'கிணறு போல மரக்கன்றுகளைக் காணோம்!'

வடிவேலு படப்பாணியில் விருதுநகரில் நடைபெற்ற மெகா ஊழல்
டி.கல்லுப்பட்டியிலிருந்து விருதுநகர் செல்லும் சாலையில் மரக்கன்றுகள் இல்லாமல் பொட்டலாய் காட்சி தருகிறது.
டி.கல்லுப்பட்டியிலிருந்து விருதுநகர் செல்லும் சாலையில் மரக்கன்றுகள் இல்லாமல் பொட்டலாய் காட்சி தருகிறது.

விருதுநகர் மாவட்டத்தில் நெடுஞ்சாலைத்துறையில் மரக்கன்றுகளை நட்டு பராமரிப்பதாக கோடிக்கணக்கான ரூபாய் சுருட்டப்பட்ட விவாகரம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

ஒப்பந்தம்
ஒப்பந்தம்

கடந்த 2018- ஆம் ஆண்டு விருதுநகர் மாவட்டத்தில் நெடுஞ்சாலை துறையில் மாநிலச்சாலைகள் மற்றும் மாவட்ட முக்கியச் சாலைகளில் 26,144 மரக்கன்றுகள் நடுவதற்கான திட்டம் ஒப்பந்தமானது. ஒரு மரக்கன்றை நட்டு, கால்நடைகளில் இருந்து பாதுகாக்க வேலி அமைக்க 374 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டது. இதன் மூலம் 97,77,856 ரூபாய்க்கு இந்த ஒப்பந்தம் நடைபெற்றது.

 பாப்பாகுடி பிரிவு ,
பாப்பாகுடி பிரிவு ,

இதன்படி விருதுநகர் மாவட்டத்தில் மாநிலச்சாலை மற்றும் மாவட்ட முக்கிய சாலைகளில் 2018-ஆம் ஆண்டு 26,144 மரக்கன்றுகள் நடப்பட்டதாக பணமும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த மரக்கன்றுகளை பராமரிக்கவும் தனியாக நிதி ஒதுக்கப்பட்டது. ஒரு மரக்கன்றை நீர் ஊற்றி பராமரிக்க 121 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டது. இதன்படி 26,144 மரக்கன்றுகளைப் பராமரிக்க 31,63,424 ஒதுக்கீடு செய்யப்பட்டது. இது 5 ஆண்டு ஒப்பந்தமாகும்.

சாலை, பாலம் உள்ளிட்டவைகளை அமைப்பதில் தமிழகத்தில் முன்னணியில் உள்ள ஒப்பந்ததாரருக்கு இந்த பணிகளின் ஒப்பந்தம் வழங்கப்பட்டன . ஒரு திரைப்படத்தில் "கிணத்தைக் காணோம்" என நடிகர் வடிவேலு புகார் சொல்வதை போல, விருதுநகர் மாவட்டத்தில் நடப்பட்டு, பராமரிக்கப்படுவதாகச் சொல்லும் மரக்கன்றுகளைக் காணவில்லை என விருதுநகர் மாவட்ட மக்கள் புகார் கூறுகின்றனர்.

விருதுநகர் மாவட்டத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டதாக கூறப்பட்ட சாலைகள் பெரும்பாலும் பொட்டல் காடாக காட்சி தருகின்றன. இதில் கொடுமை என்னவென்றால், ஒவ்வொரு வருடமும் இந்த மரக்கன்றுகளைப் பராமரிப்பதற்கு நிதி ஒதுக்கப்படுவது தான்.

இதுகுறித்து நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் விருதுநகர் பராமரிப்பு உதவி கோட்டப் பொறியாளர் முத்துச்சாமியை தொடர்பு கொண்டு கேட்டபோது, ``நான் புதிதாக வந்திருப்பதால், அது குறித்த தகவல் தெரியவில்லை'' என்று முடித்துக் கொண்டார். சாத்தூர் உதவி கோட்டப்பொறியாளர் காளிராஜை தொடர்பு கொண்டபோது, ``இதுகுறித்த பதிலை டிவிஷனில் தான் நீங்கள் கேட்க வேண்டும்'' என்று சுருக்கமாக முடித்துக் கொண்டார்.

எம்.மாரிமுத்து
எம்.மாரிமுத்து

விருதுநகர் மாவட்டத்தில் மரக்கன்றுகள் நடும் திட்டத்தில் நடைபெற்ற ஊழல் குறித்து தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை ஆய்வாளர் சங்க மாநில கௌரவ பொதுச்செயலாளர் எம்.மாரிமுத்துவிடம் கேட்டோம். ``இது கடந்த அதிமுக ஆட்சியில் நடைபெற்ற முறைகேடு என்றாலும், மரக்கன்றுகளைப் பராமரிக்க இந்த ஆட்சியிலும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தொடர்கிறது. இந்த ஊழல் முறைகேடு குறித்து, தமிழக அரசு ஆய்வு செய்ய வேண்டும்.

மரக்கன்றுகள் நடுவது, அவற்றைப் பராமரிக்கும் பணிகளை சாலை, பாலம் அமைக்கும் ஒப்பந்ததாரர்களுக்கு வழங்குவது அறிவார்ந்த செயலாக இருக்காது. துறை சார்ந்த பணியாளர்களைக் கொண்டு இப்பணிகளை மேற்கொள்ளலாம். இதன் மூலம் அரசுக்கு நிதியும் மிச்சமாகும்'' என்று கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in