தமிழ்நாட்டின் பெயரை மாற்ற பரிந்துரை செய்தேனா?: ஆளுநர் ஆர்.என்.ரவி புதிய விளக்கம்

ஆளுநர் ஆர்.என்.ரவி
ஆளுநர் ஆர்.என்.ரவி

சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில், அண்மையில் நடைபெற்ற காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், தமிழகம் என்று குறிப்பிடுவதே பொருத்தமாக இருக்கும் என தெரிவித்திருந்தார்.

இது தமிழகத்தில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. கம்யூனிஸ்ட் மற்றும் திராவிடர் கழகம் போன்ற இயக்கங்கள் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டத்தை முன்னெடுத்தன.

தமிழக சட்டப்பேரவையிலும் இந்த விவகாரம் எதிரொலித்தது. திமுக இளைஞரணி ஆலோசனை கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் கடுமையான வார்த்தைகளில் எதிர்வினையாற்றினார்.

குடியரசுத் தலைவரை சந்தித்து திமுக எம்பிக்கள் மனு அளித்தனர். இதனைத் தொடர்ந்து தமிழக ஆளுநர் இன்று அதிகாலை டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார்.

இந்த நிலையில் தமிழகம், தமிழ்நாடு பிரச்சினை குறித்து விளக்கம் அளிக்கும் வகையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி செய்தி குறிப்பை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது;

" 2023 ஜனவரி 4-ம் தேதி ஆளுநர் மாளிகையில் சமீபத்தில் நிறைவடைந்த காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்ற தன்னார்வ தொண்டர்களைப் பாராட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்நிகழ்வில் வரலாற்று பண்பாடு குறித்து பேசும் போது, காசி மற்றும் தமிழ்நாட்டுக்கு இடையே உள்ள தொடர்பைக் குறிக்க, ‘தமிழகம்’ என்ற வார்த்தையை பயன்படுத்தினேன்" என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் " அந்த காலத்தில் தமிழ்நாடு என்பது இருக்கவில்லை. எனவே, வரலாற்றுப் பண்பாட்டுச் சூழலில் தமிழகம் என்பதை மிகவும் பொருத்தமான வெளிப்படாக இருக்கும் என்ற கண்ணோட்டத்தில் குறிப்பிட்டேன்" என கூறியுள்ளார்.

"எனது கண்னோட்டத்தை தமிழ்நாட்டின் பெயரை மாற்றுவதற்கான பரிந்துரை போல பொருள் கொள்வதோ அனுமானம் செய்து கொள்வதோ தவறானது மற்றும் யதார்த்தத்துக்கு புறம்பானது.

எனது பேச்சின் அடிப்படை புரியாமல், ஆளுநர் தமிழ் நாட்டின் பெயரை மாற்றுவதற்கான பரிந்துரை எனும் வாதங்கள் விவாதப் பொருளாகி இருக்கிறது.அதற்கு முற்றுப்புள்ளி வைக்கவே இந்த விளக்கம்" என அந்த செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in