மம்தா பானர்ஜி அரசுக்கு இறுகும் பிடி... மேற்கு வங்க அமைச்சரை கைது செய்தது அமலாக்கத்துறை!

பார்த்தா சாட்டர்ஜி
பார்த்தா சாட்டர்ஜி

எஸ்எஸ்சி தேர்வு முறைகேடு வழக்கில் மேற்குவங்க வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் சாட்டர்ஜியின் உதவியாளர் ஒருவரின் வீட்டில் இருந்து 20 கோடி ரூபாயை பறிமுதல் செய்துள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

ஆசிரியர்கள் பணி நியமன முறைகேடு தொடர்பாக மேற்கு வங்க அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜியின் வீடு மற்றும் அவரது உதவியாளர் அர்பிதா முகர்ஜியின் வீட்டில் நேற்று அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அவரின் வீட்டில் 20 கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்த பணம் எஸ்எஸ்சி ஊழலின் வருமானமாக இருக்கும் என சந்தேகிக்கப்படுகிறது. அர்பிதா முகர்ஜியின் வீட்டு வளாகத்தில் இருந்து 20 க்கும் மேற்பட்ட மொபைல் போன்கள் மீட்கப்பட்டுள்ளன. அவற்றின் நோக்கம் மற்றும் பயன்பாடு என்னவென்று கண்டறியப்பட்டு வருகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி தவிர கல்வித்துறை இணை அமைச்சர் பரேஷ் ஆதிகாரி, எம்எல்ஏ மாணிக் பட்டாச்சார்யா மற்றும் பலரது வீடுகளிலும் அமலாக்கத்துறை நேற்று சோதனை நடத்தியது.

மேற்கு வங்க பள்ளி சேவை ஆணையத்தால் (WBSSC) நடத்தப்படும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சட்டவிரோத நியமனங்கள் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நியமனங்கள் நடந்த​​போது பார்த்தா சாட்டர்ஜி கல்வி அமைச்சராக இருந்தார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி , இந்த ரெய்டுகள் மத்திய பாஜக அரசு தனது அரசியல் எதிரிகளை துன்புறுத்த செய்யும் தந்திரம் என்று கூறியுள்ளது. "அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கை திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களை துன்புறுத்துவதற்கும், மிரட்டுவதற்கும் ஒரு முயற்சியே தவிர வேறில்லை" என்று மேற்கு வங்க போக்குவரத்து அமைச்சர் ஃபிர்ஹாத் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in