‘என்எல்சி நிறுவனத்திற்கு ஒரு கைப்பிடி மண்கூட தரமாட்டோம்’ - அன்புமணி ஆவேசம்

‘என்எல்சி நிறுவனத்திற்கு ஒரு கைப்பிடி மண்கூட தரமாட்டோம்’ -  அன்புமணி ஆவேசம்
மக்களிடம் குறை கேட்கும் அன்புமணி

நெய்வேலி என்எல்சி நிறுவனத்தின் சுரங்கத்தை விரிவாக்கம் செய்ய அந்நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது. மூன்றாவது சுரங்கம் அமைக்க முதற் கட்ட பணிகளாக 26 கிராமங்களில் நிலம் எடுக்கும் பணிகள் தொடங்கியிருக்கின்றன. இந்நிலையில் இந்தப் பணிகளைத் தடுக்க வலியுறுத்தி, 26 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளிடம் பாமக சார்பில் கருத்து கேட்பு கூட்டம் கம்மாபுரம் அடுத்த சிறுவரப்பூர் கிராமத்தில் இன்று நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், பாமக மாநில இளைஞரணித் தலைவர் அன்புமணி கலந்துகொண்டு மக்கள் குறைகளைக் கேட்டறிந்தார்.

கூட்டத்தில் பேசிய அன்புமணி, “கம்மாபுரம், புவனகிரி ஒன்றியத்தைச் சேர்ந்த ஊராட்சிகளில் முன்றாம் சுரங்கம் அமைக்கும் திட்டம் மிக மோசமான திட்டம். இத்திட்டத்திற்காகக் கையகப்படுத்தப்பட்ட உள்ள வயல்களில் காய்கறிகள், பூக்கள், நெல், கரும்பு உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் பயிரிடப்படுகின்றன. இதன் முலம் ஏக்கருக்கு 10 லட்சம் ருபாய் வரை ஆண்டிற்கு வருவாய் ஈட்டும் விவசாயிகளின் முழு வாழ்வாதாரம் பாதிக்கப்படும். மேலும், கடந்த காலங்களில் என்எல்சி நிறுவனத்தின் வளர்ச்சிக்காகத் தங்களின் நிலம், வீடுகளை வழங்கிய விவசாயிகளுக்கு, இந்நிறுவனம் வேலை வழங்கவில்லை‌. உரிய இழப்பீடும் வழங்கவில்லை.

மேலும், அவர்களை வனப்பகுதியில் அகதிகள் போல் குடியமர்த்தி வனவாசத்தை ஏற்படுத்தியது. தற்போது 300 பேர் வேலைக்கு ஆட்கள் எடுக்கப்பட்டது. அதில், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் 15 பேர் மட்டுமே. மீதமுள்ளவர்கள் முழுவதும் வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்” என்றார்.

மேலும், “என்எல்சி நிறுவனம் ஆண்டுக்கு 11,500 கோடி ரூபாய் லாபம் ஈட்டுகிறது. ஆனால் இந்த நிறுவனத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்ன செய்தார்கள்? எதுவும் செய்யவில்லை. வட மாநிலத்தவர் வாழ, அவர்களுக்கு வேலை வழங்கியுள்ளனர். இப்படிப்பட்ட மோசமான என்எல்சி நிறுவனத்திற்கு, ஒரு கைப்பிடி மண்கூட தரமாட்டோம்.

மேலும் பாதிக்கப்பட்டவர்களை ஒன்றிணைத்து கடுமையான போராட்டத்தை என் தலைமையில் விரைவில் நடத்துவேன்" என அன்புமணி பேசினார்.

கூட்டத்தில், மாநிலத் தலைவர் ஜி.கே.மணி, வன்னியர் சங்கத் தலைவர் அருண்மொழி, மாவட்டத் தலைவர் தேவதாஸ் படையாண்டவர், சிறுவரப்பூர் ஊராட்சி மன்றத் தலைவர் ரெஜினா வீரபத்திரன் மற்றும் 26 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் பங்கேற்றனர்.

Related Stories

No stories found.