எங்கே போனார்கள் சசிகலாவும் தினகரனும்?

உள்ளாட்சித் தேர்தலில் உருத்தெரியாமல் நிற்கும் அமமுக!
தினகரன், சசிகலா
தினகரன், சசிகலா

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் சின்னச் சின்னக் கட்சிகள் எல்லாம் தங்களது இருப்பைத் தக்கவைத்துக்கொள்ள, தங்களால் இயன்ற அளவு போராடிய நிலையில், சசிகலாவும் தினகரனும் சை லண்ட் மோடுக்குப் போனது சகலருக்கும் ஆச்சரியமே!

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் கோவையில் ஒரு வார்டில் ஒரே ஒரு ஓட்டு வாங்கிய பாஜககூட, இம்முறை தமிழகம் முழுக்க பரவலாக தனித்தே தனது வேட்பாளர்களை தைரியமாக நிறுத்தி இருக்கிறது. நாடாளுமன்ற, சட்டப்பேரவைத் தேர்தல்களில் திமுக, அதிமுகவுக்கு எதிராக கச்சைகட்டிய தினகரனின் அமமுக, இம்முறை அடக்கியே வாசிக்கிறது. அமமுக சார்பில் சுமார் 2,700 பேர் மட்டுமே வேட்புமனுத் தாக்கல் செய்திருந்த நிலையில், அவர்களில் சுமார் 700 பேர் போட்டியிலிருந்து விலகிவிட்டார்கள்.

தினகரன்
தினகரன்

அமமுகவினர் போட்யிட விருப்பம் காட்டாததற்கும், போட்டியிட முன்வந்தவர்களும் விலகிக் கொண்டதற்கும் காரணம் சட்டப்பேரவைத் தேர்தலில் கட்சித் தலைமை கொடுத்த அனுபவம்தான் காரணம் என்கிறார்கள். கட்சியிலிருந்து பணம் வரும் என்ற நம்பிக்கையில்தான், சட்டப்பேரவைத் தேர்தலில் அமமுகவினர் பலரும் போட்டியிட முந்தினார்கள். ஆனால், பெரும்பாலான இடங்களில் எதிர்பார்த்த பணம் போய்ச்சேரவில்லை. அதனால் அமமுக வேட்பாளர்கள் பலரும் கடைசி மூன்று நாட்களில் களத்தைவிட்டு ஒதுங்கிவிட்டார்கள். அந்த அனுபவம்தான் இம்முறை அமமுகவினரின் ஆர்வத்தை வெகுவாக முடக்கிவிட்டது. அதையும் தாண்டி, தலைமையை எதிர்பார்க்காமல் சொந்த செல்வாக்கை மட்டுமே நம்பி சிலர் களத்தில் நிற்கிறார்கள்.

அப்படி சொந்த பலத்தில் நிற்கும் கட்சியின் பேரூராட்சி வேட்பாளர்களுக்கு 10 ஆயிரம், நகராட்சி வேட்பாளர்களுக்கு 20 ஆயிரம், மாநகராட்சி வேட்பாளர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் அமமுக சார்பில் பட்டுவாடா செய்யப்பட்டதாகச் சொல்கிறார்கள். இதுவும் பரவலாக அதிருப்தியைக் கிளப்பி இருக்கிறது.

கட்சி வேட்பாளர்களுக்கு பணம் தராததோடு மட்டுமல்லாது, முடிந்தவர்கள் முட்டிக் கரைசேர்க என்ற முடிவில் பிரச்சாரத்துக்கும் வராமல் பதுங்கிக் கொண்டார் தினகரன். ‘’அமமுக சார்பில் தகுதியான வேட்பாளர்களை நிறுத்தி உள்ளோம். அவர்களுக்கு வாக்களியுங்கள். இத்தேர்தலில் ஆளுங்கட்சி முறைகேடு செய்யும் என்பது எல்லோருக்கும் தெரியும். தேர்தல் என்பது ஜனநாயக போர்க்களம். அதில், முறைகேடுகளைத்தாண்டி வெற்றிபெற முயற்சி செய்வோம்” என்று செய்தியாளர்களிடம் பேசியதும், அதைத் தொடர்ந்து வெிளியிட்ட அறிக்கையும்தான் இந்தத் தேர்தலுக்காக தினகரன் செய்த பிரச்சாரம்.

தேர்தல் என்றில்லாமல், சமீபகாலமாகவே தினகரனின் செயல்பாடுகள் முடங்கிவிட்டதாகச் சொல்கிறார்கள். கட்சி நிர்வாகிகளைச் சந்திப்பதையும் அவர் தவிர்த்து வருவதால், அமமுக நிர்வாகிகள் பலரும் தேர்தல் முடிந்ததும் சசிகலாவை சந்திக்கும் திட்டத்தில் இருப்பதாகச் சொல்கிறார்கள். இது ஒருபுறமிருக்க, சித்தி வந்ததும் அதிமுக நம் வசமாகும் என்று சொல்லிக் கொண்டிருந்த தினகரன், போஸ்டர்களில் சசிகலாவின் படத்தைப் போடவேண்டாம் என கட்சியினருக்கு கட்டளை இட்டிருப்பதாகச் சொல்கிறார்கள். இந்தக் கண்டிப்பின் எதிரொலியாகத்தான், சசிகலா வெள்ள நிவாரணம் வழங்கிய நிகழ்வை அமமுகவினர் புறக்கணித்ததாகவும் ஒரு பேச்சு உண்டு.

