கே.என்.நேருவை நம்பியவர்கள் என்ன ஆனார்கள்? - 1

ஆரம்பமே அலாரம் அடித்த அன்பிலார்!
கருணாநிதி மேடையில் மீசை நேரு...
கருணாநிதி மேடையில் மீசை நேரு...

பாரம்பரியமான காங்கிரஸ் குடும்பத்தைச் சேர்ந்தவர் லால்குடி அருகேயுள்ள காணக்கிளியநல்லூரைச் சேர்ந்த நாராயணசாமி ரெட்டியார். அதனால் தனது மகனுக்கு நேரு என்று பெயர் வைத்தார். அந்த நேரு, வளர்ந்து பெரியாளாகி சிவாஜி ரசிகர் மன்றத் தலைவரானார். ராஜீவ் காந்தி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது லால்குடிக்கும் வந்தார். அவருக்கு நேரு பெரியமாலையை அணிவித்து சிறப்பான மரியாதை செய்தார். “இவர் பெயர் நேரு” என்று அறிமுகப்படுத்தப்பட்ட போது ”எனது தாத்தாவின் பெயரை வைத்திருக்கிறீர்கள்” என்று மகிழ்ந்தார் ராஜீவ் காந்தி.

காணக்கிளியநல்லூர் நாராயணசாமி மகன் நேருவுக்கு (கே.என்.நேரு) விவசாயம் தான் பிரதானம். லால்குடியில் உரக்கடை வைத்திருந்தார். கூடுதலாக, வட்டித் தொழிலும் உண்டு. அந்தக் காலத்தில், கையில் கத்தரி சிகரெட்டை பிடித்தபடி நேரு கம்பீரமாக புல்லட் ஓட்டிக்கொண்டு வரும் ஸ்டைலே அத்தனை அழகாக இருக்கும் என்பார்கள்.

தொடக்கத்தில், ’புல்லட் நேரு’ என்றுதான் பொதுவெளியில் அறிமுகமானார் நேரு . அதன்பின்னர் மிளகாய் மண்டி வைத்தார். அதிலும் ஏறுமுகம்தான். காசு, பணம் தாராளமாய் புழங்கியதாலும் மக்களின் அறிமுகம் அதிகமானதாலும் நேருவுக்கும் அரசியல் ஆசை துளிர்த்தது. கருணாநிதி மீதிருந்த ஈர்ப்பால் திமுகவில் இணைந்தார். பதவிக்காக காத்திருக்க ஆரம்பித்தார். உள்ளாட்சித் தேர்தல் மூலம் அதற்கான சந்தர்ப்பம் வாய்த்தது.

நீண்ட இடைவெளிக்குப்பிறகு 1986 - ல் நடத்தப்பட்ட உள்ளாட்சித் தேர்தலில் புள்ளம்பாடி யூனியன் சேர்மனாக நேரு தேர்ந்தெடுக்கப்பட்டார். பொதுவாழ்க்கையில் அவர் காலடி எடுத்து வைத்தது இந்தப் பதவியின் மூலமாகத்தான். அதிலிருந்து அடுத்தகட்டத்தை நோக்கி நகர சரியான சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டிருந்தார். எம்ஜிஆர் மறைவு, ஜெ, ஜா அணிகள் பிரிவு, ஆட்சிக் கலைப்பு ஆகியவற்றுக்குப் பிறகு 1989-ம் ஆண்டு சட்டப் பேரவைக்கு தேர்தல் வந்தது.

என்.செல்வராஜ்
என்.செல்வராஜ்

அப்போது தனது சொந்த ஏரியாவான லால்குடி தொகுதியை குறிவைத்து நேரு களமிறங்கினார். அப்போது திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட செயலாளராக இருந்தவர் என்.செல்வராஜ். திமுக மூத்த முன்னோடியான அன்பில் தர்மலிங்கமும் அப்போது இருந்தார். இவர்கள் இருவரும் சென்னை சென்றால் எழும்பூர் ரயில்வே ஸ்டேஷன் எதிரில் உள்ள டூரிஸ்ட் ஹோம் லாட்ஜில் தான் தங்குவார்கள். பல நேரங்களில் இவர்களின் அறைக்கு வெளியே காத்துக்கிடப்பார் நேரு. அறையைவிட்டு அவர்கள் வெளியே வரும்போதெல்லாம் தனது பெரிய மீசையுடன் பவ்யமாக குனிந்து கும்பிடு போடுவார்.

