பல்கலை., துணைவேந்தரை மிரட்டிய மாணவர்கள்: மேற்கு வங்கத்தில் நடந்தது என்ன?

பல்கலை., துணைவேந்தரை மிரட்டிய மாணவர்கள்: மேற்கு வங்கத்தில் நடந்தது என்ன?
ஆலியா பல்கலைக்கழகம்

மேற்கு வங்கத் தலைநகர் கொல்கத்தாவின் நியூடவுன் பகுதியில் உள்ள ஆலியா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரைச் சூழந்துகொண்டு மாணவர் தலைவர்கள் மிரட்டிய சம்பவம் அம்மாநிலத்தில் மேலும் ஒரு அரசியல் புயலைக் கிளப்பியிருக்கிறது. இந்தச் சம்பவம் காணொலியாக வெளிவந்ததையடுத்து ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் பெரும் விவாதம் வெடித்திருக்கிறது.

துணைவேந்தருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மாணவர் கியாசுதீன் மொண்டல் தலைவர் திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் என பாஜக குற்றம்சாட்டியிருக்கிறது. இந்தக் காணொலியைச் சமூகவலைதளங்களில் பகிர்ந்திருக்கும் மேற்கு வங்க ஆளுநர் ஜக்தீப் தன்கர், இதுதொடர்பாக விளக்கமளிக்குமாறு தலைமைச் செயலாளரிடம் விளக்கம் கேட்டிருக்கிறார்.

என்ன பிரச்சினை?

கடந்த வெள்ளிக்கிழமை (ஏப்.1) ஆலியா பல்கலைக்கழகத் துணைவேந்தர் முகமது அலியின் அலுவலக அறைக்குள் நுழைந்த மாணவர்கள், முனைவர் பட்ட ஆய்வுக்கான மாணவர் சேர்க்கைப் பட்டியலைத் தங்களுக்குச் சாதகமாக மாற்றாவிட்டால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என அவரை மிரட்டியதாகச் சொல்லப்படுகிறது. அவர்கள் பேசுவதைக் கேட்டபடி சலனமில்லாமல் அவர் அமர்ந்திருப்பதும், அருகில் இருக்கும் பாதுகாப்பு ஊழியர்கள் செய்வதறியாமல் திகைத்து நிற்பதும் பதிவாகியிருக்கிறது.

பல மணி நேரம் மாணவர்கள் தன்னை மிரட்டியதாகவும், உதவி கோரி போலீஸாரை அழைத்த பின்னரும் அவர்கள் வரவில்லை என்றும் துணைவேந்தர் முகமது அலி புகார் தெரிவித்திருக்கிறார். எனினும், போலீஸார் இதை மறுத்திருக்கின்றனர்.

“வங்க மண்ணின் மகள் நடத்தும் ஆட்சியில் இப்படியான சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. இதுதான் இன்றைக்கு மேற்கு வங்கத்தின் கலாச்சாரம்” என்று எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி கூறியிருக்கிறார். இந்தச் சம்பவத்துக்கு மார்க்சிஸ்ட் கட்சியும் கண்டனம் தெரிவித்திருக்கிறது.

இந்தச் சூழலில், கியாசுதீன் மொண்டல் சில ஆண்டுகளுக்கு முன்பே திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மாணவர் பிரிவிலிருந்து நீக்கப்பட்டுவிட்டார் எனக் கூறியிருக்கிறார் அக்கட்சியின் மாநிலத் தலைவர் திரினாகூர் பட்டாச்சார்யா. இதுபோன்ற சம்பவங்களைக் கண்டிப்பதாகவும் அக்கட்சியினர் தெரிவித்திருக்கின்றனர்.

Related Stories

No stories found.