ஓபிஎஸ்சை நம்பி வந்தவர்கள் என்ன ஆனார்கள் - 2

அய்யோ பாவம் ஆறுகுட்டி..!
ஓபிஎஸ்சை நம்பி வந்தவர்கள் என்ன ஆனார்கள் - 2
ஆறுகுட்டி

வெற்றிகரமாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவியை, மீண்டும் தனக்காகத் தக்கவைத்திருக்கிறார் ஓபிஎஸ். அன்றைக்கு அவருக்கு ஓர் ஆபத்து என்றதும் ஆதரவாக வந்தவர்கள் தான் இப்போது எங்கே இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை. அதைப்பற்றி விரிவாகப் பேசும் குறுந்தொடர் தான் இது. இனி வாரம்தோறும், ஓபிஎஸ்சை நம்பி வந்து தங்கள் அரசியல் இருப்பைத் தொலைத்தவர்களின் கதையை இந்தத் தொடர் பேசும்.

கடந்த வாரம் ஓபிஎஸ்சை நம்பி அதிமுகவில் ஓரங்கப்பட்ட, மாஃபா பாண்டியராஜன் பற்றிப் பேசினோம். பின்னாலேயே, சென்னையில் நடந்த விழா ஒன்றில் தமிழக அரசையும், அறநிலையத் துறை அமைச்சரையும் புகழ்ந்து பேசியிருக்கிறார் பாண்டியராஜன். "அவர் திமுகவுக்கு வரப்போகிறாரா?" என்று பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு, "வந்தால் வரவேற்போம்" என்று சொல்லியிருக்கிறார் அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு. எங்கே அவர் திமுகவுக்கு வந்துவிடுவாரோ என்கிற பயத்தில், "ஆர்எஸ்எஸ் சித்தாந்தம்கொண்ட மாஃபாவை திமுகவில் சேர்த்துக்கொள்ளக் கூடாது!" என்று திமுகவினர் சமூக வலைதளங்களில் மு.க.ஸ்டாலினையும், சேகர் பாபுவையும் டேக் செய்து வலியுறுத்திக்கொண்டிருக்கிறார்கள்.

அது ஒருபக்கம் இருக்கட்டும். இந்தவாரம் நாம் பேசப் போவது, முன்னாள் எம்எல்ஏவான ஆறுகுட்டி பற்றி.

ஓபிஎஸ்ஸுடன் ஆறுகுட்டி...
ஓபிஎஸ்ஸுடன் ஆறுகுட்டி...

ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்திய அன்றைய தினமே, அவருக்கு ஆதரவாக வந்து நின்ற முதல் அதிமுக எம்எல்ஏ ஆறுகுட்டிதான். கவுண்டம்பாளையம் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தவர் இவர். அதிமுகவில் சாதாரண தொண்டனும் உயர்ந்த பதவிக்கு வரமுடியும் என்பார்களே, அதற்கு உதாரணமான மனிதர்.

கோவை மாவட்டம், விளாங்குறிச்சியைச் சேர்ந்த ஆறுகுட்டி, அதிமுகவின் ஆரம்ப காலத் தொண்டர்களில் ஒருவர். திருவிழாக்களில் நடனமாடுவது இவருக்குத் தொழில். 1972-ல் ‘ஜமாப்’ என்ற கலைக்குழுவைத் தொடங்கியவர். பிறகு நடந்த ஊராட்சித் தேர்தலில் வார்டு உறுப்பினருக்கு நின்று வென்றார். அரசியல் ஆசை வர, அடுத்தடுத்து 3 முறை பஞ்சாயத்துத் தலைவராக வெற்றிபெற்றார் ஆறுகுட்டி. கட்சியிலும் கிளைச் செயலாளர், ஒன்றிய எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர், ஒன்றிய அதிமுக செயலாளர் என்று வளர்ந்தவருக்கு, 2011-ம் ஆண்டு முதன் முதலில் சட்டப்பேரவைத் தேர்தலில் வாய்ப்புக் கொடுத்தார் ஜெயலலிதா.