ஒருகட்டத்தில் நேருவின் பவ்யம் செல்வராஜுக்கு ரொம்பவே பிடித்துவிட்டது. அதனால், 1989-ல் லால்குடி தொகுதிக்கு சீட் கேட்டு விண்ணப்பித்திருந்த நேருவுக்கே தலைமையிடம் பரிந்துரை செய்தார். அப்போது உடனிருந்த அன்பில் தர்மலிங்கம், ‘’வேண்டாம்யா... ஆளப்பார்த்தா சரியாத் தெரியல, உனக்கும் சிக்கலாகிடும், கட்சியையும் கபளீகரம் செஞ்சுடுவான் போல தெரியுது” என்று எச்சரித்ததாகச் சொல்வார்கள். ஆனால், தலைவர் கருணாநிதியிடம் தனக்கு இருந்த நெருக்கம் காரணமாக இதையெல்லாம் செல்வராஜ் பெரிதாக எடுத்துக்கொள்ளவிலை. நேருவுக்கே சீட்டை வாங்கிக் கொடுத்தார். நேரு வெற்றியும் பெற்றார்.

கருணாநிதியுடன் அன்பில் தர்மலிங்கம்
கருணாநிதியுடன் அன்பில் தர்மலிங்கம்

அன்பிலார் சொன்னது போலவே அதிலிருந்தே செல்வராஜுக்கு அரசியல் அஸ்தமனம் தொடங்கிவிட்டது. அந்தத் தேர்தலில் முசிறி தொகுதியில் வெறும் 1,500 வாக்குகள் வித்தியாசத்தில் செல்வராஜ் தோற்றுப் போனார். அதனால் யாருக்கு அமைச்சர் பதவி கொடுக்கலாம் என்று தலைமை கேட்டபோது யாரை சிபாரிசு செய்வது என்று குழப்பத்தில் இருந்தார் செல்வராஜ். அந்த குழப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட நேரு, திருச்சி மாவட்ட அவைத்தலைவராக இருந்த தனது சமூகத்தைச் சேர்ந்த அரு.ஆதிமூலம் ரெட்டியாரை பிடித்தார். தனக்கு அமைச்சர் பதவிக்கு சிபாரிசு செய்யுமாறு வேண்டினார். இருவரும் கிளம்பி நேராக புதுச்சேரிக்குச் சென்றனர். அங்கு செல்வாக்கோடும், கருணாநிதியிடம் நெருக்கமாகவும் இருந்த முன்னாள் முதல்வர் எம். டி.ஆர்.ராமச்சந்திர ரெட்டியாரை சந்தித்து சாதிய பாசத்தை பொழிந்தனர். அவரும் “நம்ம ஆளுல ஒருத்தன் அமைச்சரானா நமக்குப் பெருமைதானே” என்ற நினைப்போடு அவர்களை கருணாநிதியிடம் அழைத்துப்போனார்.

அவரது சிபாரிசின்பேரில் நேருவை அமைச்சராக்க சம்மதித்தார் கருணாநிதி. அதிமுக ஆட்சியின்போது பெரியமீசை வைத்திருந்த கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனைப் போல திமுக ஆட்சியிலும் ஒரு பெரிய மீசை இருக்கட்டுமே என்று நினைத்தார் கருணாநிதி. மாவட்ட செயலாளர் செல்வராஜிடம் நேருவுக்கு அமைச்சர் பதவி கொடுப்பது குறித்து கருணாநிதி பேசினார். நாம் பார்த்து சீட் வாங்கிக் கொடுத்தவர்தானே, நம்மை மீறி என்ன செய்துவிடுவார் என்ற நினைப்பில் ஓகே சொன்னார் செல்வராஜ். மின்சாரம், பால்வளம், செய்தித்துறை, தொழிலாளர் நலம் ஆகியதுறைகளுக்கு அமைச்சரானார் நேரு.

