நேருவை நம்பியவர்கள் என்ன ஆனார்கள்? - 2

செல்வாக்கு சிதைக்கப்பட்ட செல்வராஜ்!
நேருவுடன் செல்வராஜ்...
நேருவுடன் செல்வராஜ்...

பெரம்பலூர் மாவட்டம் துறைமங்கலத்தைச் சேர்ந்த என்.செல்வராஜ் பொறியியல் பட்டதாரி. முத்தரையர் சமூகத்தைச் சேர்ந்தவர். திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர் மாவட்டங்களில் முத்தரையர் சமூகமே பெரும்பான்மை என்பதாலும், நன்கு படித்தவர் என்பதாலும் 1980 நாடாளுமன்றத் தேர்தலில் திருச்சி தொகுதியில் செல்வராஜுக்கு சீட் கொடுத்தார் கருணாநிதி. அதில் வெற்றிபெற்று 1984 -ம் ஆண்டுவரை நாடாளுமன்ற உறுப்பினராக செம்மையாக பணி செய்தார் செல்வராஜ். அந்த சமயத்தில் தொண்டர்களிடமும் நல்ல நெருக்கத்தை வளர்த்துக்கொண்டார்.

ஸ்டாலினுடன் செல்வராஜ்...
ஸ்டாலினுடன் செல்வராஜ்...

ஒரு சில காரணங்களால், திருச்சி திமுகவில் மிகப்பெரிய ஆளுமையாக இருந்த அன்பில் தர்மலிங்கத்தை சற்றே அடக்கி வைக்க நினைத்தார் கருணாநிதி. அது மாத்திரமல்ல... ஒரு மாவட்டத்தில் தனியொரு சக்தியாக ஒருவர் உருவெடுக்கும் போது அவர்களின் குறைகளை தனது பார்வைக்கு கொண்டு வருவதற்காகவே இன்னொருவரை கொம்பு சீவி வளர்ப்பது கருணாநிதியின் அரசியல் சாணக்கியம். அதன்படி அன்பிலாருக்கு மாற்றாக திருச்சியில் இன்னொருவரை வளர்த்துவிட அவர் தீர்மானித்தார். அதன்படி, கள்ளர் சமூகத்தைச் சேர்ந்த அன்பிலாரை சமாளிக்க மற்றொரு பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்தவரான செல்வராஜே சரியாக இருப்பார் என்று அவர் தீர்மானித்தார். அதனால் 1987-ல் செல்வராஜை ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட திமுக செயலாளராக ஆக்கினார். அப்போது தனது சாதிய பலம் செல்வராஜுக்கு மிகப்பெரிய உறுதுணையாக இருந்தது. அதைவைத்து கட்சியில் செல்வாக்கு மிக்கவராக உருவெடுத்தார் செல்வராஜ்.

செல்வராஜுக்கு சால்வை அணிவிக்கும் திருச்சி சிவா...
செல்வராஜுக்கு சால்வை அணிவிக்கும் திருச்சி சிவா...

கருணாநிதியிடம் அத்தனை செல்வாக்கா இருந்த செல்வராஜ் வைகோ கட்சியைவிட்டு பிரிந்த போது அவரை நம்பி அவர் பின்னால் சென்றார். அது செல்வராஜின் அரசியல் வாழ்வில் நிகழ்ந்த மிகப்பெரிய சறுக்கல். அவர், திமுகவை விட்டு போனதே கே.என்.நேருவின் அசுர வளர்ச்சிக்கும் அடித்தளம் போட்டுக் கொடுத்தது.

ஒரு கட்டத்தில், வைகோவுடன் சென்றது தவறான முடிவு என்பதை உணர்ந்து கொண்ட செல்வராஜ், 1996-ல், தாயகத்திலிருந்து மீண்டும் தாய்க்கழகம் திரும்பினார். ஆனால் அவரது மீள் வருகையை நேரு அவ்வளவாய் விரும்பவில்லை. வலுவான சாதிய பின்னணி கொண்டவரும் கட்சியின் அனைத்து மட்டங்களிலும் நன்கு அறிமுகமானவருமான செல்வராஜால் தனக்கான முக்கியத்துவம் குறைந்துவிடும் என்று கணக்குப் போட்ட நேரு, பழைய மாதிரி செல்வராஜை செயல்பட விடவேயில்லை.

