
சென்னையில் நடந்த மகளிர் உரிமை மாநாட்டில் தந்தை பெரியார் குறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் சுப்ரியா சுலே பேசினர்.
தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டையொட்டி திமுக மகளிரணி சார்பில் சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் மகளிர் உரிமை மாநாடு நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, "மாற்றத்திற்கான சரியான தளத்தில் இப்போது நாம் அனைவரும் நின்று கொண்டிருக்கிறோம். முழுமையான சமத்துவத்தை பெற நாம் இன்னும் உழைக்க வேண்டும். நீங்கள் தான் என் தாய். நீங்கள்தான் என் சகோதரி. இங்கே இருப்பதை நான் பெருமையாக கருதுகிறேன். பெண் ஏன் அடிமையானால் என்ற புத்தகத்தை எழுதியவர் தந்தை பெரியார். பெண்கள் ஏன் அடிமையாகவே இருக்கிறார் என்ற பெரியாரின் கேள்வி தற்போதும் நீடிக்கிறது. சமூக மாற்றத்திற்கான புரட்சி இங்கே தான் உருவானது. முழுமையான சமத்துவத்தை பெற நாம் இன்னும் உழைக்க வேண்டும்" என்றார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ உறுப்பினர் சுபாஷினி அலி பேசுகையில், "தேர்தல் அரசியலில் களம் இறங்குவதற்கு முன்பே சமூக, கலாச்சார மாற்றத்துக்காகப் போராடிய மு.கருணாநிதியின் வாழ்க்கையையும் போராட்டத்தையும் போற்றுவதற்காக நான் இன்று இங்கே வந்திருப்பது எனக்கு கிடைத்திருக்கும் பெரும் பேறு. பெண்களின் ஆதரவைப் பெறும் முயற்சியில், பிஜேபி அரசு மகளிர் இடஒதுக்கீட்டுச் சட்டத்தை இயற்றியிருக்கிறது. ஆனால் அந்த சட்டம் நடைமுறைப் படுத்தப்படுவதை காலவரையின்றி ஒத்திவைக்கும்படியான நிபந்தனைகளை சேர்த்திருக்கிறார்கள்.
இது நமது அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் திமுக போன்றவர்களுக்கு அதிர்ச்சியூட்டும் அடியாகும். நாம் பெண்களின் இட ஒதுக்கீட்டுக்காக 27 ஆண்டுகளாக ஒன்றிணைந்து போராடி வருகிறோம். ஆனால் இப்போது நாட்டின் முக்கியமான பிரச்சினைகளில் இருந்து கவனத்தை திசை திருப்பும் தந்திரமாக இந்த சட்டம் இயற்றப்பட்டு, பெண்களுக்கு எதிரான, மக்களுக்கு எதிரான இந்த அரசாங்கத்தால் நாம் ஏமாற்றப்பட்டுள்ளோம்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாக குழு உறுப்பினர் ஆனி ராஜா பேசுகையில், "2014ம் ஆண்டு ஒன்றிய பாஜக ஆட்சி வந்ததில் இருந்து பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. பாலியல் குற்றங்களில் ஈடுபடும் நபர்களுக்கு மீது நடவடிக்கை எடுத்து நீதிமன்றத்திற்கு சென்றால் அவர்களுக்கு தண்டனை கிடைப்பதில்லை. இந்தியாவில் நிறைய சட்டங்கள் உள்ளது, பெண்களின் உரிமைக்காக. இந்தியாவில் பெண்கள் போராடி அவர்களின் ரத்தத்தின் மீது தான் நிறைய சட்டங்கள் இயற்றப்பட்டது. பெண்களை ஏமாற்றி தான் தற்போது பாஜக ஆட்சியில் உள்ளது. தற்போது நாடாளுமன்ற தேர்தலுக்காக பெண்களுக்கு இட ஒதுக்கீட்டு சட்டத்தை இயற்றி இருக்கிறார்கள். பேப்பரில் சர்க்கரை என்று எழுதி அருகில் தீயை வைத்து குடித்தால் இனிக்குமா ? அதேபோல் தான் மகளிர் இட ஒதுக்கீடும். பெண்கள் ஏமாற்றி ஆட்சியில் அமர்ந்து இருக்கும் பாஜக ஆட்சியை ஒழித்து கட்ட வேண்டும். அனைத்து உரிமைகளையும் காப்பாற்றவும் இந்தியாவை காப்பாற்றவும் நம்மளை நாமே காப்பாற்றவும் மோடி ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் அளவில் இந்த மாநாடு அமைய வேண்டும்" என்றார்.
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் சுப்ரியா சுலே மாநாட்டில் பாரதியாரின் செந்தமிழ் நாடெனும் போதினிலே என்ற பாடலைப் பாடி பேசுகையில், "ஜாதி மத வேறுபாடுகள் இன்றி மொழி மீது பற்றோடு தமிழ்நாடு உள்ளதை பார்த்து பெருமையாக இருக்கிறது. பெரியாரின் சுயமரியாதை மாநாட்டின் வழியில் இந்த மாநாடு நடைபெறுகிறது. சமூக நீதியில் தமிழகம் நீண்ட பாரம்பரியம் கொண்டது. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும் சக்திகளை எதிர்த்து தமிழகம் போராடி வருகிறது. நாடாளுமன்றத்தில் கனிமொழி பேச எழுந்தாலே பாஜகவினர் அலறுகிறார்கள் என்ற அவர், பெரியார், அண்ணாவை புகழ்ந்து பேசினார்.