அதிமுக ஆட்சியில் ஆளுநருக்கு நடந்தது என்ன?: விவரித்த முதல்வர் ஸ்டாலின்

அதிமுக ஆட்சியில் ஆளுநருக்கு நடந்தது என்ன?: விவரித்த முதல்வர் ஸ்டாலின்

அதிமுக ஆட்சி காலத்தில் ஆளுநர் மற்றும் அதிகாரிகளுக்கு என்ன நடந்தது என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் பட்டியலிட்டுப் பேசினார்.

தருமபுரம் ஆதின குரு மகா சந்நிதானத்தின் ஞானரத யாத்திரையைத் துவக்கி வைக்க மயிலாடுதுறைக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று சென்றார். அப்போது அவருக்கு விசிக, திராவிடர் கழகம், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கருப்புக்கொடி காட்டின.

இந்த நிலையில் இன்று நடந்த சட்டப்பேரவை கூட்டத்தில் எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆளுநருக்கு கருப்புக்கொடி காட்டப்பட்டது தொடர்பாக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.

அப்போது அவர் பேசுகையில்,"ஆளுநரின் பாதுகாப்பில் காவல்துறை தகுந்த முன்னேற்பாடுகளை செய்யவில்லை. இது தமிழ்நாட்டு காவல்துறை மீது விழுந்த கரும்புள்ளி. ஆளுநருக்கே பாதுகாப்பு இல்லாத போது மக்களுக்கு எப்படி பாதுகாப்பு இருக்கும்? தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று அதிமுக வெளிநடப்பு செய்கிறது" என்று பேசினார். இதன் பின் அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். ஆளுநர் மீதான தாக்குதலைக் கண்டித்து பாஜக வெளிநடப்பு செய்வதாக சட்டப்பேரவையில் நயினார் நாகேந்திரன் கூறினார். இதன் பின் அக்கட்சியினர் வெளிநடப்பு செய்தனர்.

எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டிற்குப் பதிலளித்த முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், " மயிலாடுதுறையில் ஆர்ப்பாட்டத்தின் போது ஆளுநர் கான்வாய் மீது கற்கள் மற்றும் கொடிகள் வீசப்பட்டது என்பது அபாண்டமான குற்றச்சாட்டு. எந்தவித பாதிப்பு இல்லாமல் ஆளுநர் கான்வாய் அந்த இடத்தைக் கடந்துவிட்டதாக ஆளுநர் பாதுகாப்பு அதிகாரியே விளக்கம் அளித்துள்ளார். நடக்காத ஒன்றை நடந்ததாகக் கூறி அதிமுக அரசியல் செய்ய வேண்டாம். வெளிநடப்பு செய்த அதிமுக எதிர்கட்சி தலைவர், துணைத் தலைவருக்கு சில செய்திகளைச் சொல்ல விரும்புகிறேன்.

அதிமுக ஆட்சி காலத்தில் ஆளுநர் சென்னாரெட்டி பட்டபாடு அனைவருக்கும் தெரியும். முட்டை, தக்காளி அவர் மீது எறிந்து தாக்குதல் நடத்தியது யார்? அதிமுகவினர் தானே? அவரை திரும்பப் பெற வேண்டும் என சட்டப்பேரவையில் தீர்மானமும் அதிமுக தானே நிறைவேற்றியது. தலைமைத்தேர்தல் ஆணையராக இருந்த டி.என்.சேஷனை விமான நிலையத்தில் இருந்து துரத்தியடித்து அவர் தங்கிருந்த ஹோட்டல் வரை சென்று தாக்குதல் நடத்தியது அதிமுக தானே? பெண் ஐஏஎஸ் அதிகாரி சந்திரலேகா மீது ஆசிட் வீசப்பட்டதும் அதிமுக ஆட்சியில் தானே? இன்று பாஜகவில் உள்ள டாக்டர் சுப்பிரமணியன் சுவாமியை சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் தாக்குதல் நடத்தி அசிங்கப்படுத்தியதும் அதிமுக ஆட்சி தானே?" என்று ஸ்டாலின் அடுக்கடுக்காய் கேள்விகளை எழுப்பினார்.

Related Stories

No stories found.