கட்சிக் கூட்டங்களில் நேருவின் விசுவாசிகளால் செல்வராஜ் அவமானப்படுத்தப்பட்டார். செல்வராஜ் பேச எழுந்தாலே கேலி செய்து கூச்சலிட ஒரு கூட்டம் எப்போதும் இருந்தது. இதனால் வெறுத்துப் போன செல்வராஜ், மாவட்ட அரசியல் வேண்டாம், மீண்டும் எம்பி-யாகி டெல்லி பக்கம் போய்விடலாம் என நினைத்தார். 1999 நாடாளுமன்றத் தேர்தலின்போது அதற்கான தருணம் அமைந்த போது, அதையும் நேரு தந்திரமாக தட்டிவிட்டார் என்பார்கள். காரணம், தன் சொல்லுக்கு தலைமை அப்பீல் சொல்லாத அளவுக்கு திருச்சி திமுகவில் தனக்கான செல்வாக்கை வளர்த்துக் கொண்டார் நேரு.

1996-ல், திமுகவின் எட்டாவது மாநில மாநாட்டை திருச்சியில் பிரம்மாண்டமாக நடத்திக் காட்டினார் நேரு. இதுவரை இத்தனை சிறப்பாய் நடந்ததில்லை என்று பேசுமளவுக்கு இருந்தது அந்த மாநாடு. அதுமட்டுமில்லாது, கருணாநிதியோ, ஸ்டாலினோ யார் வந்தாலும் அவர்களுக்கு வரவேற்பு கொடுப்பதிலும், அவர்களின் தேவையறிந்து கவனிப்பதிலும் தனிக்கவனம் செலுத்தி, திமுக குடும்பத்தின் ‘குட் புக்’கில் இடம்பிடித்த நேரு, இன்றளவும் அதைத் தக்கவைத்திருக்கிறார். கட்சி பொதுக்கூட்டங்களையே மாநாடு கணக்காய் நடத்திக் காட்டி தலைமையை அசரடித்தார் நேரு. அவருக்கு சீனியரான செல்வராஜ் 2001 சட்டப் பேரவைத் தேர்தலில், தனது நெருங்கிய நண்பரான முரசொலி மாறனிடம் போய் நின்றார். இருந்தாலும் அவருக்கு சீட் கிடைக்கவில்லை. பின்னர் 2006-ல் முசிறி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தது. வெற்றியும் பெற்றார். முத்தரையர் சமூகத்தின் முகமாக பார்க்கப்பட்ட அவருக்கு அந்த சாதிக்கான ஒதுக்கீட்டின் அடிப்படையில் அமைச்சர் பதவியும் கிடைத்தது.

வனத் துறைக்கு அமைச்சராக இருந்தபோதும் நேருவின் சக்தியை மீறி செல்வராஜால் அப்போது எதையும் சாதிக்கமுடியவில்லை. அதனால் அதிகாரம் செலுத்த முடியாத அமைச்சராக திருச்சியை வலம் வந்தார் செல்வராஜ். தனது துறையான வனத் துறையில்கூட தான் நினைத்ததை சாதித்துக் கொள்ளமுடியாத நிலையில் அப்போது செல்வராஜ் இருந்ததாகச் சொல்வார்கள். அனைத்தையும் நேருவின் வழிகாட்டுதலின்படி தலைமையே முடிவு செய்தது. “செல்வராஜ் சொல்வதை சீரியஸாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை” என திருச்சி மாவட்ட அரசு அதிகாரிகளுக்கு வாய்மொழி உத்தரவுகள் போனதாகக் கூட அப்போது பேச்சுகள் உண்டு. சுருக்கமாக சொல்வதானால், முசிறி தொகுதிக்குள்ளேயே செல்வராஜை முடக்கிப் போட்டது நேரு அலை.

