
2024 மக்களவைத் தேர்தலில் ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சிகள் இணைந்து போட்டியிடும் என்று பிஹார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்தார்.
ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனை இன்று அவரது இல்லத்தில் சந்தித்த பிறகு பிஹார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் வெளியிட்ட அறிவிப்பில், "நான் இன்று முதல்வர் ஹேமந்த் சோரனை சந்தித்து எதிர்கால சவால்கள் மற்றும் வரவிருக்கும் மக்களவை தேர்தலில் ஒன்றாக போட்டியிடுவது குறித்து விவாதித்தேன். நாங்கள் ஆர்ஜேடி மற்றும் ஜேஎம்எம் கட்சிகள் இணைந்து 2024 மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவோம். ஜார்க்கண்டில் ஆர்ஜேடி கட்சியின் பணிகளைப் பார்க்க வர திட்டமிட்டிருந்தேன். ஆனால் இடையே லாலு பிரசாத்ஜியின் உடல்நிலை மோசமடைந்தது, அவரின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது. அவர் இன்று வீடு திரும்புகிறார். பிஹாரில் பாஜக ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டு மகாகத்பந்தன் அரசு அமைந்தது. இந்த பிரச்சினைகள் காரணமாக ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு செல்ல முடியவில்லை.
இனி அனைத்து நிகழ்ச்சிகளும், வருகைகளும் சரியாக திட்டமிடப்படும். ஜார்க்கண்டில் ஆர்ஜேடியின் புதிய அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. எங்கள் போராட்டம் வகுப்புவாத சக்திகளுக்கு எதிரானது. பீகாரில் 'மகாத்பந்தன்' அரசாங்கத்தை உருவாக்கி, பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்றினோம். இப்பொது ஜார்க்கண்டில் எங்கள் கூட்டணியை வலுப்படுத்த நாங்கள் பணியாற்றி வருகிறோம்" என தெரிவித்தார். ஜார்க்கண்டில் ஜேஎம்எம் தலைமையிலான ஆளும் கூட்டணியில் காங்கிரஸ், ஆர்ஜேடி கட்சிகள் அங்கம் வகிக்கிறது. ஜார்க்கண்டில் ஆர்ஜேடி கட்சிக்கு ஒரு எம்.எல்.ஏ உள்ளார்.