பொதுச் செயலாளர் தேர்தலை நடத்த மாட்டோம்: உச்சநீதிமன்றத்தில் ஈபிஎஸ் அளித்த உறுதிமொழி

பொதுச் செயலாளர் தேர்தலை நடத்த மாட்டோம்: உச்சநீதிமன்றத்தில் ஈபிஎஸ் அளித்த உறுதிமொழி

வழக்கு நிலுவையில் இருப்பதால் அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலை நடத்த மாட்டோம் என்று உச்சநீதிமன்றம் ஈபிஎஸ் தரப்பு உறுதிமொழி அளித்துள்ளது.

கடந்த ஜூலை 11-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என அறிவிக்கக் கோரி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி ஜெயச்சந்திரன், பொதுக்குழு கூட்டம் செல்லாது என்று கடந்த ஆகஸ்ட் மாதம் தீர்ப்பளித்தார். இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி, உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் துரைசாமி, சுந்தரமோகன் அமர்வு, பொதுக்குழுக் கூட்டம் செல்லும் என்று தீர்ப்பு அளித்து, தனி நீதிபதி ஜெயச்சந்திரனின் உத்தரவை ரத்து செய்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, கிருஷ்ணா முராரி அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஓபிஎஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கில் விரிவான தகவல்களை மேற்கோள் காட்டினார். இதையடுத்து நீதிபதிகள், எதிர்மனுதாரர்கள் அனைவருக்கும் நாங்கள் நோட்டீஸ் பிறப்பிக்கிறோம். அதன் பிறகு விரிவான விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்தனர். அப்போது ஓபிஎஸ் சிறப்பு வழக்கறிஞர், அப்படியென்றால் அதிமுகவில் பொதுச் செயலாளர் தேர்தல் நடத்துவது சம்பந்தமாக எந்த ஒரு முடிவும் எடுக்கக் கூடாது என்றும் தேர்தல் நடத்த தடை விதிக்க வேண்டும் என்றும் வாதிட்டார். இதையடுத்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பதால் தற்போது பொதுச் செயலாளர் தேர்தல் நடத்த நாங்கள் விரும்பவில்லை என்று தெரிவித்தார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், அடுத்தகட்ட விசாரணையை நவம்பர் 21-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், "நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு வந்த பிறகு தேர்தல் அறிவிக்கலாம் என்றுதான் நாங்கள் இதுவரை தேர்தல் தேதியை அறிவிக்கவில்லை" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in