில் விக்னேஷை காவல்துறையினர்தான் அடித்துக் கொன்றிருக்கிறார்கள் என்பது சந்தேகத்திற்கு இடமின்றி உறுதியாகியிருக்கிறது. காவல்துறையைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிற முதல்வர் ஸ்டாலின் இப்போது என்ன செய்யப்போகிறார்? இனியும் கொலையாளிகளைக் காப்பாற்றத் துணைபோகப்போகிறாரா? சமூகநீதிக்காவலரெனப் பீற்றித்திரிந்துவிட்டு, ஒரு ஏழை மகனை காவல்துறையினர் அடித்துக்கொன்றதைக் கண்டும் காணாதது போல கடந்துசெல்வதுதான் திராவிட மாடல் ஆட்சியா? சமூக நீதியைப் பின்பற்றுகிற லட்சணமா? வெட்கக்கேடு!

ஒரு மரணம் எதன்பொருட்டு நிகழ்கிறது என்பதைத் துல்லியமாக உடற்கூறாய்வு பரிசோதனையின் மூலம்தான் முடிவு செய்ய முடியும் எனும்போது, அம்முடிவுகள் வருவதற்கு முன்பே, வலிப்பும், வாந்தியும் ஏற்பட்டுதான் விக்னேஷ் இறந்துபோனார் என எந்த அடிப்படையில் சட்டமன்றத்தில் கூறினார் முதல்வர் ஸ்டாலின்? இம்மரணத்தில், காவல்துறையினர் மீதுதான் குற்றச்சாட்டே வைக்கப்படுகிறது எனும்போது, அவர்கள் மீது நேர்மையான நீதிவிசாரணை நடத்தி, பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டிய முதல்வர் ஸ்டாலின், காவல்துறையினர் எழுதி கொடுத்த திரைக்கதையை அப்படியே சட்டமன்றத்தில் ஒப்பிப்பதா சமூக நீதி? தூத்துக்குடியில் நடந்தேறிய ஜெயராஜ் – பென்னிக்ஸ் படுகொலையின்போது, அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் இதனைத்தானே செய்தார். “உடற்கூறாய்வு முடிவு வராத நிலையில் பென்னிக்ஸ் மூச்சுத்திணறலில் இறந்தார் என்றும், அவரது தந்தை ஜெயராஜ் உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி எதனடிப்படையில் சொன்னார்?” என அன்றைக்குக் கேட்ட ஸ்டாலின், இன்றைக்கு வாந்தி, வலிப்பு வந்துதான் விக்னேஷ் இறந்துபோனார் என எதனை வைத்து முடிவுக்கு வந்தார்? பதிலுண்டா முதல்வரே? காவல் நிலையத்தை சாத்தான் வேட்டைக்காடாக மாற்றியவர்களை கொலை வழக்கில் கைது செய்ய வேண்டுமெனக் கடந்தாட்சியில் சீறிய ஸ்டாலின், இன்றைக்குக் கொலைக்குக் காரணமானக் காவல்துறையினரைக் காப்பாற்ற வரிந்துகட்டுவது அற்பத்தனமான அரசியல் இல்லையா? சமூக நீதியென நாளும் பேசிவிட்டு, ஒரு எளிய மகனுக்கு இழைக்கப்பட்ட அநீதியை மூடி மறைத்து, கொலையாளிகளைக் காப்பாற்ற நினைப்பது சனநாயகத் துரோகமில்லையா? இதுதான் நீங்கள் தரும் விடியல் ஆட்சியா? பேரவலம்!

விக்னேஷின் உடலில் 13 இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், லத்தியால் தாக்கியதற்கானக் காயங்கள் உள்ளதாகவும், தலை, கண், உடலில் ரத்தம் கட்டியதற்கான காயங்கள் உள்ளதாகவும், இடது கை, முதுகின் வலது பக்கத்தில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், வலது முன்னங்காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும் உடற்கூறாய்வு அறிக்கையின் முடிவில் தெரிவிக்கப்பட்டிருப்பதும், விக்னேஷை கைதுசெய்து கொண்டு செல்கிறபோது காவல்துறையினர் கொடூரமாகத் தாக்குகிற காணொளிச்சான்று வெளியாகியிருப்பதும் இது காவல்துறையினரால் நிகழ்த்தப்பட்ட மற்றுமொரு பச்சைப்படுகொலை என்பதை முழுமையாகத் தெளிவுப்படுத்தியிருக்கிறது.

ஆகவே, தமிழக முதல்வர் ஸ்டாலின் இவ்விவகாரத்தில் சீரியக்கவனமெடுத்து, இனியாவது உளப்பூர்வமாகச் செயல்பட்டு, விக்னேசின் மரணத்திற்குக் காரணமானக் காவல்துறையினரைக் கொலை வழக்கின் கீழ் கைதுசெய்து சிறைப்படுத்த வேண்டுமெனவும், தம்பி விக்னேசின் குடும்பத்திற்கு உரிய துயர்துடைப்புத்தொகை வழங்கி, அவர்களை அத்துயரில் இருந்து மீட்கவேண்டுமெனவும் மீண்டுமொரு முறை வலியுறுத்துகிறேன்" என்று கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in