காமராஜர் பெயரில் தனிக்கட்சி தொடங்குவோம்: காங்கிரஸை எச்சரிக்கும் ஆர்.எஸ்.ராஜன்!

ஆர்.எஸ்.ராஜன்
ஆர்.எஸ்.ராஜன் காமராஜர் பெயரில் தனிக்கட்சி தொடங்குவோம்: காங்கிரஸை எச்சரிக்கும் ஆர்.எஸ்.ராஜன்!

காங்கிரஸ் கட்சியில் எப்போதும் அதிரடிக்கு பெயர் பெற்றவர் ஆர்.எஸ்.ராஜன். காங்கிரஸ் கட்சியில் விவசாயப் பிரிவு மாநிலச் செயலாளராக இருக்கும் ஆர்.எஸ்.ராஜன் காங்கிரஸ் கட்சி காமராஜரைப் புறக்கணித்தால், காமராஜர் தொண்டர்கள் சேர்ந்து காங்கிரஸ் கட்சியைப் புறக்கணிப்போம். தமிழகத்தில் தனிக்கட்சி தொடங்குவோம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து ஆர்.எஸ்.ராஜன் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், “தமிழகத்தில் திராவிடக் கட்சிகள் ஆட்சிக்கு வந்து 55 ஆண்டுகளைக் கடந்துவிட்டது. இன்னும் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி வடமாநிலங்களோடு ஒப்பிடுகையில் துடிப்பாக இருக்க காமராஜரே காரணம். எளியக் குடும்பப் பின்னணியில் இருந்து வந்து, பலலட்சம் பேருக்குக் கல்வி வெளிச்சம் பாய்ச்சிய படிக்காத மேதை அவர். காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியத் தலைவராக இருந்து இரு பிரதமர்களை அடையாளம் காட்டிய கிங் மேக்கர். 

அன்னை இந்திராவை முன்னிலைப்படுத்தி இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிக்கு முகவரி கொடுத்ததே காமராஜர்தான். திறந்த மனதோடு சொல்வதாக இருந்தால், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு கொஞ்சமேனும் மக்கள் மத்தியில் மரியாதை இருக்கிறது என்றால் அதற்கு ஒரே காரணம் காமராஜர் தான். அவரால் படித்து, வாழ்வில் உயர்ந்தோர் பலரே அதற்கு சாட்சி. தமிழக முதல்வராகவும், காங்கிரஸின் அகில இந்தியத் தலைவராகவும் அவர் பணிகளை இந்த மடலில் நான் எழுதி அனுப்பினால் கடிதத்தின் எடை உங்கள் எடையைக் கடக்கலாம். அத்தனை பெரிய மாமனிதரின் புகைப்படத்தைத் தவிர்த்துவிட்டு காங்கிரஸ் தேசிய மாநாட்டிற்கு விளம்பரம் கொடுக்கப்பட்டுள்ளது.

காமராஜர் ஆட்சி அமைப்போம் என்று சொல்லியே தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி பரப்புரை செய்து, உயிர்பிடித்து நிற்கிறது. ஆனால், காமராஜர் புகழை தமிழக மக்களைவிட காங்கிரஸ் அகில இந்தியத் தலைமைக்கு போதிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருப்பது வேதனைக்குரிய விஷயம். இனியும், அகில இந்தியத் தலைமை காமராஜர் பெயரை இருட்டடிப்பு செய்ய முயலுமே ஆனால், தமிழகம் முழுவதும் இருக்கும் காமராஜர் தொண்டர்களைத் திரட்டி காங்கிரஸை விட்டு வெளியேறி, காமராஜர் பெயரில் தனிக்கட்சித் தொடங்கவும் தயங்கமாட்டோம் ”என்று கடிதம் அனுப்பியுள்ளார். 

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in