கோவை மாவட்டத்திலேயே மிக அதிக வாக்காளர்களைக் கொண்டதும், தமிழ்நாட்டின் 2-வது பெரிய தொகுதியுமான கவுண்டம்பாளையம் தொகுதியில், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் சுப்பிரமணியனைவிட 2 மடங்கு அதிக ஓட்டுகள் (1,37,058 ஓட்டுகள்) வாங்கினார் ஆறுகுட்டி. கட்சியிலும், மக்களிடமும் நல்ல பெயர் வாங்கியதால், அடுத்த முறையும் வாய்ப்புக் கிடைத்தது. 2016-லும் அதே தொகுதியில் எம்எல்ஏ ஆனார்.

விதி ஓபிஎஸ் வடிவில் வந்தது. அம்மா சமாதியில் ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்திய காட்சியையும், பரிதாபமாக முகத்தை வைத்துக்கொண்டு அவர் பத்திரிகையாளர்களிடம் பேசியதையும் டிவியில் பார்த்து உணர்ச்சிவசப்பட்டவர், நேராக ஓபிஎஸ் வீட்டுக்கே வந்துவிட்டார். அதுவரையில் ஒரு எம்எல்ஏ கூட ஓபிஎஸ் பக்கம் வரவில்லை. இன்னும் 4 ஆண்டுகள் முழுமையாக ஆட்சி இருக்கும்போது, கோடிகளைக் கொட்டி எம்எல்ஏ ஆன யாராவது ஆளுங்கட்சியை விட்டுவிட்டு வருவார்களா? 2017 பிப்ரவரி 8-ல் இவர் வந்தார். ஓபிஎஸ் அடித்த முதல் சிக்ஸராக இதைக் கொண்டாடின ஊடகங்கள்.

ஆறுகுட்டி
ஆறுகுட்டி

"அம்மா மறைவுக்குப் பிறகு அருமை அண்ணன் ஓபிஎஸ் அவர்கள் முதல்வராகச் சிறப்பாகப் பணியாற்றினார்கள். அவர் ராஜினாமா செய்ததுகூட சுயவிருப்பத்தில்தான் என்று நினைத்தோம். திடீரென்று அவர் அம்மா சமாதிக்குச் சென்று, தியானத்தில் ஈடுபட்டு பேட்டி கொடுத்தபோதுதான் தெரிந்தது, போயஸ் கார்டன் வீட்டில் 2 மணி நேரம் அவரை உட்காரவைத்து மிரட்டி, கடுமையாக நடத்தி ராஜினாமா கடிதத்தில் கையெழுத்து வாங்கியிருக்கிறார்கள் என்று. அமைச்சர் உதயகுமார், சி.விஜயபாஸ்கர் போன்றோரும் போய் வற்புறுத்தியிருக்கிறார்கள். இவ்வளவும் நடந்தது முதலில் எங்களுக்குத் தெரியாது. அண்ணன் பேட்டி கொடுத்த பிறகுதான், அவரை ரொம்ப டார்ச்சர் பண்ணியிருக்காங்கன்னு தெரிஞ்சுது.

அவர் முதல்வராக இருந்தபோதே, எதிர்க்கட்சி உறுப்பினர்களும், ஊடகத்தினரும் இருக்கிற சட்டப்பேரவையில் சிலர், ‘முதல்வர் சின்னம்மா’ என்று பேசினார்கள். இதெல்லாம் அவரை எவ்வளவு காயப்படுத்தியிருக்கும்? அவருக்கு ஆதரவாக நான் வந்துவிட்டேன். இன்னும் பலர் வருவார்கள். நான் மக்களோடும், தொண்டர்களோடும் நெருங்கிப் பழகுகிறவன். நான் இப்படியொரு முடிவு எடுத்திருப்பது தெரிந்ததும், பொதுமக்களும், சாதாரண தொண்டர்களும் போன் போட்டு அண்ணே, அருமையான முடிவெடுத்தீங்க என்று பாராட்டிக்கொண்டே இருக்கிறார்கள். ஒருவர்கூட, எதுக்காக இப்படிப் பண்ணுனீங்கன்னு கேட்கல" என்றார் பெருமையாக.

எடப்பாடி அணிக்கு வந்த போது...
எடப்பாடி அணிக்கு வந்த போது...

