ஆளுநரின் டெல்லி பயணம் தமிழகத்தில் என்ன விளைவை ஏற்படுத்தும்?

ஆளுநரின் டெல்லி பயணம் தமிழகத்தில் என்ன விளைவை ஏற்படுத்தும்?

ஜனநாயக நாடான இந்தியாவில் போராடுவதற்கு அரசியல் சட்டம் அனைவருக்கும் இடம் வழங்கியுள்ளது. கோரிக்கையின் தன்மையைப் பொறுத்து அப்போராட்டத்தின் வடிவம் மாறுகிறது. சுதந்திரப் போராட்ட காலத்தில் தன்னையே வருத்தி உண்ணாநிலை என்ற போராட்ட ஆயுதத்தை காந்தி முன்னெடுத்தார். அதற்கு அடுத்து ஒத்துழையாமை இயக்கம் நடத்தினார். அந்நிய துணிகள் பகிஷ்கரிப்பு போராட்டம் செய்தார். இப்படி அடக்குமுறை அரசுக்கு எதிரான போராட்டத்தின் வடிவங்களை மகாத்மா காந்தி மாற்றிக் கொண்டேயிருந்தார் என்பது தான் வரலாறு.

ஆர்ப்பாட்டம், தொடர் முழக்கப்போராட்டம், ரயில் மறியல், சாலை மறியல், கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் என்பது போராட்டத்தின் வடிவங்கள் தான். அப்படித்தான் இந்தியா முழுவதும் போராட்டம் நடக்கின்றன. பாஜகவினர் தங்களுக்குப் பிடிக்காதவர்கள் மீது கருப்பு மையை முகத்தில் ஊற்றி வித்தியாசமாக போராடுவார்கள். ஆனால், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக நடத்தப்பட்ட கருப்புக்கொடி போராட்டம், தேசவிரோதச் செயல் போல பாஜக தலைவர் அண்ணாமலையால் சித்தரிக்கப்படுவதை மக்கள் எப்படிப் பார்க்கிறார்கள்?

தமிழகம் மற்றும் புதுவையில் நாற்பது நாடாளுமன்றத் தொகுதிகள் உள்ளன. வருகிற 2024 நாடாளுமன்றத் தேர்தலில் 25 தொகுதிகளைத் தமிழகத்தில் கைப்பற்றுவோம் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தொடர்ந்து கூறி வருகிறார். அதற்கானப் பணிகளைத் துவங்கி விட்டோம் என்கிறார். அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக 25 தொகுதிகளைக் கைப்பற்றும் என்றால், அதிமுக எத்தனைத் தொகுதிகளில் போட்டியிடப்போகிறது என்ற சந்தேகம் அந்த கட்சி உறுப்பினர்களிடையே எழுந்துள்ளது. இதைப்பற்றி தான் இப்போது தமிழகம் முழுவதும் அக்கட்சியினரிடையே பேச்சாக உள்ளது. ஆனால், இதுகுறித்து அதிமுக தலைமை இது வாய் திறக்க மறுக்கிறது.

ஆனால்," தமிழக ஆளுநருக்கே பாதுகாப்பு இல்லையென்றால், சாதாரண மக்களுக்கு அரசு எப்படி பாதுகாப்பு அளிக்கும்?" என்று பாஜகவுடன் சேர்ந்து குரல் கொடுக்கிறது. ஆளுநருக்கு எதிராக போராடுவதால் சட்டம் ஒழுங்கு கெட்டு விடுமா?

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என நீதிமன்றத்தால் அனைவருக்கும் தெரியும். அதிமுக ஆட்சியில் ஊழல் பெருகி விட்டது என 1995-ம் ஆண்டு 539 பக்கங்களைக் கொண்ட ஊழல் பட்டியலை அன்றைய ஆளுநர் சென்னாரெட்டியிடம் திமுக வழங்கியது. இதன் தொடர்ச்சியாக வாழப்பாடி ராமமூர்த்தி, பாமக ராமதாஸ், மதிமுக வைகோ போன்றோரும் ஆளுநரிடம் அப்படியான புகார் அறிக்கைகளைத் தந்தனர். இதன் விளைவாக ஜெயலலிதா மீது வழக்குத் தொடர ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியன் சுவாமிக்கு ஆளுநர் சென்னாரெட்டி அனுமதி அளித்தார்.

இதன் விளைவாக சென்னாரெட்டிக்கு எதிராக அதிமுக நடத்திய போராட்டத்திற்கு அடுத்த நாள், "சென்னாரெட்டி உயிர் தப்பினார் - மெய்க்காவலர் ரத்தகாயம்" என்று நாளிதழ்களில் தலைப்பு செய்தியானது. அப்படி என்ன போராட்டம் நடந்தது?

