நாங்கள் யாரையும் கொக்கி போட்டு இழுக்கவில்லை: நடிகை குஷ்பு கொந்தளிக்க காரணம் என்ன?

குஷ்பு
குஷ்பு

பிற கட்சியில் இருப்பவர்கள் பாஜவுக்கு தானாகத்தான் வருகிறார்கள். நாங்கள் ஒன்றும் கொக்கிபோட்டு அவர்களை இழுப்பது இல்லை என்று பாஜக தேசிய செயற்குழு சிறப்பு அழைப்பாளர் நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார். 

குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேசம்  சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் குஜராத்தில் பாஜகவும்,  இமாச்சலப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியும் ஆட்சியைப் பிடித்துள்ளன. இந்த நிலையில் இது பற்றி நடிகை குஷ்பு தனது கருத்தைத் தெரிவித்துள்ளார்.

அதில், "தேர்தல் அறிவிக்கப்பட்டபோது குஜராத்தில் பாஜகவுக்கு வெற்றி கிடைக்காது என பல பேர் கூறினார்கள். ஆனால், குஜராத்தில் இதுபோன்ற மிகப்பெரிய வெற்றியை யாரும் பெறவில்லை. தொடர்ந்து 27 ஆண்டுகளாக குஜராத்தில் பாஜக ஆட்சி செய்து வரும் நிலையில் தற்போது மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. மேலும் முந்தைய பாஜகவின் சாதனையைத் தாண்டி தற்போது அதிக தொகுதிகளில் வெற்றியைப் பதிவு செய்துள்ளோம்.

பிரதமர் மோடியின் அலை இன்னும் இருப்பது குஜராத் தேர்தல் மூலம் இன்னும் தெளிவாகி உள்ளது.

இமாச்சலப் பிரதேசத்தை பொறுத்தமட்டில் நாங்கள் அந்த தோல்வியை ஏற்றுக்கொள்ளவில்லை. இமாச்சலப் பிரதேசத்திலும் வெற்றி என்றே நாங்கள் எடுத்து கொள்ள உள்ளோம். ஏனென்றால் அந்த மாநிலத்துக்கு பாஜவுக்கான ஓட்டு என்பது மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது. தேர்தலில் வெற்றி தோல்வி என்பது சாதாரணமான விஷயம் தான். இருப்பினும் அதில் முந்தைய தேர்தலை விட எந்த அளவுக்கு முன்னேறி உள்ளோம் என்பதை நாம் கவனிக்க வேண்டும்.

பிற கட்சியில் இருப்பவர்கள் பாஜவுக்கு தானாகத்தான் வருகிறார்கள். நாங்கள் ஒன்றும் கொக்கிபோட்டு அவர்களை இழுப்பது இல்லை. தேசத்துக்காக பிரதமர் மோடி உழைப்பதை பார்த்து அவர்கள் பாஜகவில் வந்து இணைகின்றனர். குஜராத் தேர்தலில் மல்லிகார்ஜூன கார்கே பிரதமர் மோடியை ராவணன் என விமர்சனம் செய்தார். அதன் விளைவாக டெல்லி மாநகராட்சி தேர்தலிலும்,  குஜராத் தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி மிகவும் மோசமாக தோல்வியடைந்துள்ளது.

ராகுல் காந்தி இந்தியா முழுவதும் சுற்றி வருகிறார். ஆனால், அவரது யாத்திரை தேர்தல் முடிவில் எதிரொலிக்கவில்லை. காங்கிரஸ் கட்சியினருக்கு தலைமை மீது நம்பிக்கை இல்லை. இதனால் காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தி இமாச்சலப் பிரதேசத்தில் வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்எல்ஏக்களை பிற மாநிலங்களுக்கு அழைத்து செல்ல உள்ளார்.  சொந்த  கட்சியினர் மீது  அவர்களுக்கு பயம் உள்ளது"  என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in