இவரது வருகை மற்ற எம்எல்ஏக்களுக்கும் நெருக்கடியைத் தந்தது. அடுத்தடுத்து மேலும் 9 பேர் வந்துவிட்டார்கள். ஏற்கெனவே தங்கமணி, வேலுமணியுடன் வாய்க்கா தகராறு நிலையில், இவர் ஓபிஎஸ் பக்கம் வந்த பிறகு அவர்களுக்குப் பகையாளியானார். "ஓபிஎஸ் மாதிரி ஒரு தங்கமான மனிதரைப் பார்க்க முடியாது. அவரை எப்போது வேண்டுமானாலும் சந்திக்கலாம்" என்று சொன்ன ஆறுகுட்டிக்கு, உண்மை வேறு என்பது புரியத் தொடங்கியது. “நான் சரியான முடிவு எடுத்திருக்கிறேன். கடைசிவரையில் அண்ணன் கூடத்தான் இருப்பேன் என்று சொன்னவரால், 5 மாதம்கூட இருக்க முடியவில்லை. பிப்ரவரியில் சேர்ந்தவர் ஜூலை 17-ம் தேதி அணி மாறிவிட்டார்.

ஆனாலும்கூட, ஓபிஎஸ்ஸை வசைபாடவில்லை. ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் இணைய வேண்டும் என்றே பத்திரிகையாளர்களைப் பார்க்கிற இடமெல்லாம் சொல்லிக்கொண்டிருந்தார் ஆறுகுட்டி. ஓபிஎஸ் அணிக்கு முதலில் வந்த இவரே, ஓபிஎஸ் அணியில் இருந்தும் முதலில் வெளியேவந்து, ஓபிஎஸ் அடுத்து என்ன முடிவெடுக்க வேண்டும் என்று வழிகாட்டினார் என்று கூட சொல்லலாம். பின்னாலேயே, ஓபிஎஸ் சேர்ந்தார். துணை முதல்வரானார், கழக ஒருங்கிணைப்பாளரும் ஆனார். ஆனால், அவருக்காக முதலில் வெளியேவந்த ஆறுகுட்டிக்கு எந்த நல்லதும் நடக்கவில்லை. ஓபிஸ்ஸும் அவரைக் கவனிக்கவில்லை. ஈபிஎஸ்ஸும் ஆறுகுட்டியை சந்தேகமாகவே பார்த்தார். கடைசியில் 2021 தேர்தலில் அவருக்கு சீட்டும் கிடைக்கவில்லை.

என்ன தான் செஞ்சுட்டு இருக்கீங்க என்று ஆறுகுட்டியிடமே கேட்டோம், "கட்சியில் எனக்கு முக்கியத்துவம் கொடுக்கலைன்னு இல்ல, நான் அப்படியே ஒதுங்கிட்டேன் சார். கட்சியில பொதுக்குழு உறுப்பினரா இருந்தேன். அதுவும் வேணாம்னு எழுதிக்கொடுத்திட்டேன். இப்ப எந்தப் பொறுப்புலயும் இல்லை. புரட்சித் தலைவர், அம்மா காலத்தோட அதிமுக முடிஞ்சி போச்சு. இப்ப இருக்கிறது அண்ணா திமுகவே கிடையாது. வேலுமணி திமுக, தங்கமணி திமுக, எடப்பாடி திமுகதான் இருக்குது. ஓபிஎஸ் பற்றி எதுவும் கேட்காதீங்க. அது சுத்த வேஸ்ட்" என்று முடித்துக்கொண்டார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், ஓபிஎஸ் அணி வெற்றிபெற வேண்டும் என்பதற்காக தன் பாணியில் நடனமாடி, மேளம் அடித்து ஓட்டுக்கேட்டவர் ஆறுகுட்டி. அவருக்கே மேளமடித்துவிட்டார் பன்னீர்செல்வம்.

இன்னும் இருக்கு...

முந்தைய அத்தியாயத்தை வாசிக்க:

ஆறுகுட்டி
ஓபிஎஸ்ஸை நம்பி வந்தவர்கள் என்ன ஆனார்கள்? - 1

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in