ஜெயலலிதாவிற்கு எதிராக வழக்குத் தொடர அனுமதி தந்த ஆளுநர் சென்னாரெட்டி, வழக்குத் தொடுத்த சுப்பிரமணியன் சுவாமியை தாக்க அதிமுகவினர் முயற்சி செய்தனர். 1995 ஏப்ரல் 10-ம் தேதி சென்னையில் இருந்து புதுவைக்கு ஆளுநர் சென்னாரெட்டி சென்றார். அவருக்கு எதிராக போராட்டம் நடத்த திண்டிவனத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அதிமுகவினர் திரண்டனர். மாலை 4.30 மணிக்கு ஆளுநரின் கார் திண்டிவனத்திற்குள் நுழைந்தது. வீராணம் இல்லம் நோக்கி வந்த அந்தக் காரை அதிமுகவினர் முற்றுகையிட்டனர். கார் மீது கற்கள், அழுகிய முட்டை, தேங்காய் மட்டை போன்றவை சரமாரியாக வீசப்பட்டன. கிட்டத்தட்ட அரைமணி நேரம் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. பயந்து போன ஆளுநர் சென்னாரெட்டி காருக்குள் பதுங்கியே இருந்தார். இதன் பின்பே அவர் புதுவை சென்றார். அதிமுகவினரின் இந்த தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், தற்போதைய ஆளுநருக்கு எதிராக எப்படி போராட்டம் நடைபெற்றது?

தமிழக மக்களின் நலனுக்கு எதிராக இருக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக மயிலாடுதுறையில் கருப்புக்கொடி காட்டப்படும் என பல்வேறு கட்சிகள், அமைப்புகளால் முன்கூட்டியே அறிவிக்கப்படுகிறது.

இதையொட்டி ஆளுநரின் பயணத்தின்போது ஐ.ஜி தலைமையில் 2 டிஐஜிக்கள், ஆறு மாவட்ட எஸ்.பிக்கள் உள்பட ஆயிரத்து நானூறு பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இந்த விவரங்களை சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலினே எடுத்துரைத்துள்ளார்.

மயிலாடுதுறையில் என்ன நடந்தது என ஆளுநரின் பாதுகாப்பு அதிகாரி விஸ்வேஷ் பி.சாஸ்திரி, டிஜிபிக்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளார். அதில் "ஆளுநரின் வாகனத்தைத் தடுத்து நிறுத்த முற்பட்டனர். அத்துடன் அவருடைய வாகனம் மீது கொடிகள் ஆகியவற்றை வீசத் தொடங்கினர். எனினும் நல்வாய்ப்பாக ஆளுநரின் வாகனம் எந்தவித பாதிப்பும் இல்லாமல் அங்கு இருந்து பத்திரமாகச் சென்றது. இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது ஐபிசி பிரிவு 124-ன்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

வாகனத்திற்கே எந்த சேதமும் இல்லையென்று ஆளுநரின் பாதுகாப்பு அதிகாரி அறிக்கை கொடுத்த பிறகும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை சரியில்லை என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறுகிறார். தமிழகத்தின் சரித்திரத்தில் இப்போதும், எப்போதும் ஆளுநரின் கான்வாய் மீது ஒரு சின்ன தூசி கூட விழுந்தது கிடையாது. அப்படிப்பட்ட காவல்துறையும், தலைவர்களும் நம்மிடம் இருந்தனர் என்று அண்ணாமலை பேசுகிறார்.

ஏற்கனவே, தமிழக அரசுக்கும், ஆளுநருக்கும் உள்ள மோதலை இப்பிரச்சினை மூலம் பாஜக பயன்படுத்த நினைக்கிறதோ என்று பொதுமக்கள் சந்தேகம் கொள்கின்றனர். இந்த நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி சென்றுள்ளது அரசியல் ரீதியாகப் பார்க்கப்படுகிறது. அவர் உள்துறை அமைச்சரைச் சந்தித்து பேச உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களில் ஆளுநர் மூலம் நெருக்கடி தரும் பாஜக, தமிழக அரசுக்கும் பெரிய அளவில் நெருக்கடியைத் தருவதற்கான ஆலோசனை நடத்துவதற்குத்தான், தமிழக ஆளுநர் டெல்லி சென்றுள்ளார் என்று எதிர்க்கட்சியினர் கிளப்பி விடுகின்றனர்.

ஆனால், ஆளுநர் டெல்லியில் ஒரு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றுள்ளதாக கூறப்படுகிறது. எனவே, ஆளுநரின் டெல்லி பயணம் தமிழக அரசியலில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தாது என்பதே நிஜம். ஏனெனில், மக்கள் மன்றத்தால் தேர்வு செய்யப்பட்ட அரசு என்ற அமைப்பை தனி மனிதர்களால் என்ன செய்ய முடியும்?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in