இதனால் தொகுதிக்கு மாவட்டத்தின் பிற இடங்களில் நடக்கும் கட்சி மற்றும் அரசு நிகழ்ச்சிகளில் செல்வராஜின் பெயர் வேண்டா வெறுப்பாக வைக்கப்பட்டது. இதையும் மீறி செல்வராஜுடன் கட்சி நிர்வாகிகள் யாராவது பந்தம் பாராட்டினால் அவர்களது பதவிக்கும் ஆபத்து சூழ்ந்தது. இதனால், கட்சிக்காரர்கள் தங்கள் வீட்டு விசேஷங்களுக்குக்கூட செல்வராஜை அழைக்க அச்சப்பட்டார்கள். ஒரு காலத்தில், மாவீரன் கணக்காய் திருச்சி மாவட்ட திமுகவில் கோலோச்சிய தனக்கு ஏற்பட்ட இந்த நிலையைப் பார்த்து நெஞ்சம் கலங்கினார் செல்வராஜ்.

ஜெயலலிதாவுடன் செல்வராஜ்...
ஜெயலலிதாவுடன் செல்வராஜ்...

2011 சட்டப் பேரவைத் தேர்தலில் மண்ணச்சநல்லூர் தொகுதியில் செல்வராஜுக்கு சீட் கொடுத்தது திமுக. வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் நிலையில் முத்தரையர் சமூகத்தினர் கணிசமான இருக்கும் இந்தத் தொகுதியிலேயே செல்வராஜை கரை சேரவிடாமல் கட்டம்கட்டினார்கள் உட்கட்சி எதிரிகள். அந்தத் தேர்தலில் திமுகவுக்குப் படுதோல்வி கிடைத்தது என்றாலும், இந்தத் தொகுதியில் செல்வராஜ் தோற்றதற்கு உள்ளடி வேலைகளும் முக்கியக் காரணம். தேர்தல் தோல்வியால் ஐந்து ஆண்டுகள் முடங்கிக் கிடந்த செல்வராஜ், அடுத்த தேர்தலில் மீண்டும் மண்ணச்சநல்லூர் தொகுதியைக் கேட்டார்; தலைமை கொடுக்கவில்லை.

இதற்கு மேல் திமுகவில் இருப்பது தனது அரசியல் வாழ்க்கையை ஒரேயடியாக அஸ்தமிக்க வைத்துவிடும் என நினைத்த செல்வராஜ், திடமாக ஒரு முடிவெடுத்து ஜெயலலிதாவைச் சந்தித்து அதிமுகவில் இணைந்தார். அவரை அங்கீகரித்துக் கொண்ட ஜெயலலிதா, அவருக்கு மண்டல அளவிலான பொறுப்பும் கொடுத்தார். ஆனால், துரதிருஷ்டவசமாக ஜெயலலிதாவின் மரணம் நிகழ்ந்துவிட, செல்வராஜும் மூளைப்புற்று நோய்க்கு ஆளாகி உயிரிழந்தார்.

செல்வராஜின் வாரிசுகள் தங்களுக்கான அரசியல் அடையாளத்தை முற்றாகத் தொலைத்துவிட்டு நிற்கிறார்கள். செல்வராஜால் சீட்டுக்கு சிபாரிசு செய்யப்பட்ட கே.என்.நேரு கட்சியின் முதன்மைச் செயலாளராகவும் அமைச்சராகவும் அதிகாரத்தின் உச்சத்தில் இருக்கிறார்.

கருணாநிதியுடன் செல்வராஜ்...
கருணாநிதியுடன் செல்வராஜ்...

நேருவுக்கு அரசியல் என்ட்ரி கொடுத்த செல்வராஜ் வீழ்ந்த கதை இப்படி இருக்க... “நேரு விஷயத்தில் ஜாக்கிரதையாக இருங்கள்” என்று அன்றைக்கே செல்வராஜை எச்சரித்த அன்பிலாரின் அரசியல் வாரிசு நேருவுடன் மல்லுக்கட்டும் கதையை அடுத்த வாரம் பார்க்கலாம்.

முந்தைய அத்தியாயத்தை வாசிக்க:

நேருவுடன் செல்வராஜ்...
கே.என்.நேருவை நம்பியவர்கள் என்ன ஆனார்கள்? - 1

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in