தலைவர் பதவியை ஏற்க வலியுறுத்தி ராகுலிடம் கெஞ்சுவோம்: காங். மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே திட்டவட்டம்

தலைவர் பதவியை ஏற்க வலியுறுத்தி ராகுலிடம்  கெஞ்சுவோம்:  காங். மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே  திட்டவட்டம்

பாஜகவை எதிர்த்து தேசத்தை ஒருமைப்படுத்துவதற்காக காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பதவியை ஏற்க வேண்டும் என்று ராகுல் காந்தியிடம் நிர்பந்திப்போம், கெஞ்சுவோம், அழுத்தம் தருவோம் என்று மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறினார்.

காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் செப்டம்பர் 20-ம் தேதிக்குள் நடைபெற வேண்டிய நிலையில், யார் தலைவர் ஆவார் என்ற கேள்வியால், இந்த தேர்தல் அக்டோபர் மாதத்திற்கு தள்ளிப்போகும் சூழல் உருவாகியுள்ளது.

காங்கிரஸ் தலைவர் பதவிக்கு மீண்டும் ராகுல் காந்தி திரும்ப வேண்டும் என்று கட்சிக்குள் தொடர்ந்து கோரிக்கை எழுந்து வருகிறது. இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும். முன்னாள் மத்திய அமைச்சர், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை மீண்டும் ராகுல் காந்தி ஏற்க வேண்டும் என்று அழுத்தம் கொடுப்போம் என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், " காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பதவியை ஏற்பவர்களுக்கு காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை, மேற்கு வங்கம் முதல் குஜராத் வரை ஆதரவு இருக்க வேண்டும். அவர் நன்கு பரிச்சியமானவராக இருக்க வேண்டும். ஒரு பான் இந்தியா முகமாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட அந்தஸ்துடன் காங்கிரஸ் கட்சியில் ராகுல் காந்தியைத் தவிர வேறு யாரும் இல்லை. அப்படி யாரேனும் இருந்தால் தெரிவிக்கலாம். நாங்கள் பரிசீலிக்கிறோம்.

ராகுல் காந்தி மீண்டும் காங்கிரஸ் தலைமையை ஏற்கத் தயங்குவதாக செய்திகள் வருகின்றன. நாங்கள் அவருக்கு அழுத்தம் கொடுப்போம். கட்சி நலனுக்காக, தேச நலனுக்காக, ஆர்எஸ்எஸ், பாஜகவை எதிர்த்து தேசத்தை ஒருமைப்படுத்துவதற்காக தலைமைப் பதவியை ஏற்க வேண்டும் என்று அவரை நிர்பந்திப்போம், கெஞ்சுவோம், அழுத்தம் தருவோம். நாங்கள் அவருடன் நிற்கிறோம். அவர் தலைமைப் பொறுப்பை ஏற்க தொடர்ந்து ஊக்குவிப்போம்" என்று கூறினார்.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் காணொலி காட்சி மூலம் நாளை நடைபெறுகிறது. இதில் காங்கிரஸ் கட்சி தேர்தல் தொடர்பாக ஆலோசிக்கப்படுகிறது. இதில், ராகுல் காந்தியை தலைமைப் பொறுப்பேற்க வலியுறுத்த சில தலைவர்கள் முடிவு செய்துள்ளனர். காங்கிரஸ் கட்சியில் இருந்து குலாம் நபி ஆசாத் விலகியுள்ள நிலையில், அடுத்ததாக ஆனந்த் சர்மாவும் விலகலாம் எனக் கூறப்படுகிறது. இவை குறித்தும் ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in