
இந்த ஆண்டுக்கான சட்டப்பேரவை முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. ஆளுநர் உரையாற்றியதும் திமுக கூட்டணிக் கட்சியினர் ஆளுநருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இதையடுத்து அவர்கள் வெளிநடப்பு செய்தனர். இதன்பின் ஆளுநர் உரையாற்றினார். அதன் சிறப்பு அம்சங்கள் வருமாறு:
செஸ் ஒலிம்பியாட் போட்டியை தமிழக அரசு வெற்றிகரமாக நடத்தி முடித்து உள்ளது. மாமல்லபுரம் அருகே துணைநகரம் உருவாக்கப்படும். பெரியார் நினைவு சமத்துவபுரம் திட்டங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். பரந்தூர் விமான நிலையம் அமைவது தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும். நீட் தேர்வு மாநில உரிமையை பறிக்கும் வகையிலும் கிராமப்புற மாணவர்களுக்கு எதிராகவும் உள்ளது. நீட் விலக்கு சட்டம் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு நிலுவையில் உள்ளது. 500 மின்சார பேருந்துகள் வாங்கப்படும். வளர்ந்த நாடுகளைப் போல தமிழகத்திலும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.
தற்போதுள்ள சென்னை பெருநகர் ஐந்து மடங்கு விரிவாக்கம் செய்யப்படும். 5904 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் சென்னை பெருநகர விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. 2263 சாலை திட்டங்களுக்கு 5582 கோடியை ஒதுக்கி பணிகள் நடைபெற்று வருகின்றன.