அன்றிலிருந்தே மாறிப்போனது நேருவின் அணுகுமுறை. ‘’நான் மாவட்டத்துக்கு அமைச்சர், அவர் வெறும் மாவட்டச்செயலாளர் மட்டும் தான்” என்று கட்சிக்காரர்களிடம் எடுத்ததுமே கெத்து காண்பித்தார் நேரு. கட்சிக் கூட்டங்களில் 11 மணிக்கு கூட்டம் ஆரம்பம் என்றால் 10.50-க்கு ஆஜராகி விடுவார் செல்வராஜ். ஆனால் 12 மணி தாண்டியபிறகுதான் பந்தாவாக வருவார் நேரு. மாவட்டச் செயலாளரான செல்வராஜை, நேரு தொடர்ந்து புறக்கணிக்கவும், அவமானப்படுத்தவும் ஆரம்பித்தார்.

அமைச்சராக வலம் வந்தாலும், கட்சியில் மாவட்டச் செயலாளருக்கு உள்ள அதிகாரம் நேருவை யோசிக்க வைத்தது. எப்படியாவது திருச்சி மாவட்டச் செயலாளராக ஆகிவிடவேண்டும் என்று மனதுக்குள் முடிவு செய்தார். ராஜீவ் காந்தி கொலைக்குப் பிறகு திமுக ஆட்சி கலைக்கப்பட்டு 1991-ல் மீண்டும் தேர்தல் வந்தது. மீண்டும் லால்குடி தொகுதியில் போட்டியிட்ட நேரு தோல்வியுற்றார். தேர்தலில் தோற்றாலும் அரசியலில் அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேறும் காலம் அப்போது அவருக்கு கனிந்தது.

1994-ல், வைகோ திமுகவிலிருந்து பிரிந்து சென்று மதிமுகவை உருவாக்கினார். அப்போது அவருடன் சென்ற ஒன்பது மாவட்டச் செயலாளர்களில் திருச்சி செல்வராஜும் ஒருவர். அதனால் திருச்சிக்கு யாரை மாவட்டச் செயலாளராக்கலாம் என்று தலைமை ஆராய்ந்தது. செல்வராஜுடன் மலர்மன்னன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் மதிமுகவுக்குப் போய்விட்டனர். அன்பிலாரின் வாரிசுகள் இளையவர்களாக இருந்தனர். அதனால் புதியவரும் இளைஞருமான நேருவுக்கு மாவட்ட பொறுப்பாளர் பதவி கிடைத்தது.

தான் ஆசைப்பட்ட பதவி தன்னைத்தேடி வந்ததில் மகிழ்ச்சியடைந்த நேரு, அதனை கெட்டியாக பிடித்துக் கொண்டார். திமுகவில் அதிகார மையங்களை அடையாளம் தெரிந்துகொண்ட நேரு, அவர்களுக்கு தேவையானதை தேவையான நேரத்தில் பார்த்துப் பார்த்துச் செய்துகொடுத்து கட்சிக்குள் தனது ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்திக் கொண்டார். அப்படியே வளர்ந்து இன்று கட்சியின் முதன்மைச் செயலாளராக உயர்ந்திருக்கிறார்.

இன்றைக்கு திமுகவில் ஆலமரமாக வளர்ந்து நிற்கிறார் நேரு. ஆனால், அவரது வளர்ச்சிக்கு விழுதாக இருந்தவர்களும், அவரை நம்பியவர்களும், அவருக்கு தோள் கொடுத்தவர்களும் அப்படி ஆகமுடியவில்லை; அவர்களை வளரவும் விடவில்லை நேரு. ஆலமரம் தனக்குக் கீழே புல், பூண்டைக்கூட வளரவிடாது என்பார்கள். அதுபோல திருச்சி திமுகவில் நேருவுக்கு முன்னால் கோலோச்சிய பலரும் விலாசம் தொலைக்கப்பட்டார்கள்.

அப்படி தங்களது விலாசம் தொலைத்தவர்களை இனி வரும் வாரங்களில் விலாவாரியாக பார்க்கலாம். நேருவை நம்பி சீட் வாங்கிக்கொடுத்த முன்னாள் அமைச்சர் என்.செல்வராஜ் என்ன ஆனார் என்பது குறித்து அடுத்தவாரம் அலசுவோம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in