‘பாஜக வெற்றியைக் குறைக்க முடியும் எனக் காட்டியுள்ளோம்’ - அகிலேஷ் ஆறுதல் ட்வீட்!

‘பாஜக வெற்றியைக் குறைக்க முடியும் எனக் காட்டியுள்ளோம்’ - அகிலேஷ் ஆறுதல் ட்வீட்!

உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் கிடைத்த தோல்வி சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவுக்கு ஏமாற்றம் தந்திருந்தாலும், முந்தைய தேர்தலைவிட அதிக இடங்களில் வென்றிருப்பதில் ஓரளவு மகிழ்ச்சியடைந்திருக்கிறார்.

இந்தத் தேர்தலில் மொத்தம் 255 இடங்களில் பாஜக வென்றிருக்கிறது. அதன் கூட்டணிக் கட்சிகளான அப்னா தளம் 12 இடங்களிலும், நிஷாத் கட்சி 6 இடங்களிலும் வென்றிருக்கின்றன. யோகி ஆதித்யநாத் தலைமையிலான ஆட்சி தக்கவைக்கப்பட்டிருப்பதில் பாஜகவுக்குப் பெரும் மகிழ்ச்சி. எனினும், 2017 தேர்தலை ஒப்பிட இந்த வெற்றி குறைவுதான். அந்தத் தேர்தலில், 312 இடங்களில் வென்ற பாஜக, இந்த முறை 57 இடங்களை இழந்திருக்கிறது. எனினும், பாஜகவின் வாக்கு சதவீதம் அதிகரித்திருக்கிறது.

சமாஜ்வாதி கட்சியைப் பொறுத்தவரை, 2017 தேர்தலில் வெறும் 47 இடங்களில்தான் வெற்றி பெற்றிருந்தது. இந்த முறை அக்கட்சிக்கு 111 இடங்கள் கிடைத்திருக்கின்றன.

இந்நிலையில், உத்தர பிரதேச வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து ட்வீட் செய்திருக்கும் அகிலேஷ் யாதவ், “எங்கள் இடங்களை இரண்டரை மடங்கும், வாக்கு சதவீதத்தை ஒன்றரை மடங்கும் உயர்த்திய உத்தர பிரதேச மக்களுக்கு மனமார்ந்த நன்றி! பாஜகவின் இடங்களைக் குறைக்க முடியும் என்பதை நாங்கள் காட்டியுள்ளோம். பாஜகவின் இடங்கள் குறைவது இனி தொடரும். பாதிக்கும் மேலான குழப்பமும் மாயையும் நீங்கிவிட்டன, மீதி சில நாட்களில் நடக்கும். பொதுநலப் போராட்டம் வெல்லும்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Related Stories

No stories found.