தினகரன் இப்படி தீர்மானமாக இருக்க, இன்னொரு பக்கம் சசிகலா என்ன செய்வது என்றே தெரியாமல் தவிக்கிறார். சிறையிலிருந்து விடுதலையாகி வந்ததும், தீவிர அரசியலில் ஈடுபடப்போவது உறுதி என்று கூறியவர், அடுத்த சில வாரங்களில் அரசியலிலிருந்து ஒதுங்குவதாக அறிவித்தார். பின்னர், தொண்டர்களிடம் தொலைபேசியில் பேசி பரபரப்பை கிளப்பினார். மதுசூதனன் மறைவு, ஓபிஎஸ் மனைவி மறைவு ஆகிய நிகழ்வுகளுக்கு சென்று வந்து அதிமுக தலைமைக்கு கிலி ஏற்படுத்தினார் சசிகலா.

சசிகலா
சசிகலா

இத்தனையும் செய்த சசிகலா, ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தது தினகரனே எதிர்பார்க்காத ட்விஸ்ட்.

நிவாரண உதவி வழங்கும் சசிகலா
நிவாரண உதவி வழங்கும் சசிகலா

அண்ணாவின் 53-வது நினைவு நாளையொட்டி, தி.நகரில் அண்ணாவின் திருவுருவப் படத்துக்கு மலர்தூவி மரியாதைச் செலுத்திய சசிகலா, தன்னை அதிமுக பொதுச்செயலாளர் என்றே கருதிக்கொண்டு பேட்டியளித்தார்.

’’அதிமுகவில் உள்ளவர்கள் எடுத்தோம், கவிழ்த்தோம் என்று எதையும் செய்யக்கூடாது. தேர்தலுக்குப் பின்னர் மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் செல்ல உள்ளேன். உள்ளாட்சித் தேர்தலில் மக்களின் ஆதரவுடன் அதிமுக வெற்றிபெறும். கடந்த 8 மாத கால திமுக ஆட்சியைப் பார்த்துக்கொண்டிருக்கும் மக்கள், உள்ளாட்சியில் யார் பொறுப்புக்கு வந்தால் சரியாக இருக்கும் என்று எண்ணிப்பார்த்து வாக்களிக்க வேண்டும்” என்றார் சசிகலா. ஆக, ‘மீண்டும் ஜெயலலிதாவின் ஆட்சியை அமைப்போம்’ என்பதுதான் சசிகலா அளித்த பேட்டியின் சாராம்சம் என்றே கருதப்படுகிறது.

“உள்ளாட்சி தேர்தலுக்குப் பின்னர் நல்ல செய்தி வரும்” என்றும் சசிகலா கூறியிருக்கிறார். பாஜக தலைமையின் மத்தியஸ்தத்துடன் அதிமுகவில் இணைய சசிகலா திட்டமிடுகிறார். 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு, பாஜக மேலிடம் இந்த விஷயத்தில் தனிக்கவனம் செலுத்தும் என்ற பேச்சும் இருக்கிறது. இப்போதுள்ள நிலையில் அதிமுகவுக்கு புதிய எழுச்சியை உண்டாக்க வேண்டும். அப்படி உண்டாக்கினால்தான் அடுத்து வரும் பாராளுமன்றத் தேர்தலில் திமுகவை சமாளிக்க முடியும் என்பது பாஜகவுக்கு தெரியும். அத்தகைய எழுச்சி, சசிகலாவின் அதிமுக வருகையால்கூட தீர்மானிக்கப்படலாம் என்பதும் பாஜகவின் ஒருசாரரின் கணிப்பு என்கிறார்கள்.

சசிகலாவின் கண்ணசைவில் அதிமுக என்ற பேரியக்கம் இயங்கிய காலம்போய், அதே அதிமுகவில் தன்னை இணைத்துக் கொள்ள இன்னொரு கட்சியின் மத்தியஸ்தத்துக்காக காத்திருக்கிறார் சசிகலா. அவரது பெயரைச் சொல்லி அரசியலில் முக்கியத்துவம் பெற்ற டிடிவி தினகரன், கட்சியை நடத்த முடியாமல் தள்ளாட்டத்தில் இருக்கிறார். சித்தியும் மகனும் அரசியல் அஸ்தமனத்தின் அருகே நிற்கிறார்களா அல்லது அடுத்தகட்ட ஆட்டத்துக்காக ஆயத்தமாகிறார்களா? என்பதும் உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளுக்குப் பின்னால் தெரிந்துவிடும்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in