ஆர்.என்.ரவி என்ன பேசினார்?- ஆளுநர் மாளிகை அளித்த விளக்கம்!

ஆர்.என்.ரவி என்ன பேசினார்?- ஆளுநர் மாளிகை அளித்த விளக்கம்!

தமிழ்நாட்டை தமிழகம் என அழைக்க வேண்டும் என்று ஆளுநர் ரவி பேசியது சர்ச்சையான நிலையில், அவரது பேச்சின் உண்மையான உள்ளடக்கத்தை ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டை தமிழகம் என அழைக்க வலியுறுத்தி ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில், சென்னை ஆளுநர் மாளிகையில் காசி தமிழ்ச் சங்கமத்துக்கான ஏற்பாடுகளை செய்த அமைப்பாளர்கள் மற்றும் தன்னார்வலர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சியில் ஆளுநர் பேசியதன் உண்மையான எழுத்து வடிவ மொழியாக்கம் வெளியிடப்பட்டுள்ளது. அதில், பிரதமர் மோடி நமது நாட்டை `பாரதம்' என்ற கண்ணோட்டத்தில், `ஒரே குடும்பமாக' பார்க்கிறார். ஆனால் இந்த யதார்த்தம் காலனித்துவ காலத்தில் இருந்து உருவாக்கப்பட்ட புகைமூட்டத்தால் மறைக்கப்பட்டுள்ளது என்று ஆளுநர் கூறியுள்ளார்.

அதற்கேற்பவே தமிழகத்தில் `நாங்கள் திராவிடர்கள்' என்ற பிற்போக்கு அரசியல் இருந்து வருகிறது. அதனுடன் நமக்கு எந்தத் தொடர்பும் இல்லை. நாம் அரசியலமைப்பால் ஒன்றிணைக்கப்பட்டு அதன் அடிப்படையில் மட்டுமே செயலாற்றுகிறோம். ஆனால் கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக தமிழ்நாட்டில் ‘நாங்கள் ஒருங்கிணைந்த தேசத்தின் அங்கம் இல்லை’ என்று வலுவான ஒரு கதையை சொல்லி வருகிறார்கள். அதனாலேயே நாடு முழுவதற்கும் பொருந்தக்கூடிய அனைத்தையும், தமிழ்நாட்டில் உள்ளவர்கள் ‘இல்லை, எங்களுக்கு வேண்டாம்’ என்று சொல்லும் நிலை உருவாக்கப்பட்டுள்ளது.

இதற்கு மாறாக நாம் அனைவரும் ஒன்று. பாரதத்தின் ஒரு பகுதி தமிழ்நாடு. அதற்கேற்ப தமிழகம் என்று நாம் அழைப்பதே மிகவும் பொருத்தமானது. காரணம், இந்த நிலம் பாரதத்தின் ஆன்மாவை, பாரதத்தின் அடையாளத்தை பராமரிக்கிறது. வெளிநாட்டினர் ஏற்படுத்திய பல அழிவுகளையும் மீறி பல ஆயிரம் ஆண்டுகளாக இந்த மண்ணில் ஒற்றுமை பராமரிக்கப்பட்டு வருகிறது. முழு பாரதத்தையும் நிலைநிறுத்தி அதற்குப் புத்துயிர் தருவது இந்த நம்பிக்கை தான். இப்போது இதை சிலர் பொய்யாக்க முயற்சிப்பதை ஏற்க முடியாது" என்று தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in