நம்பிக்கை இல்லா தீர்மானம்... இன்று மணிப்பூர் விரையும் ‘இந்தியா’ கூட்டணி... வன்முறை பகுதியில் ஆய்வு!

நம்பிக்கை இல்லா தீர்மானம்... இன்று மணிப்பூர் விரையும் 
‘இந்தியா’ கூட்டணி... வன்முறை பகுதியில் ஆய்வு!

மணிப்பூரில் நடந்த வன்முறை தொடர்பாக இந்தியா கூட்டணியைச் சேர்ந்த எதிர்க்கட்சிகள் இன்று மணிப்பூர் சென்று நேரில் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.

மணிப்பூர் மாநிலத்தில், மெய்தி, குகி சமூகத்தினருக்கு இடையே கடந்த மே 3-ம் தேதி வெடித்த வன்முறை 3 மாதங்களாக நடந்து வருகிறது. 160-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த வன்முறையை தடுக்க தவறியதாக மத்திய-மாநில அரசுகளை எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. அத்துடன் இந்த பிரச்சினையை முன்வைத்து நாடாளுமன்றத்தையும் தொடர்ந்து முடக்கி வருகின்றன. இதன் தொடர்ச்சியாக கலவர பூமியான மணிப்பூருக்கு நேரில் சென்று கள நிலவரத்தை ஆய்வு செய்ய எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.

அதன்படி 'இந்தியா' கூட்டணியைச் சேர்ந்த எதிர்க்கட்சி தலைவர்கள் இன்று (ஜூலை29) மணிப்பூர் செல்கின்றனர். இன்றும், நாளையும் மாநிலத்தில் கலவர பாதிப்புகளை அவர்கள் ஆய்வு செய்ய உள்ளனர். இந்த குழுவில் ஆதிர்ரஞ்சன் சவுத்ரி, கவுரவ் கோகாய் (காங்கிரஸ்), சுஷ்மிதா தேவ் (திரிணமூல் காங்கிரஸ்), மகுவா மாஜி (ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா), கனிமொழி (தி.மு.க.), வந்தனா சவான் (தேசியவாத காங்கிரஸ்), ஜெயந்த் சவுத்ரி (ராஷ்டிரீய லோக்தளம்), மனோஜ் குமார் ஜா (ராஷ்டிரீய ஜனதாதளம்), பிரேமச்சந்திரன் (புரட்சிகர சோஷலிச கட்சி), திருமாவளவன் (விடுதலை சிறுத்தைகள்) ஆகியோர் இடம்பெறுவார்கள் என தெரிகிறது.

மணிப்பூரில் நடந்துள்ள தவறுகள், பாதிப்பு நிலவரங்கள், உயிர்ச்சேதம், பொருட்சேதங்களை எதிர்க்கட்சிகள் ஆய்வு செய்ய உள்ளனர். ஏற்கெனவே முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மணிப்பூரில் மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார் என்பது நினைவில் கொள்ளத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in